விஜய் அமிர்தராஜ் : தொட்டதெல்லாம் பொன்னாகும் (பகுதி - 1)
* இருபது ஆண்டுகள் தொடர்ந்து உலக டென்னிஸ் அரங்கில் சிறந்து விளங்கியவர்
* பதினான்கு ஆண்டுகள் ஆசியாவின் முதன்மை ஆட்டக்காரர்
* ஐந்து முறை டென்னிஸ் தொழில்முறைக் கழக விளையாட்டுக் குழுவின் தலைவர் (President of ATP Players' Council)
* ஐ.நா. சபையின் சமாதானத் தூதுவர்
* தொலைக்காட்சியில் டென்னிஸ், கால்·ப் விளையாட்டுக்களின் சிறப்பு வர்ணனையாளர்
* சர்வதேச விளையாட்டில் நன்னடத்தைக்காக (Fair Play in International Sports) வழங்கப்படும் பேரொன் பியர் டி கொபெர்டீன் (Baron Pierre de Coubertin) விருது பெற்ற ஒரே ஆசியர்
* இந்திய அரசால் பத்மஸ்ரீ பட்டம் கொடுத்து கெளரவிக்கப்பட்டவர்
* லாஸ் ஏஞ்சலஸ் நகரின் சாவி கொடுக்கப் பெற்ற (Key to the City of Los Angeles) இந்தியக் குடிமகன்
* மனித நேயத்திலும் சமூக சேவையிலும் சிறந்து விளங்குபவர்
* உலகிலேயே முதன்முறையாகத் தொடர்ந்து பதினெட்டு வருடம் முழு உதவித் தொகையுடனான ஒரு டென்னிஸ் அகாடெமியை நடத்தி வெற்றி கண்டவர்
* தனது மகன்களை உலகளவில் சிறந்த விளையாட்டு வீரர்களாய் உருவாக்கி வரும் பயிற்சியாளர்
* பல நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வரும் தொழிலதிபர்
* திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தவர்
* இந்தியாவின் நூறு அழகான ஆண்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்

மேற்கண்ட எல்லாப் புகழுக்கும் உரியவர் விஜய் அமிர்தராஜ். முன்மாதிரிகள் (role-models) சரித்திரத்திலும், கற்பனைக் கதைகளிலும் மட்டுமே இருக்க வேண்டுமென்பதில்லை. நாம் வாழும் காலகட்டத்திலேயே இருக்கமுடியும் என்பதற்குச் சிறந்த உதாரணம் விஜய். டென்னிஸ் ஆடினார், வேறு சிலவற்றிலும் ஈடுபட்டார் என்றில்லாமல் அவர் கால் பதிக்கும் துறைகள் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குபவர். ஆலிவர் கோல்ட்ஸ்மித்தைப் பற்றி ஸாமுவேல் ஜான்ஸன் எழுதிய "... who left scarcely any style of writing untouched, and touched none that he did not adorn" என்றாற்போல், விஜய் 'தொடாத துறையில்லை, அவர் தொட்டுச் சிறக்காத துறையில்லை.'

குத்துச் சண்டை வீரர் முகமது அலி, நோபல் சமாதானப் பரிசு பெற்ற எல்லீ வீஸல், ஒபெரா பாடகர் லூஸியானா பாவரோட்டி, நடிகர் மைக்கல் டக்ளஸ் போன்றோர் அலங்கரிக்கும் சிறப்பு வாய்ந்த ஐ.நா. சபையின் சமாதானத் தூதுவர் பதவியை இன்று வகிக்கும் ஒரே இந்தியர், ஆசியர், விஜய் அமிர்தராஜ்.

தென்றல் வாசகர்களுக்காக ஒரு இனிய காலைப் பொழுதில் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கருகில் இருக்கும் அவரது 'ஃபர்ஸ்ட் ஸர்வ் எண்டர்டெயின்மெண்ட்' அலுவலகத்தில் சந்தித்தபோது...

