கோவிந்தவாடியில் அமர்ந்த குருநாதன்
எல்லா சிவத்தலங்களிலும் மூலவரின் சந்நிதியின் தெற்கில் தக்ஷ¢ணாமூர்த்தி வீற்றிருக்கக் காணலாம். வடமொழியில் தக்ஷ¢ணம் என்றால் தெற்கு. நவ கோள்களில் ஒன்றான 'குரு' என்பதும், வியாழ பகவான் என்பதும், தக்ஷ¢ணாமூர்த்தி என்பதும் ஒன்றே.

மற்றக் கோள்களுக்கில்லாத சில சிறப்புகள் குருவுக்கு உண்டு. கோள்களில் கொற்றவன் குருவாகும் என்பர். கோள்கள் பன்னிரண்டு ராசிகளில் வலம் வருவன. ஆனால், குரு இடம் பெயரும்போது மட்டும் அதனால் ஏற்படவிருக்கும் விளைவுகள் பற்றிச் சிறப்பாகப் பேசப்படும். 'குரு பார்வை கோடி பெறும்' என்பதும் அதன் செல்வாக்கை உணர்த்துவதாகும். குரு பார்வை வந்து விட்டது என்றால் வாழ்க்கையில் எதிர்நோக்கி ஏங்கிக் கொண்டிருப்பவை எல்லாம் கிட்டிவரும் என்ற நம்பிக்கை உண்டு. அறிவுக்கும் புத்திக்கும் குருவின் கடாட்சம் தேவை. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகம் நிகழ்வதும் குரு சிம்மராசிக்கு இடம் பெயரும் மக நட்சத்திரம் கூடிய நாளாகும் என்றால் குருவின் மகத்துவத்தை என்னவென்று சொல்வது!

வழக்கமாக நவகிரகங்களின் வரிசையில் குரு இருப்பார். ஆனால் 'குரு ஸ்தலம்' என்றே சிறப்பித்துப் பேசப்படும் ஆலங்குடியில் மூலவரே குரு பகவான்தான். இது தவிர, குருவுக்காகவே தலம் அமைந்து அங்கு அவரே மூலவராக வீற்றிருக்க, கோவிந்தராஜப் பெருமாள் இவரை வந்து வழிபட்டுச் செல்கின்றார் என்ற பெருமையும் கொண்ட தலம் கோவிந்தவாடி என்னும் திருத்தலம். கோவிந்தன் வழிபட்ட தலம் என்னும் பொருளில் கோவிந்தபாடி என்பதுதான் பிற்காலத்தில் மருவி கோவிந்தவாடி என்றாயிற்று. இதன் சிறப்புக்களை விரிவாக இனிக் காணலாம்.

தமிழகத்தில் காஞ்சீபுரம்-அரக்கோணம் மார்க்கத்தில் 15 கி.மீ. தூரத்திலுள்ளது கோவிந்தவாடி. பொதுவாக தக்ஷ¢ணாமூர்த்தி உருவம் கல்லால மரத்தின்கீழ் அமர்ந்த தோற்றத்தில் இடது காலை மடித்து, நிலத்தில் ஊன்றியிருக்கும் வலதுகாலின் மீது வைத்தபடி கையால் சின்முத்திரை காட்டிய தோற்றத்தில் காணப்படும். தரையில் அவர் காலடியில் சனகாதி முனிவர்கள் அமர்ந்திருக்க இறைவன் மௌன உபதேசம் செய்வதாக ஐதீகம். இதைத்தான்

கல்லாலின் புடை யமர்ந்து நால்வேத ஆறங்கமுதல் கற்ற கேள்வி
வல்லார் நால்வர்க்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை யிருந்தபடி இருந்துகாட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத்தொடக்கை வெல்வாம்

என்ற பாடலில் 'சொல்லாமல் சொன்னவர்' என்பது மௌன உபதேசத்தை விளக்குகின்றது. ஆனால் கோவிந்தவாடியில் கல்லால மரம் கிடையாது. 'பஞ்சாசனம்' என்னும் பீடத்தில் முயலகன் எனும் அரக்கன் முதுகின்மீது காலூன்றி அமர்ந்த கோலத்தில் கீழே சனகாதி முனிவர்கள் அமர்ந்திருக்க மௌன உபதேசம் செய்யும் தக்ஷ¢ணாமூர்த்தியாகக் காட்சி தருகிறார். இக்கோயிலின் தனிச்சிறப்பு இதுவாகும்.

பஞ்சாசனம்: எட்டு சிங்கங்கள், எட்டு நாகப்பாம்புகள், எட்டு துவாரபாலகர்கள், எட்டு யானைகள், அஷ்ட திக்குப்பாலகர்கள் என்ற ஐந்து வகைக் கால்கள் தாங்கி நிற்கும் ஆசனம். இதைக் கூர்ம (ஆமை) வடிவிலான அடித்தளத்தின் மீது அமைத்திருக்கிறார்கள்.

கோவிந்தவாடியில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் விசாக தினத்தில் குருபூஜை நடைபெறுகிறது. இப்பூஜை நடைபெறுவதன் அடிப்படை சுவையானது. இவ்வூரில் வாழ்ந்து வந்த தாண்டவராயர் என்பவர் தக்ஷ¢ணாமூர்த்தியிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். இவரது பக்தியில் மகிழ்ந்துபோன இறைவனும் ஒரு நாள் இவருக்குக் காட்சி அளித்து, திருநீற்றையும் அளித்து ஆசி வழங்கினார். இதனால் மகிழ்வுற்ற தாண்டவராயரும் தக்ஷ¢ணாமூர்த்தி மடம் ஒன்றை நிறுவி ஆண்டு தோறும் சித்திரை மாதம் விசாக நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் விபூதிக் காவடி எடுத்து குருபூஜை நடத்தி வரலானார். இவரது குடும்பத்தினர் இன்றும் இவ்விழாவைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

அளவில் கோயில் மிகச் சிறியதுதான் என்றாலும் கீர்த்தி மிகப் பெரியது. சோழர்காலக் கல்வெட்டின் அழகு காணப்படும் இத் திருக்கோயிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு ஆகஸ்டு மாதம் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

முனைவர் அலர்மேலு ரிஷி

© TamilOnline.com