"பொறியியல் கல்வித் தரத்தை உயர்த்துவோம்" - துணைவேந்தர் பாலகுருசாமி
இந்தியாவில் எங்குபோனாலும் இவர் எழுதிய மென்பொருள் நிரல் புத்தகங்கள் பிரபலமானவை. மாணவக் காலந்தொட்டே முதன்மையாய் நிற்கும் முனைப்பு மிகுந்தவர் இவர். உலகப் புகழ் பெற்ற அண்ணா பல்கலைக் கழகத்தின் கடிவாளம் இப்போது இவர் கையில்தான். இப்பல்கலைக் கழகத்தோடு இணைந்த பொறியியற் கல்லூரிகளின் தரத்தை உயர்த்துவதே தன் முதல் குறிக்கோள் என்கிறார் துணைவேந்தர், முனைவர் இ. பாலகுருசாமி. NIIT என்கிற பன்னாட்டு கணினிப் பயிற்சி நிறுவனத்தைத் துவக்கியதில் இவரது பங்கு முக்கியமானது. ஆந்திரப்பிரதேச தொழில்நுட்ப நிறுவனத்தின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தார். ஐக்கிய நாட்டுச் சபையின் தொழில்வளர்ச்சிக்குழுவில் 1991ம் ஆண்டிலிருந்து உறுப்பினராக இருந்து வருகிறார். இவருடைய துணைவியார் முனைவர் சுசிலா பாலகுருசாமி, மனிதவளமேம்பாட்டுத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். சுசிலா தனது கணவரின் முயற்சிகளுக்குப் பல்வேறு வகையில் உதவிகரமாக இருக்கிறார்.

முனைவர் பாலகுருசாமியைத் தென்றல் வாசகர்களுக்காகச் சந்தித்து உரையாடியதிலிருந்து...

கே: உங்கள் ஆரம்பமும், வந்த வழியும் பற்றி...

ப: என் சொந்த ஊர் ஆண்டிப்பட்டி கோட்டை என்கிற சின்ன கிராமம், கரூர்- திண்டுக்கல் செல்லும் வழியில் உள்ளது. சுமார் 100 வீடுகள் கொண்டது. என் முதல் படிப்பு எங்கள் ஊரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரவக்குறிச்சியில். தினமும் நாங்கள் மிதிவண்டி மூலம் பள்ளிக்கூடம் செல்வோம். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் கோயம்புத்தூரில் என்னுடைய அடுத்தக்கட்ட படிப்பு தொடங்கியது. அங்குள்ள பி.எஸ்.ஜி. கல்லூரியில் படித்தேன். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் ரூர்க்கியில் உள்ள ஐ.ஐ.டி.யில் படித்தேன். அதன் பிறகு 1972 முதல் 1995வரை நான் வட இந்தியாவில் கிட்டத்தட்ட 23 வருடங்கள் பல இடங்களில் பணியாற்றினேன். அதன்பின் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டேன்.

கே: சில நேரங்களில் சில தனியார் கல்லூரிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடப்பதாக செய்திகள் வருகின்றனவே, அது ஏன்?

ப: அண்ணா பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான குறைந்தமட்ட மதிப்பெண் சமூகவாரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயர்சாதியினருக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வெவ்வேறு தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் 60 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தால் பொறியியல் அல்லது மருத்துவக் கல்லூரியில் சேர முடியாமல் போகிற சூழலில், அவரது உறவினர்கள் யாராவது வெளிநாடுகளில் இருந்தால், அவர்கள் மூலம் இங்கு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் விண்ணப்பம் செய்கிறார்.