விஜய்: ஐ.நா.வின் சமாதானத் தூதுவராகப் பொதுச் செயலாளர் கோஃபி ஆனன் அவர்களால் 2001ல் நியமிக்கப்பெற்றேன். அன்றிலிருந்து அவர்களின் அறுபது அங்கங்களின் சார்பாக ஐ.நா.வின் சமாதானத் திட்டங்களையும், கொள்கைகளையும் பரப்பப் பல நாடுகளுக்குச் சென்று வருகிறேன். உதாரணமாக, வளர்ச்சி முகாம்களுக்காக (United Nations Development Programme) இலங்கை, பாஸ்னியா நாடுகளுக்குச் சென்று வந்தேன். சென்ற ஆண்டு ரோமில் நடந்த ஐ.நா.வின் உணவு, விவசாயக் கழகத்தின் (Food and Agricultural Organization) மாநாட்டுக்கு அழைக்கப் பெற்றேன். டிசம்பரில் லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்ற யுனிஸெ·ப்பின் (UNICEF) ஐம்பதாவது ஆண்டு விழாவில் பங்கேற்றேன்.

தென்றல்: பல நாடுகளுக்குச் சென்று பல தரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கும்போது எவ்வாறு உணர்கிறீர்கள்?

வி: பலவித அனுபவங்களைத் தந்திருக்கின்றன. முதலாவதாக, ஐ.நா.வின் பங்கு உலகளவில் மிகக் குறைவாகவே உணரப்படுகிறது. ஆனால் அந்நிறுவனத்தின் பணிகள் மகத்தானவை. இவர்களின் கடும் உழைப்பை, அவற்றின் நல்விளைவுகளை நான் நேரிடையாகப் பார்க்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காகக் கடினமான, ஆபத்தான பகுதிகள் என்றும் பாராமல், எங்கும் சென்று பணி செய்வர்; ஒருவரே ஐந்து பேரின் வேலையைச் செய்வார். இவற்றிலெல்லாம் பங்கேற்பதைக் கிடைத்தற்கரிய அனுபவமாகக் கருதுகிறேன்.

அடுத்தது, ஐ.நா.வின் பணிகள் பல, உலகின் மூலை முடுக்குகளில் பரவிக்கிடப்பதால் இவை பலரின் கவனத்தைக் கவர்வதில்லை. ஆனால், அவர்களின் சீரிய பணி அடிமட்டத்தில் உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு உயர்த்துகிறது என்பதைக் கண்கூடாகக் காண்கிறேன். எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரே நேரத்தில் தீர்வு காண முடியாது. பலனுக்குக் காத்திராமல் விலகுவது, 'விளையாட்டுப் போட்டி தொடங்குவதற்கு முன்னரே ஆட்டத்தின் முடிவைத் தீர்மானிப்பது' போலாகும். சிறுதுளி பெரு வெள்ளம் என்பதற்கேற்ப, ஒவ்வொரு துளியாக, ஒவ்வொரு டாலராக, ஒவ்வொரு மனிதனாக நேசக்கரம் நீட்டி உதவும் ஐ.நா.வின் பணியைக் குறைத்து மதிப்பிடலாகாது.

என்னை மிகவும் பாதித்தது என்னவென்றால், இவ்வாறான நற்பணிகளும், பொருளுதவியும் விரயமாகும் விதம்! சற்றே சிந்தித்துப் பாருங்கள் - மனிதனால் மனிதனுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் அதன் விளைவாக ஏற்படும் கஷ்ட, நஷ்டங்களையும் நிவர்த்திப்பதற்கே ஐ.நா. போன்ற சேவை நிறுவனங்களின் பெரும்பாலான முயற்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. போர், மதம் சம்பந்தப்பட்ட கலகங்கள் போன்றவை மூலம் நமக்கு நாமே துன்பங்களை வரவழைத்துக் கொள்கிறோம். பிறகு அவற்றை நிவர்த்திக்க ஐ.நா. போன்ற நிறுவனங்களின் அரிய வளங்களைச் செலவிடுகிறோம்! இத்தகைய அனாவச்¢ய நிகழ்வுகளைத் தவிர்த்தால் இச்சக்தியை வேறு அத்தியாவசிய காரணங்களுக்குச் செலவிட முடியும். இயற்கை நிகழ்வுகளான நில நடுக்கம், வெள்ளம் போன்றவற்றின் விளைவுகளை எதிர் கொள்ளவும்; எய்ட்ஸ், காச நோய், நீரிழிவு நோய், ஸ்டெம் ஸெல் போன்றவற்றின் ஆராய்ச்சிகளுக்கும் இவை பயன்படும். அவ்வாறில்லாமல் ஐநா போன்ற ஸ்தாபனங்களின் நற்பணிகளும், பொருள்களும் விரயமாவதை நினைக்கும் பொழுது எனக்குக் கோபம் வருவது நியாயந்தானே?

