சேவியரின் 'நில் நிதானி காதலி'
காதலையும், வறுமையையும் எழுதாதவன் கவிஞனாகவே இருக்க முடியாது. அனேகமாக சுய அடையாளம் தெரியாத பதின்ம வயதுகளில் தன்னைத் தனியாக இனம் கண்டுகொள்ள உதவுவதே காதலின் முதல் தாக்கத்தில் பீறிட்டெழும் கவிதைகளிலிருந்துதான். பின்னால் கவிதை வற்றிப் போகலாம்.

ஆனால் மணமான பின்னும் கவிதையும் வற்றாமல் காதலும் வற்றாமல் இருப்பவர்கள் - சேவியரைப் போல - மிகச் சிலரே. வளமான சொற்களும், நறுக்கென்று சொல்லும் கருத்துக்களும் இவரது கவிதைகளின் (பார்க்க: 'தென்றல்' ஜனவரி, 2004) அடையாளம். இந்த மெல்லிய தொகுப்பும் அதற்கு விதிவிலக்கல்ல.

'ஒரு / நெருப்பு நதியாய் / நடந்து செல்கிறாய், / சுடருக்காய் / நான் / மெழுகுக் கால்களோடு காத்திருக்கிறேன்', 'பாசிக் கரையின் / நனையாத / படிக்கட்டுகளில் / அமரும்போதெல்லாம் நீரிலிருந்து / எட்டிப் பார்க்கும் மீன்களாய் / உன் நினைவுகள்' போன்ற வரிகள் சேவியரின் கூர்த்த பார்வைக்கு ஒரு சான்று.

மனிதனும், கவிதையும் இருக்கும்வரை காதல் கவிதைகள் அச்சேறிக்கொண்டுதான் இருக்கும். சேவியரின் முயற்சி பாராட்டத் தக்கது.

நில்... நிதானி... காதலி...
- சேவியர்

ராஜேஸ்வரி புத்தக நிலையம்
4, முத்துக்கிருஷ்ணன் தெரு
தி. நகர்,
சென்னை 600 017.
தொலைபேசி: 2815 2073.

மதுரபாரதி

© TamilOnline.com