மாணவரின் நெருங்கிய சொந்தங்கள், குறிப்பாக மாமா, சித்தப்பா, பெரியப்பா என்று யாராவது அவர் படிப்புக்கு உதவ முன்வந்து, தங்கள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), மற்றும் தேவையான பத்திரங்களை இங்கு சமர்ப்பித்தால் அந்த மாணவர் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இட ஒதுக்கீட்டின் மூலம் பொறியியற் கல்லூரியில் நுழையமுடியும். ஆனால் சிலர் வெளிநாடுகளில் எந்தவித உறவுகளும் இல்லாமலும், அதற்குரிய ஆவணங்களையும், கடிதங்களையும் சரியாக சமர்ப்பிக்காமலும் சேர்ந்துவிடுகின்றனர். தனியார் கல்லூரிகள் வெளிநாடு வாழ் மாணவர்களுக்கான எல்லாவிதமான விவரங்களையும் தாங்களே நேரிடையாக சேகரிக்கிறோம் என்று சொன்னதால் அண்ணா பல்கலைக்கழகம் இதைக் கவனிப்பதில்லை. அப்படிச் சேருபவர்கள் சில நேரம் முறைகேடாக போலியான பாஸ்போர்ட் மற்றும் பத்திரங்களை ஒப்படைக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களைத் தான் நாங்கள் தேடிக் கண்டுபிடித்து அதற்குரிய தண்டனைகளை வழங்கி வருகிறோம்.

கே: அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான இடஒதுக்கீடு பற்றிய விவரங்களையும், அதற்கான விண்ணப்பப் படிவங்கள் பற்றியும் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?

ப: இக்கேள்விக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர் பிரிவின் உதவி இயக்குநர் முனைவர் மல்லிகா பதிலளிக்கையில், ''அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையத்தளம் (www.annauniv.edu) மூலம் இதற்கான விண்ணப்பங்களை நாங்கள் வெளியிடுகிறோம். விண்ணப்பங்களை எங்கள் இணையத்தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம். கிட்டத்தட்ட 900க்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள் இங்கே சேர்ந்து படிக்கிறார்கள். பொதுவாக, சவுதி அரேபியா, துபாய் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து இங்கு வந்து படிப்பவர்கள் அதிகம் உள்ளனர்" என்றார்.

கே: எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மட்டும் பொறியியற் கல்விக்கான சேர்க்கையில் ஏகப்பட்ட குளறுபடிகள்... அதுமட்டுமல்லாமல் பொறியியற் கல்லூரிகளில் அதிக அளவில் காலி இடங்கள் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. அப்படி இருக்க எதற்காக நுழைவுத் தேர்வுகள்?

ப: எந்தக் குளறுபடியும் இல்லை. பத்திரிக்கைகளும், ஊடகங்களும் இதைப் பெரிதுபடுத்துகின்றன. நீதிபதி சுப்பிரமணி கமிட்டியின் அறிக்கையை எதிர்த்து சுயநிதிப் பொறியியற் கல்லூரிகள் மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன. இந்தமுறை மொத்தம் 52 ஆயிரம் பேர் அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பம் செய்துள்ளனர்.

நிறைய இடங்கள் இருப்பதால் எல்லோருக்கும் இடம் கிடைக்கும். தமிழகத்தில் உள்ள 252 சுயநிதிப் பொறியியற் கல்லூரிகளின் தரமும் ஒன்றாக இருந்தால் மாணவர்கள் சேர்க்கையில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் கல்லூரிகளின் தரம் வித்தியாசப்படுவதால் மாணவர்களின் மதிப்பெண்களுக்குத் தகுந்தவாறு கல்லூரிகள் ஒதுக்க வேண்டியிருக்கிறது. எல்லோரும் அண்ணா பல்கலைக்கழகத்திலேயே சேர வேண்டும் என்று சொன்னால் 52 ஆயிரம் பேரையும் சேர்த்துக்கொள்ள முடியுமா? இதனால்தான் நுழைவுத்தேர்வு மற்றும் கலந்தாய்வு நடைபெறுகிறது. அதுதான் பிரச்சனை.

கே: ஒவ்வொரு வருடமும் குறைந்தது 50 ஆயிரத்திற்கும் மேலான மாணவ, மாணவிகள் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து வெளியேறுகின்றனர். நிறையப் பேருக்கு வேலை கிடைக்கவில்லை. இருந்தும் மறுபடியும் மறுபடியும் ஏன் எல்லோரும் பொறியியல் படிப்பை நாடி வருகிறார்கள்?