தெ: குஜராத் நிவாரணம், எய்ட்ஸ¤க்கு எதிரான சேவை போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தீர்கள், இவையெல்லாம் இன்றும் தொடர்கின்றனவா?

வி: முன்பு இவற்றிலெல்லாம் தனி மனிதனாக ஈடுபட்டேன், இன்று ஐ.நா.வின் பிரதிநிதியாகச் செயல்படுகிறேன். வாரம் இரு நிகழ்ச்சிகளுக்காவது அழைப்பு வருகிறது. செய்யப்போவது செய்துகொண்டிருப்பதைவிட மிக முக்கியமானதாகத் தோன்றும் (no cause is greater than the next cause); நேரத்தைத் திட்டமிடுவதில்தான் சூட்சுமம் உள்ளது.

தெ: இத்தனைக்கும் நடுவே மாதந்தோரும் தவறாமல் சென்னையில் பெற்றோருடன் சில நாட்கள் செலவிடும் பாசமிகு பிள்ளையாகவும் இருந்துகொண்டு, எல்லாவற்றிலும் வெற்றி பெற எவ்வாறு சாத்தியமாகிறது?

வி: எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்ற உணர்வு மட்டும் இருந்தால் போதாது. நான் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொன்றையும் மிக ஆழமாக நேசிக்கிறேன், இந்த ஒரு ஆழ்ந்த பற்றே எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிறது என்று நினைக்கிறேன்.

தெ: 1992ஆம் ஆண்டிலிருந்து ஆசியாவின் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் விம்பிள்டன், கிராண்ட் ஸ்லாம் போன்றவற்றின் விளையாட்டுச் சிறப்பு வர்ணனையாளராகப் பங்கேற்று வருகிறீர்கள். டென்னிஸைத் தவிர கால்ஃப் விளையாட்டிலும் நீங்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

வி: கால்·ப்பிலும் ஆழ்ந்த ஆர்வம் உண்டு. விளையாடுவது, வர்ணனை செய்வது இரண்டிலுமே அனுபவித்து ஈடுபடுகிறேன். அமெரிக்காவின் முதன்மைப் போட்டியான அகஸ்டா கால்·ப் மாஸ்டர்ஸ் (Augusta Golf Masters) சுற்றிற்கு வர்ணனை செய்வதைப் பெருமையாகக் கருதுகிறேன். பாட்மிண்டன், மற்ற விளையாட்டுக்களிலும் ஈடுபாடு உண்டு; நேரம்தான் கிடைப்பதில்லை.

தெ: இவையெல்லாம் டென்னிஸ¤க்குப் பின் வந்த ஆர்வமா, அல்லது சிறு வயது முதலே வந்தவையா?

வி: என் விளையாட்டு வாழ்க்கை பாட்மிண்டன், டேபிள் டென்னிஸில்தான் துவங்கியது; டென்னிஸ் பிற்பாடு வந்தது. சிறுவயதில் நான் மிகுந்த நோய்வாய்ப்பட்டிருந்தேன். உடல் தேறுவதற்காகவே விளையாட ஆரம்பித்தேன். என் பத்தாம் வயதுவரை பல மாதங்கள் மருத்துவமனையில் கழிந்திருக்கின்றன. என் தாய் பள்ளிக்குச் சென்று பாடங்களைக் குறிப்பெடுத்துக் கொண்டு வந்து ஆஸ்பத்திரியில் எனக்குக் கற்றுக் கொடுப்பார். இளமைக் காலத்தில் உடல் ஆரோக்கியமென்பது தொடர்ந்த போராட்டமாகவே இருந்தது - டென்னிஸ் ஆடுவதும், பள்ளிக்குப் போவதுமே பெரிய சவாலாகத் தோன்றியது. பின்பு, உடல் நிலை காரணமாக டென்னிஸ் அன்றாட வாழ்க்கையில் முன்னுரிமை பெற்றது. நான் நன்றாக ஆட ஆரம்பித்ததால் அது என் வாழ்க்கையையே ஆக்கிரமிக்கத் துவங்கியது. மிகக் குறுகிய காலமே ஈடுபடக் கூடிய விளையாட்டுத் துறையில் அதிர்ஷ்டவசமாக நான் மிக நீண்ட காலம் தொடர்ந்து ஈடுபட முடிந்தது.

