மதுரையில் மும்முனை போட்டி!
கடந்த மாதம் மதுரையில் விழா ஒன்றிற்கு வருகை தந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினை, மதுரை மேற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி. சண்முகம் புகழ்ந்து பேசி அ.தி.மு.க வட்டாரத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தினார். எஸ்.வி. சண்முகத்தின் திடீர் ஸ்டாலின் புகழ் பேச்சைத் தொடர்ந்து அதிரடியாக அவர் ஜெயலலிதா பேரவையின் மாநில துணைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக மதுரையில் அ.தி.மு.க. வினர் போராட்டம் நடத்தினர். சண்முகத்தை தொடர்ந்து மதுரை மாநகராட்சி முன்னாள் துணைமேயர் நவநீதகிருஷ்ணன் அ.தி.மு.க. விலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

மதுரையில் இடைத்தேர்தல் நடைபெற விருக்கும் நிலையில் அ.தி.மு.க.வின் முக்கிய நபர்கள் கட்சியிலிருந்து விலகுவது அக்கட்சிக்குள் பெருத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க தி.மு.க முயற்சிக்கிறது என்றும், இதன் மூலம் எதிரணியை பலவீனப்படுத்த முயல்கிறது என்றும் அ.தி.மு.க குற்றம் சாட்டியுள்ளது.

இத்தகைய பரபரப்பான சூழலில் கடந்த மே மாதம் நடைப்பெற்ற சட்டப்பேரவை தேர்தலில்
மதுரை மத்திய தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மரணம் அடைந்ததையொட்டி, அத்தொகுதிக்கு வருகிற 11ம் தேதி (அக்டோ பர்) இடைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதற்கான அறிவிப்பையும் முறை யாக அறிவித்தது. தொடர்ந்து ஒட்டு எண்ணிக்கை 17ம் தேதி நடைபெறும் என்று அறிவித்தது.
ஆளும் தி.மு.கவும், பிரதான எதிர்க் கட்சியான அ.தி.மு.க வும் நேரிடையாக மோதவிருக்கின்றன. நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய திராவிட முன்னேற்ற கழகம் இம்முறையும் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதை அடுத்து இங்கு மும்முனை போட்டி உறுதி செய்யப் பட்டுள்ளது.

அ.தி.மு.க வின் அதிகார வேட்பாளராக ராஜன் செல்லப்பாவும், தி.மு.க அதிகார வேட்பாளராக கெளஸ் பாஷாவும், தே.மு.தி.க. சார்பாக எம்.ஆர்.பாலசுப்பிரமணியமும் போட்டியிடுகின்றனர்.

தங்களின் 100 நாள் சாதனையை பிரச்சாரத் திற்கு பயன்படுத்தவிருக்கும் தி.மு.க எப்படியாவது இத்தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது அ.தி.மு.க வும் எப்படியாவது இத்தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்பதில் குறியாக உள்ளது. இன்று தமிழகம் எங்கும் பரவி வரும் சிக்குன் குனியாவை முக்கிய பிரச்சார யுக்தியாக கையில் எடுத்திருக்கின்றன அ.தி.மு.க கூட்டணி கட்சிகள்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com