ப: இதற்கு காரணம் பொறியியற் கல்வி படிப்பதன் மூலம் நிறுவனங்களிலோ அல்லது அரசாங்கத்திலோ வேலை வாய்ப்பு கிடைக்காவிடினும், அவர்களால் தனியாக ஏதாவது தொழில் தொடங்க முடியும் என்கிற நம்பிக்கை. பி.ஏ., பி.காம். படித்தாலும் வேலை வாய்ப்பு இல்லை. பொறியியல் படிப்பதன் மூலம் ஏதாவது சுயமாகத் தொழில் தொடங்க ஏதுவாக இருக்கும். இங்கே படிக்கும் 52 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளில், ஒரு 10 ஆயிரம் பேருக்குத் தமிழகத்தில் வேலை கிடைக்கலாம். மற்றவர்கள் வெளிமாநிலங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ, அல்லது சுயதொழில் செய்வதற்கோ சென்றுவிடுவார்கள்.

நல்ல தன்னம்பிக்கை, ஒரு நேர்மறைச் சிந்தனை உருவாக்கிக் கொண்டால் வேலை கிடைக்கவில்லை என்றால்கூடச் சுயமாக தொழில் தொடங்கலாம். நான்கு பேருக்கு இவர்கள் வேலை வாய்ப்பு அளிக்கலாம். ஆகையால் நான் இன்றைய மாணவர்களுக்குச் சொல்வது என்னவென்றால் தன்னம்பிக்கை, தைரியம் போன்றவை வரவேண்டும் என்பதே. படிக்கும் போது அந்த மாணவர் தன்னம்பிக்கையுடன் வரவேண்டும்.

கே: கிராமச் சூழலில் வளரும் ஒரு மாணவரின் குடும்பப் பின்னணி பொருளாதார வசதியில்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த மாணவர் பொறியியல் அல்லது மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, கல்லூரியில் சேர அனுமதி பெற்றாலும், நிர்ணயிக்கப்பட்ட குறைந்தமட்டத் தொகையைக்கூட அவரால் கொடுக்க முடியாத நிலை உள்ளது. இப்படிக் கல்வி வியாபாரமாக மாறினால் சமூகத்தின் அடிமட்டத்திலுள்ளவர்கள் எப்படிக் கல்வி கற்க முடியும்?

ப: பொறியியற் கல்லூரிப் படிப்பு சம்பந்தமாக உன்னிகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பே இதற்கு காரணம் எனலாம். இத்தீர்ப்பின் மூலம் இலவச இட ஒதுக்கீடு, கட்டண இடங்கள் என்று இரண்டுவிதமான பிரிவு உருவாயிற்று. அதாவது 50 சதவீதம் இலவச இட ஒதுக்கீட்டிற்கு என்றும், 50 சதவீதம் கட்டண இட ஒதுக்கீட்டிற்கு என்றும் ஒதுக்கப்பட்டது.

இலவச ஒதுக்கீட்டில் ஒரு மாணவர் கட்ட வேண்டிய தொகை 12 ஆயிரம் ரூபாய், கட்டண ஒதுக்கீட்டிற்கு ரூபாய் 32,500 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

இன்றைக்கு நிலைமை என்னவாயிற்று என்றால் நகரத்தில் வசிக்கும் ஒரு மாணவர் நன்றாகப் படித்து இலவச இட ஒதுக்கீட்டு முறையில் தனக்கான இடத்தைப் பெற்றுவிடுகிறான். அதுபோல் நல்ல மதிப்பெண் பெற முடியாதவன் கட்டண இட ஒதுக்கீட்டின் மூலம் தனக்கான இடத்தைப் பெற்றுவிடுகிறான். கடைசியில் நிலைமை என்னவாயிற்று? கொஞ்சம் வசதி உள்ளவர் - படித்தவர் இலவச இட ஒதுக்கீட்டிலும், ஏழை, புத்தகம் வாங்குவதற்குக்கூடப் பணவசதி இல்லாதவர் ஆனால் ஓரளவு படிக்கக்கூடியவர் கட்டண ஒதுக்கீட்டிலும் வந்துவிடுகிறார்கள். இந்த முறையினால் பணம் இருப்பவர்கள் மட்டும்தான் கல்வி கற்க முடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது.

இதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால் இன்று நம் நாட்டில் உயர்கல்விகளை அரசாங்கம் தனியார் மயமாக்கியதுதான் என்று சொல்லலாம். ஓர் அரசாங்கத்தினால் உயர்கல்வி என்பது சாத்தியமாகாது. இதற்குக் காரணம் என்னவென்றால் ஆரம்பநிலை, மேல்நிலைக் கல்விக்குத்தான் அரசாங்கம் முதல் இடம் அளிக்க முடியும். உயர்கல்வி என்று வரும் போது அரசாங்கத்தினால் முழுவதையும் எடுத்துச் செய்வது என்பது இயலாத காரியம். ஏகப்பட்ட கல்லூரிகள். ஆகையால் அரசாங்கம் உயர்கல்வியைத் தனியார் மயமாக்கியது. எப்போது உயர்கல்வி தனியார்மயமானதோ, அப்போதே கல்வி வியாபாரமயமானது. கல்வி என்பது சேவையாக இருந்த காலம் போய்விட்டது.

முற்காலத்தில் செல்வந்தர்கள் தங்களின் சேமிப்பில் ஒரு பகுதியைக் கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளுக்காகச் செலவு செய்தார்கள். ஆனால் இப்போது அப்படிப்பட்டவர்கள் இல்லை. சேவை மனப்பான்மை குறைந்துவிட்டது.

கே: நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திற்கான தகுதிகள் என்னென்ன?

ப: நிகர்நிலைப் பல்கலைக்கழத்திற்கான அந்தஸ்து மத்தியில் உள்ள மனிதவளமேம்பாட்டுத் துறையின் மூலமாகச் சம்பந்தப்பட்ட கல்லூரிக்குக் கிடைக்கிறது. முதலில் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) மூலம் ஒரு குழு அமைக்கப்படும். அக்குழு சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் தரம், பொருளாதாரம், படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, சுற்றுப்புறச் சூழல், கட்டமைப்பு வசதி போன்று எல்லாவற்றையும் ஆராயும்.

எல்லாவிதமான தகுதிகளும் இருக்கின்றன என்று அந்தக் குழு நம்பிக்கை கொண்டு தரும் அறிக்கையின் மூலமே சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திற்கான அந்தஸ்து வழங்கப்படும். ஆனால் நடைமுறையில் அப்படிப்பட்ட கல்லூரிகளில் சில நிகர்நிலை அந்தஸ்து கிடைத்தபிறகு சரியாகச் செயல்படுவதில்லை. நம்பிக்கையைத் தக்க வைத்துக்கொள்வதில்லை.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை இந்தக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் குழு (AICTE) போன்றவை கட்டுப்படுத்தாது. ஆகையால் இந்தக்கல்லூரிகள் தாங்களே மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றனர். இப்படிப்பட்ட விஷயங்களை பல்கலைக்கழக மானியக்குழு தான் ஒழுங்குபடுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.

பல்கலைக்கழக மானியக்குழு அதற்கான வழிமுறைகளை இதுவரை செய்யவில்லை. சரியான சுய கண்காணிப்பு முறைகளை நிகர்நிலைக் கல்லூரிகள் முழுமையாக உருவாக்கவுமில்லை, நடைமுறைப்படுத்தவும் இல்லை. அதனால் இந்த நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், எவ்வளவு வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்கிற நிலை உள்ளது. இதை நாம் கேட்க முடியாத சூழல் இருக்கிறது.

கே: தற்போது தமிழகத்தில் எத்தனை பொறியியற் கல்லூரிகள் இருக்கின்றன? எண்ணிக்கை அதிகம் இருக்கிறதே, கல்வியின் தரம் எந்த அளவிற்கு உள்ளது?

ப: தமிழகத்தில் மொத்தம் 252 பொறியியற் கல்லூரிகள் இருக்கின்றன. இத்துணை எண்ணிக்கையில் கல்லூரிகள் இருப்பதால் கல்வியின் தரம் தரம் வேறுபடுவதைத் தவிர்க்க முடியாது.

இந்தக் கல்லூரிகள் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளன. கல்லூரிகள் அமைந்திருக்கும் இடத்திற்கேற்ப சில நேரங்களில் தரமும் அமைகிறது. குறிப்பாக, சென்னை போன்ற நகரங்களில் இருக்கும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் நன்றாகத் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.