தெ: ஆமாம், டேவிஸ் கோப்பை போட்டிகளில் இருபது வருடம் தொடர்ச்சியாக நீங்கள் ஆடியது வேறெவரும் சாதிக்காத ஒன்று. விம்பிள்டன் போட்டிகளிலும் தொடர்ந்து பல ஆண்டுகள் விளையாடினீர்கள் அல்லவா?

வி: 1990 வரை விம்பிள்டனில் ஆடினேன்; 1973, 1981 ஆண்டுகளில் கால் இறுதிப்போட்டி வரை சென்றேன். டேவிஸ் கோப்பையின் மேல் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. அது தனிப்பட்ட போட்டியாளர்களில் யார் சிறந்தவர் என்பதைத் தீர்மானிக்கும் போட்டியல்ல, ஒரு நாட்டின் பிரதிநிதியாக விளையாடக் கிடைக்கும் அரிய சந்தர்ப்பம். இந்த ஓர் உணர்வே மிக அற்புதமானது. அதனால்தானோ என்னவோ நான் தொடர்ந்து 1970 லிருந்து 1988 வரை டேவிஸ் கோப்பை போட்டிகளில் ஈடுபட்டேன் - 1974, 1987 வருடங்களில் இந்தியா இறுதிப் போட்டி வரை சென்றது.

தெ: ஒரு காலகட்டத்தில் ABC of Tennis (Amritraj, Borg, Connors) என்று அழைக்கப்பட்ட மூவேந்தரில் ஒருவர் நீங்கள். 1973ல் விம்பிள்டன் கால் இறுதிப் போட்டியில் ஜிம்மி கானர்ஸை வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு மிகக் குறுகிய இடைவெளியில் (2-6, 5-7, 6-4, 6-3, 6-2) நழுவியதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

வி: இன்று வரை பலமுறை இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்பட்டிருக்கிறது - (சிரித்துக் கொண்டே) சிலரால், அன்பு கலந்த விசாரிப்போடு; சிலரால் சற்றே கடுமையாக. அந்தப் போட்டிக்குப் பிறகு மூன்று, நான்கு மாதங்கள் நான் உறங்கவில்லை! இருமுறை அமெரிக்க ஓபன், இருமுறை விம்பிள்டனில் கால் இறுதிப் போட்டிகளில் பங்கேற்றேன். பாட் காஷ் (Pat Cash) அவரது டென்னிஸ் வாழ்க்கையில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றார், ஆனால் அதில் ஒன்று விம்பிள்டன். இதற்கெல்லாம் சிறிது அதிர்ஷ்டமும் தேவை. 'நான் விம்பிள்டன் கோப்பையை வென்றிருந்தால் என் வாழ்க்கைப் பாதை மாறியிருக்குமா?' - இன்று நினைத்துப் பார்த்தால், நிச்சயமாக சிறிது கூட மாறியிருக்காது என்று உணர்கிறேன். நம் நாட்டிற்காக விம்பிள்டனில் வெல்ல வேண்டும் என்னும் என் விருப்பம் பூர்த்தி அடைந்திருக்கும் - நான் விம்பிள்டனோ, டேவிஸ் கோப்பையோ ஆடும்போது, இந்தியாவிலும், அயல் நாட்டிலும் வாழும் இந்தியர்களுக்காகவே ஆடினேன்; எனக்காக என்றும் இல்லை. அந்த குறிக்கோள் நிறைவேற்றப்பட்டிருக்கும். பல கால முயற்சியின் பயனாக வெற்றிக்கு மிக அருகில் சென்று அது கைகூடாமல் போனது ஒரு வேகத்தடை போன்றது, சிறிது துரதிருஷ்டவசமானதே. அதைப் பெரிய இழப்பாகக் கருதவில்லை. நான் என்றுமே கோப்பையின் நிறைவான பாதியைத்தான் பார்ப்பேன்.

தெ: வெற்றி வெறி (killer instinct) என்கிறார்களே - அது அவசியமானது என்று கருதுகிறீர்களா?

வி: நிச்சயமாக... மெக்கென்ரோவிடம் அது ஒரு வகையில் வெளிப்பட்டது, போர்க்கிடம் வேறு விதமாக. பதினாறு ஒற்றையர் போட்டிகளிலும், பதின்மூன்று இரட்டையர் போட்டிகளிலும் நான் வென்றிருக்கிறேன் என்றால், அதற்கு அந்த வெறி மிக அவசியமானதாய் இருந்தது.

