மணற்பொம்மையைக் காத்த பத்தினி
[சிலப்பதிகாரத்தின் வஞ்சினமாலை என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பா¡த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்கள் எழுவரைப் பற்றிச் சொல்வதை காண்கிறோம். முதலானவளாகத் தன் திருமண நோக்கத்தின் அவமதிப்பைப் போக்க வன்னிமரம் முதலான திருமணச் சான்றுகளை வரவழைத்த பத்தினியைப் பற்றிச் சொன்னதைக் கண்டோம்; இங்கே இரண்டாவது பத்தினியைப் பற்றிய பெருமையைக் காண்போம்.]
கண்ணகி அடுத்துப் பூம்புகார் நகரில் தோன்றிய இன்னொரு பத்தினியைப் பற்றிய நிகழ்ச்சியைக் கூறுகிறாள்:
....பொன்னிக் கரையின் மணற்பாவை நின்கணவன் மென்று உரைசெய்த மாதரொடும் போகாள், திரைவந்து அழியாது சூழ்போக ஆங்குஉந்தி நின்ற வரிஆலர் அகலல்குல் மாதர்... (சிலப்பதிகாரம்: வஞ்சினமாலை: 6-10) [பொன்னி = காவிரியாறு; திரை = அலை; உந்தி = தீவு; வரி = தோலின் வரி; ஆர் = பொருந்து; அல்குல் = இடை; மாதர் = பெண்]
"இந்த மணற்பாவைதான் உன் கணவனடி!"
பூம்புகார் நகரம் பொன்னி என்னும் காவிரியாறு கடலோடு கலக்கும் இடத்தில் உள்ள பட்டினம் ஆகும். அங்கே அந்தக் காவிரியின் கரையில் மணலில் விளையாடச் சென்றனர் சில சிற்றிலம்பெண்கள். மணலில் விளையாடும்பொழுது மணலால் சிற்றில்களும் (சிறுவீடு) பாவைகளும் இழைத்து விளையாடுவது வழக்கமானதுதான். அப்படி அவர்கள் விளையாடும்பொழுது ஒருத்தி தானும் மணலால் ஒரு பொம்மையை இழைத்தாள்.
அதைக் கண்டு விளையாட்டாக மற்ற சிறுமிகள் "அடி! இந்தப் பாவைதான் உன் கணவன்!" என்று சீண்டிச் சிரிப்பும் கிண்டலுமாக இருந்தனர்.
பிறகு வீடு திரும்பும் நேரம் வந்தது.... எல்லாரும் கிளம்ப ஆயத்தமாயினர். ஒரு சிறுமி மட்டும் ஆயத்தமில்லை. அவள் அங்கேயே இருக்க ஆயுத்தமானாள்! "வாடி போகலாம்! இருட்டி விட்டது" என்று அழைத்தும் அவள் வரவில்லை. என்ன காரணம் என்று வினவினர்.
"என் கணவனுடன் இங்கேயே இருக்கிறேன்! நீங்கள் உங்கள் வீட்டுக்குப் போங்கள்!" என்று சொல்லிவிட்டாள்! முதலில் அவளும் விளையாட்டு என்று நினைத்தாள். பிறகு மீண்டும் அழைத்தும் மறுத்துவிட்டாள்.
தீவாக நின்றாள் மணற்பாவையை அணைத்து
அந்தப் பெண் அங்கேயே இருந்தாள்; ஆற்றில் தண்ணீர் மிகுந்தால் அந்த மணற்பாவையைக் கரைத்துவிடும் என்று அஞ்சித் தானே அதை (அவனையோ?!) அணைத்துக் கொண்டாள்; தானே ஒரு தீவு போல் நின்று ஆற்றலைகள் மணற்பாவையை அழிக்காமல் தங்கள் இருவரையும் சூழ்ந்து போகச் செய்து காத்தாள்.
அவ்வாறே வாழ்நாளைக் கழித்தாள் என்பதை யூகிக்கலாம். வீட்டார் தனக்குக் கொணர்ந்த சோற்றை மணற்பாவைக்கு ஊட்டித் தான் தின்றிருப்பாளோ? அல்லது முதல்வேளை படைத்த சோறு அப்படியே இருப்பதைக் கண்டு அது முடியும் வரை தான் உண்ணாமலேயும் காத்திருந்தாளோ?
நீரில் மூழ்கினாளோ?
சிலர் உந்தி (தீவு) என்பதால் அவர்கள் விளையாடியது ஆற்றங்கரையன்று, ஆற்றின் நடுவில் உள்ள திட்டையில் என்று கருதுகின்றனர். அப்படியானால், வெள்ளம் சிறிது கூடினாலும் அந்தத் திட்டையைத் தண்ணீர் மூடிவிடும்...... அப்படியானால் அந்தப் பெண் தன் மணற்பாவையைக் கரையாதவண்ணம் அணைத்திருக்கும் பொழுது தன்னை நீர் மூழ்கடித்தாலும் அந்த அணைப்பைக் கைவிடாமல் இருந்திருப்பாள்!
நினைக்கவே உள்ளம் நெகிழ்கிறதே! ஐயகோ! அந்தத் தாய் என்ன பாடுபட்டிருப்பாள்! மூச்சுத் திணறத் திணறத் தன் கணவனாம் அந்த மணற்பாவையைக் கைவிடாமல் காத்திருக்கிறாள்! அவள் வேதனையை நினைத்துப் பார்க்க முடியவில்லை; அவள் உள்ளத்தின் உறுதியையும் போற்றாமல் இருக்கமுடியவில்லை.
கல்லைக் காதலித்தவளும் இவளும் ஒருகணக்கே!
இந்தப் பத்தினியைப் போலவே கல்லைக் காதலனாக நேசித்து வாழ்ந்தவள் வில்லிபுத்தூர்ப் பெரியாழ்வார் மகள் ஆண்டாள் என்னும் கோதை நாச்சியார். அவளும் கண்டது திருமாலின் சிற்பம் மட்டுந்தானே? அந்தக் கல்லுருவத்தின் மேல் காதல் கொண்டபின் வேறொருவனையும் தன் தலைவனாக ஏலாத கற்புத் திண்மை உடையவளாய் வாழ்ந்தாள் ஆண்டாள்.
ஒருவனைத் தம் தலைவனாக இணைப்பு நேர்ந்தபின்னால் வேறொருவனைப் பெயருக்கும் தன்னோடு இணைப்பதை விரும்பாத தூய கற்பினராக இருவருமே இருந்தனர்.
அடுத்து நாம் கரிகால்வளவன் மகள் ஆதி மந்தி வெள்ளத்தில் போன தன் கணவனை மீட்ட நிகழ்ச்சியைக் காண்போம்.
பெரியண்ணன் சந்திரசேகரன், அட்லாண்டா. |