கிராமப்புறக் கல்லூரிகளுக்குத் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் செல்லத் தயங்குவார்கள். அப்படி யாராவது இருக்கிறார்கள் என்றால் அந்த ஆசிரியர் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவராகவோ அல்லது சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவராகவோ இருப்பார். கொஞ்சம் நிலம் வைத்திருப்பார். பொறியியல் படிப்புப் படித்திருப்பார். உள்ளூரில் ஆசிரியராக இருப்பதே போதும் என்று இருப்பார். ஆறுமாதங்களாகச் சம்பளம் தராததால் வகுப்புகளே நடத்தாத ஒரு கல்லூரியை நான் பார்த்திருக்கிறேன்.

இப்படிப்பட்ட கல்லூரிகளைப் பற்றி பல்கலைக்கழகத்திற்குப் புகார்கள் வந்தால் நாங்கள் தகுந்த நடவடிக்கை எடுப்போம். பல்கலைக்கழகக் குழு சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு நேரிடையாக சென்று நடவடிக்கை எடுக்கமுடியும். அப்படி நடவடிக்கை எடுக்க முயன்றால் அவர்கள் நீதிமன்றம் செல்வார்கள். காலதாமதமாகும். இதனால் மாணவர்கள் கஷ்டப்படுவார்கள். யாருமே தொடங்கிய கல்லூரியை மூடவிரும்பமாட்டார்கள். அவர்களுக்கு நாங்கள் எச்சரிக்கை அளிப்போம்.

தமிழக அரசாங்கம் இனிமேல் தனியார் கல்லூரிகள் தேவையில்லை என்று இந்திய அரசாங்கத்திற்குக் கடிதம் எழுதி அனுப்பிவிட்டது. ஆனால் சிலர் அகில இந்தியத் தொழிற்கல்விக் கூட்டமைப்பு மூலம் தங்கள் கல்லூரிக்கான அனுமதியைப் பெற்றுவிடுகிறார்கள். ஆனால் தற்போது ஏ.ஐ.சி.டி.இ-யும் மாநில அரசிடமிருந்து அனுமதிச் சான்றிதழ் வந்தால்தான் கல்லூரிக்கான அனுமதி வழங்கப்படும் என்ற கூறியுள்ளது. ஆகையால் இனிமேல் தமிழகத்தில் தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் வாரா.

கே: துணைவேந்தர் என்கிற முறையில் உங்கள் எதிர்காலத் திட்டங்கள்..

ப: அண்ணா பல்கலைக்கழகத்திற்கென்று உலக அளவில் பெரிய மதிப்பு உள்ளது. என்னுடைய இப்போதைய முக்கியமான பணி என்னவென்றால் தமிழகத்தில் உள்ள 252 கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்துவதும், உலக அளவில் நமக்கான பெயரைத் தக்கவைத்துக் கொள்வதுமே.

அதற்காக நானோ அல்லது இதற்கான குழுவோ அவ்வபோது கல்லூரிகளுக்குச் சென்று, அங்கு என்ன குறைகள் இருக்கின்றன, அதை எப்படி நிவர்த்தி செய்வது என்று சொல்வோம். தரமான கல்வியைத் தர முயற்சி செய்கிறோம். எத்தனை வசதிகள் இருந்தாலும் ஆசிரியர்கள்தான் முக்கியம். ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்துகிறோம். நிறைய, தகுதியுள்ள ஆசியர்களை உருவாக்குவது, இருப்பவர்களைத் திறமையானவர்களாகக் கொண்டு வருவது போன்றவைகள் தான் எங்கள் திட்டம். கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால் அந்தக் கல்லூரிகளின் தரத்தை முன்னேற்றுவது போன்று பல செயல்பாடுகள்.

அதுமட்டுமல்லாமல் விரைவில் எல்லாக் கல்லூரிகளையும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணையவழியில் இணைத்து, செயற்கைக்கோள் மூலமாக அவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் பாடம் நடத்த முடிவுசெய்திருக்கிறோம். இந்திய வானியல் ஆய்வுக் கழகம் அதற்கான கருவிகளைக் கொடுத்திருக்கிறது. தினந்தோறும் இதன் மூலம் வகுப்புகள் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான எல்லா ஏற்பாடுகளும் முடிவடைந்துவிட்டன. தற்போது புதிய அரசு வந்திருப்பதால் அவர்களிடமிருந்து இதற்கான நிதி ஒதுக்கீடு முறையாக அறிவித்தபின் இத்திட்டம் செயல்படத் தொடங்கும்.