தெ: விளையாட்டில் ஆர்வமுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு என்ன சொல்ல விழைகிறீர்கள் - ஆர்வமா, திறமையா, எது முக்கியம்?

வி: இதில் இரண்டு மூன்று விஷயங்களைக் குறித்துக் கொள்ள வேண்டும். முதலாவதாக, உங்கள் மகனோ மகளோ ஒரு விளையாட்டில் உண்மையான ஆர்வத்துடன் ஈடுபட்டால், அதற்கு முழுமையான ஊக்கமளிக்க வேண்டும். உதாரணத்திற்கு, உங்கள் குழந்தை ஐஸ் ஹாக்கியில் ஈடுபாடு கொண்டிருந்தால், அதற்கு நீங்கள் ஓராயிரம் சதவிகிதம் உறுதுணையாக இருக்க வேண்டும். அதில் அவருக்குத் திறமை இல்லாமல் இருக்கலாம், நடைமுறைக்கு ஒத்துவராதிருக்கலாம். அவர்களே அதை உணரும்வரை நீங்கள் அவர்களின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்புத் தர வேண்டும். 'கால்பந்து விளையாடிப் பாரேன்' என்று வேறு திசையில் வேண்டுமானால் அவர்களை வழி நடத்த முயற்சிக்கலாம். பெற்றோர்களின் பக்கபலம் இருந்தால் ஒரு குழந்தைக்கு விளையாட்டை விட மகிழ்ச்சி தருவது உலகில் வேறெதுவும் இல்லை; விளையாட்டில் முழு கவனத்துடன் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதே வெற்றி தோல்விகளைவிடச் சிறந்த மன நிறைவைத் தருவதாகும்.

தெ: விளையாட்டைப் போல் சங்கீதம், நடனம் போன்ற கலைகளிலும் ஈடுபடலாமே?

வி: நிச்சயமாக. விளையாட்டைப் போல் சங்கீதமும் என் மனதிற்கு இதமளிப்பது. விளையாட்டு, பாட்டு இவை நாடு, மொழியைக் கடந்து மக்களை ஒருங்கிணைக்கின்றன. எல்லோரும் சேர்ந்து டென்னிஸ், கூடைப்பந்து ஆடுவது, சங்கீத நிகழ்ச்சிக்குச் செல்வது, சேர்ந்து பியானோ வாசிப்பது - இவற்றை விட ஒரு குடும்பத்திற்கு மகிழ்ச்சி தரக் கூடியது வேறென்ன? சங்கீதமும், விளையாட்டுமே உலகின் தலைசிறந்த இணைப்புப் பாலங்கள் என்று நான் நம்புகிறேன்.

எனக்குச் சிறந்த கல்வி ஆசானாய் இருந்தது விளையாட்டே. உங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டில் ஆர்வமிருந்தால், தகுந்த ஊக்கமளியுங்கள். அவர்களின் ஆரம்ப காலக் கனவுகளுக்குக் கிரியா ஊக்கியாய் இருங்கள். அவர்கள் பெரிய தொழில்முறை வீரர்களாய் வராவிட்டாலும், அவர்களுடைய பள்ளிக்கோ, கல்லூரிக்கோ ஆட முயற்சி செய்யட்டும்.

தெ: இங்கு இருக்கும் இந்தியப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மருத்துவராகவோ பொறியாளராகவோ, வழக்கறிஞராகவோ வர வேண்டும் என்றே விரும்புகிறார்கள். டிஸ்க் ஜாக்கி போன்ற தொழில்களை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அவர்களின் இந்த அணுகுமுறையில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?

வி: நம் சமுதாயத்தையும், கலாசாரத்தையும் மாற்ற நான் விழையவில்லை. நம் பார்வையைச் சற்றே அகலப்படுத்த முயற்சிக்கிறேன். சிறந்த தொழில்முறைக் கல்விக்கான ஏற்பாட்டுடன் சங்கீதம், விளையாட்டு போன்ற கலைகளில் ஈடுபடுவதே நம்மை முழுமைபெறச் செய்கிறது. தினமும் பலமணி நேரம் இவற்றில் ஈடுபட வேண்டும் என்பது அவசியமல்ல; மன மகிழ்ச்சிக்காகவும், உடற்பயிற்சிக்காகவும் சிறிது நேரம் ஈடுபட்டாலே போதும். சிறு வயதிலேயே கல்வியுடன், ஒரு விளையாட்டையோ, கலையையோ கற்றுக்கொள்ள ஆரம்பித்தால், இவை நம் வாழ்வுடன் இணைந்து விடும்; எதிர்கால சந்ததியினரையும் வழி நடத்தும்.