கே: தமிழைச் செம்மொழியாக்குவதற்கான மத்திய அரசின் செயல்திட்டம் பற்றிய உங்கள் கருத்து...

ப: அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம் என்கிற ஓர் அமைப்பினை நடத்தி வருகிறோம். இதன் முக்கிய நோக்கமே தமிழில் அறிவியல், தொழில்நுட்பவியல் இலக்கியம் உருவாக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளுதல், அதற்குத் துணையான முயற்சிகளை ஊக்குவித்தல் போன்றவைகளாகும்.

இவ்வமைப்பின் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் திருக்குறள் மாநாட்டை நடத்தினோம். அம்மாநாட்டில் தீர்மானங்கள் பல கொண்டுவந்துள்ளோம். குறிப்பாக, திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும், தமிழைச் செம்மொழியாக்க வேண்டும் என்றும் தீர்மானம் கொண்டு வந்தோம்.

எங்கள் தீர்மானங்களைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைத்தோம். இப்போது தமிழ் செம்மொழியாக்கப்படும் என்று மத்திய அரசின் செயல்திட்ட அறிவிப்பு எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப் பட்டால் உலக அளவில் தமிழுக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கும் என்பதில் பெருமை கொள்கிறேன்.

எங்கள் வளர்தமிழ் மன்றத்தின் மூலம் தமிழகராதிகள் வெளியிடுகிறோம். களஞ்சியம் என்கிற இதழ் வெளியிடுகிறோம். நிறையத் தமிழ்க் கட்டுரைகள் வருகின்றன. இப்போது நானே தமிழில் சில புத்தகங்களை எழுதுகிறேன்.

கே: நீங்கள் எழுதிய புத்தகங்கள் பற்றிச் சொல்லுங்கள்?

ப: இதுவரை கணினி பற்றிய புத்தகங்கள் மற்றும் தகவல் தொழில் தொடர்பு பற்றிய புத்தகங்கள் முப்பதுக்கும் மேல் எழுதியுள்ளேன். என்னுடைய புத்தகங்கள் இன்று இந்தியாவிலுள்ள பல பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. எளிமையாக எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் நான் புத்தகங்களை எழுதுகிறேன். அது மட்டுமல்லாமல் புத்தகங்களை கூடுமானவரையில் குறைந்த விலையிலேயே விற்கும்படி பார்த்துக்கொள்வேன்.

இப்போது சில புத்தகங்களைத் தமிழாக்கம் செய்து கொண்டு வருகிறேன்.

கே: நீங்கள் வாங்கிய விருதுகள்...

ப: நிறைய விருதுகள் வாங்கியுள்ளேன். நிறைய பட்டங்கள் வாங்கியுள்ளேன். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் 'சிறந்த முதுநிலைக் கல்வி மாணவர்' விருதை 1974 ஆம் ஆண்டும், 'கோசலா ஆராய்ச்சி' விருதை 1975ஆம் ஆண்டும், 1992ன் ஆண்டிற்கான 'சிறந்த மனிதன்' விருது, 'சிறந்த ஆசிரியர்' விருது 1998ல் என்று ஏகப்பட்ட விருதுகள்.

கே: பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்விச் செலவுகளுக்கு ஏதாவது வழிமுறைகளை செய்து வருகிறீர்களா?

ப: நிறைய செய்து வருகிறோம். இத்தகைய மாணவர்களுக்காக நிறைய வேலை வாய்ப்பும் நாங்கள் ஏற்படுத்தித் தருகிறோம். இங்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் நிறையப் பேருக்குப் படித்துக்கொண்டே வேலை செய்வதற்கான வழிமுறைகளைச் செய்கிறோம். உதாரணமாக, நிறைய மாணவர்களை ஆய்வுக்கூடத்தில் பகுதி நேர உதவியாளராக நியமிக்கிறோம். உணவு விடுதியில் வேலை வாய்ப்பு வழங்குகிறோம். வெளிநாடுகளில் உள்ளது போல் இன்றைய நம் மாணவர்களுக்கும் படித்துக் கொண்டே வேலை செய்வதற்கு ஆர்வம் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் பத்துக் கோடி ரூபாய் மாணவர் நலநிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூலம் இதற்கான நிதி திரட்டப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில் நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலைக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் படிக்கும் நலிவடைந்த மாணவர்களுக்கு இந்நிதியிலிருந்து உதவித் தொகை வழங்கப்படும்.