தெ: நம் குடும்பங்கள் சிறு வயதில் ஆர்வத்துடன் இவற்றை ஊக்குவிக்கின்றன. பின்பு, விளையாட்டுகளைக் குறைத்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது.

வி: உண்மைதான், என் மகன் பிரகாஷே இதற்குச் சிறந்த உதாரணம். அவர், இங்கு பெயர் பெற்ற பள்ளி ஒன்றில் படித்துக் கொண்டிருந்தார். பதினொன்றாவது, பனிரெண்டாவது வகுப்பில் டென்னிஸில் நான் எதிர்பார்த்ததைவிடப் பத்தாவதிலேயே அதிகம் சாதிக்க ஆரம்பித்துவிட்டார். அதனால் பள்ளித் தலைவரிடம், பிரகாஷ¤க்கு ஆசியச் சுற்றில் ஆட சில வாரங்கள் விடுப்பு வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். திரும்ப வந்து பாடங்களை விட்ட இடத்திலிருந்து தொடர்வது கடினமாயிருக்கும்; ஆயினும் ஈமெயில் மூலம் தொடர்பு வைத்துக் கொண்டு கல்வியைத் தொடர்வார், பரீட்சையும் எழுதுவார் என்று உறுதியளித்த பிறகு பள்ளி நிர்வாகம் அனுமதியளித்தது.

திரும்ப வந்து, காலை மூன்று மணி வரை பள்ளிப் படிப்பை முடித்து விட்டு ஐந்து மணிக்கு டென்னிஸ் பயிற்சி செய்து விட்டு, பிரகாஷ் பள்ளிக்குச் செல்வார். எந்த வகையிலும் அது அவருக்கு நல்லதல்ல என்று உணர்ந்த நான், முக்கியமான ஒரு முடிவெடுக்கும் கட்டாயத்தில் இருந்தேன். ஒரு இந்தியத் தந்தையான நான், அவரது கல்லூரிப் படிப்புக்கு வழிவகுக்கும் அவசியத்தை உணர்ந்து சிறந்த சில பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் உள்ள என் நண்பர்களைத் தொடர்பு கொண்டேன். பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு வீட்டுக் கல்விக்கு ஏற்பாடு செய்தேன். எனக்கு இவ்வாறு செய்வதிலெல்லாம் முன் அனுபவம் எதுவும் இல்லை, ஆயினும் துணிந்தேன். என் மகனுக்கு எது முக்கியமோ அதைச் செய்வதில் தீவிரமாக இருந்தேன். வீட்டுப் படிப்பை முடித்தவுடன் பல கல்லூரிகள் முழு உதவித்தொகையுடன் அவருக்கு இடமளிக்க முதல் வருடத்தில் அவர், தேசியக் கல்லூரிகள் விளையாட்டுக் கழகப் (National Collegiate Atheletic Association) போட்டியில் தனது பல்கலைக்கழகத்திற்கு வெற்றி தேடித்தந்தார். பல்கலைக் கழகத்தின் 'மிக மதிக்கத்தக்க ஆட்டக்காரர்' (Most Valued Player) என்னும் பட்டம் பெற்றார். கலாமஸ¤ (Kalamazoo) நகரில் 2002ல் நடந்த அமெரிக்க ஜூனியர் போட்டியில் வெற்றிபெற்று அமெரிக்காவின் முதன்மையான ஜூனியர் டென்னிஸ் வீரராய் விளங்கினார். இச்சாதனையைப் புரிந்த முதல் அயல் இனத்தவரும் (ethnic) அவரே.

பிரகாஷ் மும்முரமாக டென்னிஸில் ஈடுபட ஆரம்பித்தவுடன், மற்றொரு பொறுப்பு என்னைத் தொற்றிக் கொண்டது. கல்லூரியில் திரும்ப எப்பொழுது வேண்டுமானாலும் சேரலாம், டென்னிஸை இருபத்தியெட்டு வயதில் ஆட முடியாது என்றாலும், அவரது கல்லூரிப் படிப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் ஒரு தந்தையின் கவலை எனக்குள் இருந்தது; அவரது பல்கலைக் கழகத்தை அணுகினேன். அவர்கள், பிரகாஷ் மற்றுமொரு ஆண்டு பல்கலைக்கழகத்திற்காக டென்னிஸ் ஆடினால், பின் எப்பொழுது வேண்டுமானாலும் கல்லூரிக்குத் திரும்பலாம் என்று அனுமதி அளித்தனர். இப்பொழுது அவர் முழு நேர விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறார்; இந்தியாவிற்காக டேவிஸ் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்கிறார்.

தெ: பிரகாஷ் இந்தியாவில் விளையாடுவதிலும் இங்கு விளையாடுவதிலும் மைதானங்கள், விளையாட்டுச் சூழல்கள் இவற்றில் வேறுபாட்டை உணர்கிறாரா?

வி: இப்பொழுது இந்தியாவில் விளையாட்டு மைதானம், வசதிகள் போன்றவை சர்வதேசத் தரத்திற்கு இருப்பதால் பெரிய வேறுபாடு இல்லை. லாஸ் ஏஞ்சலஸிலும் சென்னையிலும் வெயில்கூட ஒரே மாதிரிதான் இருக்கிறது. நெடுந்தூரப் பயணங்களுக்குப் பழக்கிக் கொள்வதுதான் அவசியம்.

தெ: உங்கள் மகன் விக்ரமிற்கும் டென்னிஸில் ஆர்வமுள்ளதா?

வி: விக்ரமிற்குப் பதினாறு வயதாகிறது. நன்றாக உருவாகிக் கொண்டிருக்கிறார். அவர் பள்ளிக்காக டென்னிஸ் விளையாடுகிறார். நல்ல கூடைப்பந்து வீரராகவும் உருவாகிக் கொண்டிருக்கிறார்.

தெ: இன்று இருக்கும் இந்திய இளைஞர்கள் நீங்கள் தொட்ட சிகரத்தைத் தொடுவார்கள் என்று கருதுகிறீர்களா?

வி: நிச்சயமாக. என்னைப் போன்றவர்கள் பெற்ற வெற்றி அவர்களுக்கு ஊக்கத்தை அளிப்பதால்தான் பல இளைஞர்கள் இன்று தொழில்முறை விளையாட்டு வீரர்களாய் உருவாகி வருகிறார்கள் என்று நம்புகிறேன். நாங்கள் விளையாடிய காலகட்டத்தில், நானும் என் சகோதரர் ஆனந்தும் மட்டுமே தொழில் முறையில் விளையாடியவர்கள். இன்று காலம் மிகவும் மாறிவிட்டது. தொலைக்காட்சி, விளையாட்டைச் சார்ந்த பல நிகழ்ச்சிகள், வீரர்களை ஊக்குவிக்க முன்வரும் வணிகநிறுவனங்கள், கூட்டமைப்புக்கள் போன்றவற்றால் தகுந்த சூழல் உருவாகிக் கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. அதே சமயம், போட்டியும் கடுமையாகியுள்ளது. நாம் நன்றாக முன்னேறி வருகின்றோம். ஆனால் உலகத் தரத்திற்குப் போட்டியிட இன்னும் உத்வேகம் தேவை.

(சற்றே சிந்தனையில் ஆழ்ந்தவராக) எங்கள் காலத்தில், நானும் சுனிலும் (கவாஸ்கர்) தத்தம் துறையில் சிறந்தவர்கள் என்று கருதப்பட்டோம். நாங்களிருவரும் இன்றுவரை நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறோம். நாங்கள் ஆடும்போது, நான் வெற்றி பெற வேண்டும் என்று அவரும், அவர் வெற்றி பெற வேண்டும் என்று நானும் வாழ்த்திக் கொள்வோம் - ஒருவர் வெற்றி பெற்றால் மற்றவர் மீது இருக்கும் மக்கள் கவனம் திசை திருப்பப்பட்டு பாரம் குறையுமல்லவா!

தெ: ஒரு பிரிட்டானியா, ஒரு எம்.ஆர்.எ·ப் விளையாட்டுப் பயிற்சிக்கு ஊக்கமளித்தது போல், நம் நாட்டின் மற்ற பெரிய நிறுவனங்கள் முன்வருவதற்குத் தயாராய் உள்ளனவா?