அதுபோல் பொறியியல் கலந்தாய்வு நடைபெறும்போதே அங்கு தேவைப்படும் மாணவர்களுக்குக் கல்விக் கடனுதவி வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும்.

கே: சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் துவக்கப்பட்ட வானொலி சேவையைப் பற்றி...

ப: இந்தியாவில் முதன்முதலாக அண்ணா பல்கலைக்கழகத்தில் சமுதாய வானொலி துவக்கப்பட்டது. அதை அப்போதைய இந்திய துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் துவக்கி வைத்தனர். இது 90.5 என்கிற பண்பலை வரிசையில் கேட்கலாம். இதில் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளோ, அல்லது செய்திகளோ ஒளிப்பரப்பபடமாட்டா. அதுமட்டுமல்லாது இதில் சமுதாயத்திற்குத் தேவையான கருத்துக்கள் மற்றும் கல்வி தொடர்புள்ள நிகழ்ச்சிகளே ஒளிப்பரப்பப்படும்.

சந்திப்பு: அருண்குமார், கேடிஸ்ரீ
தொகுப்பு: மதுரபாரதி

******


அண்ணா பல்கலையில் NRI இடஒதுக்கீடு

அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான (NRI) இட ஒதுக்கீடு உள்ளது. அது குறித்துத் துணைவேந்தர் சொன்னது:

ஒருவர் அந்த இட ஒதுக்கீட்டின் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர வேண்டும் என்று விரும்பினால் அதற்கான பணத்தைச் செலுத்தினாலே போதும். எந்தவிதமான நுழைவுத் தேர்வும் அவர் எழுத வேண்டியது இல்லை. இப்படிச் சேர விரும்புவர்கள் வருடத்திற்கு 6,500 அமெரிக்க டாலர் கட்ட வேண்டும். இவ்வகையில் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் கிட்டத்தட்ட 25 ஆயிரம் டாலருக்கு மேல் கட்ட வேண்டும். மொத்தமாக நான்கு வருடத்திற்குச் சேர்த்தே கட்டவிரும்பினால் மொத்தப் பணத்தையும் முதலிலேயே கட்டிவிடலாம். அப்படிக் கட்டினால் மொத்தத்தில் 1,000 டாலர் குறையலாம்.

வெளிநாடு வாழ் மாணவர்களின் சேர்க்கை எங்களுடைய அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாகவே நடைபெறுகிறது. மொத்த இடஒதுக்கீட்டில் 10 சதவீதம் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக ஒதுக்கப்படுகிறது. இந்தச் சலுகை தனியார் கல்லூரிகளுக்கும் உண்டு. ஒரு வெளிநாடு வாழ் மாணவர் இந்தியாவில் தொழிற்படிப்புக் கல்லூரிகளில் சேர வேண்டும் என்று விரும்பும் மாணவர் குறைந்தமட்ட மதிப்பெண் பெற்றுத் தேர்ந்திருந்தால் போதுமானது. அவருக்கு இங்கு இடம் கிடைக்கும்.

******


வகுப்புகள் நடக்காத கல்லூரி!

நான் ஒரு கல்லூரிக்குச் சென்றேன். அங்கே மாணவர்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் வகுப்புகள் நடக்கவில்லை. நான் உடனே அங்கு பணிபுரியும் ஆசிரியர்களை அழைத்து ''ஏன் பாடம் நடத்தவில்லை?'' என்றேன். அவர்கள் உடனே ''எங்களுக்கு ஆறு மாதமாகச் சம்பளம் கொடுக்கவில்லை'' என்று சொன்னார்கள்.

நான் அவர்களிடம் ''சம்பளம் தரவில்லை என்றால் ஏன் இங்கு பணிபுரிகிறீர்கள்? வேலையை விட்டு விலகிவிட்டு வேறு இடத்தில் பணி தேடலாமே" என்றவுடன் அவர்கள் ''ஐயா! நாங்கள் எல்லோரும் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள். ஒருநாள் கண்டிப்பாகப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அதனால் காத்திருக்கிறோம்'' என்றார்கள். இப்படி இருக்கிறது நிலைமை!

******

© TamilOnline.com