வி: நம் நாட்டில் உள்ள ஆயிரம் பெரிய நிறுவனங்கள் உதவ முன் வந்தால் போதும். அவர்கள் விளையாட்டுத் துறையினருடன் இணைந்து ஒரு செயல் திட்டத்தை உருவாக்கினால் எதையும் சாதிக்கலாம் - எங்கள் பிரிட்டானியா அமிர்தராஜ் டிரஸ்ட் (BAT) அதற்கு சாட்சி. நம்மிடம் அதற்கு வேண்டிய மனித வளம் நிறைந்திருக்கிறது. விளையாட்டுத் துறையில் உலக அளவில் போட்டியிட்டு வெற்றிபெற அதற்கான திறமையும் உந்துதலும் மிக முக்கியம். இதற்கெல்லாம் தனியார் முதலீடு அவசியம். என் வாதம் என்னவென்றால் நாட்டில் உள்ள ஐம்பது, நூறு பெரிய நிறுவனங்கள், தங்களுக்கு விருப்பமான ஒரு திட்டத்தில் முதலீடு செய்தால் உலக அரங்கில் நாம் நிச்சயமாக முன்னணியில் நிற்போம்.

லியாண்டர் பயஸ் போன்றவர்களை உருவாக்கிய பிரிட்டானியா அமிர்தராஜ் டென்னிஸ் அகாடமி, தனது நடிப்பு ஆர்வம், பழைய தமிழ் சினிமாப் படங்கள், கிளிண்டன் உட்பட்ட அமெரிக்க அதிபர்களுடனான தனது உறவு என்று இன்னும் பலப்பல கோணங்களைப் பற்றிச் சுவாரசியமாகப் பேசினார் அமிர்தராஜ். அவை அடுத்தமாதத் தென்றலில் தொடரும்...

சந்திப்பு: உமா & வெங்கடராமன்
புகைப்படம்: ஸ்ரீராம்

******


விளையாட்டின் அற்புதம்

"நினைத்துப் பாருங்கள், முன் அறிமுகமில்லாத நீங்களும் நானும் தாய்லாந்தில் ஒரு பூங்காவில் நான்கு மைதானம் தள்ளி டென்னிஸ் ஆடிக் கொண்டிருக்கிறோம். உங்கள் ஆட்டம் எனக்குப் பிடித்து விடுகிறது. அதுபோல் உங்களுக்கும் என் ஆட்டத்தைப் பிடிக்கிறது. அப்பொழுது இருவருமே நினைத்துக் கொள்கிள்றோம், 'அடடா, இவருடன் இரட்டையர் (doubles) ஆட்டம் ஆடினால் நன்றாக இருக்குமே' என்று. ஒருவரின் மொழி மற்றவருக்குப் புரியாத நிலையிலும், சேர்ந்து உணவு சாப்பிடும் அளவிற்கு நெருங்கி விடுவோம். அதுவே விளையாட்டின் அற்புதம்."

******


விளையாட்டுத் துறையில் அரசு குறுக்கிடக் கூடது

"விளையாட்டுத் துறையில் அரசு சம்பந்தப்படவே கூடாது என்பதே என் நிலைப்பாடு. அது அனாவசிய குறுக்கீடுகளில்தான் போய் முடியும். மேலை நாடுகளில் இருப்பது போல் பெரிய நிறுவனங்கள் பயிற்சிக் கூடங்களை நிறுவி சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும். அரசு தலையீடு இருந்தால் வீரர்கள் முன்னிலைப்படுத்தப்பட மாட்டார்கள்."

******


குழந்தைகளை அடிக்கடி இந்தியாவுக்குக் கூட்டிப் போங்கள்

"பிரகாஷ் (விஜய் அமிர்தராஜின் மகன்) இங்கு பிறந்தாலும் தன்னை இந்தியராகவே உணர்கிறார். இங்கு வளரும் பல இந்தியக் குழந்தைகளுக்கு இந்தியாவைப் பற்றி அதிகமாகத் தெரியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. வளரும் வயதில் குழந்தைகளைக் கூடிய மட்டும் அடிக்கடி இந்தியாவிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு நம் குழந்தைகள் சொந்த பந்தங்களுடன் நேரம் செலவிடுவது அவசியம். பிரகாஷ¤ம், விக்ரமும் என் பெற்றோருடனும், என் மனைவியின் பெற்றோருடனும் நிறைய நேரம் செலவிட்டிருக்கின்றனர். இந்தியா என்றால் அவர்களுக்கு உயிர்."

******

© TamilOnline.com