தேவை பொறுமை
அமெரிக்காவில் புதிய அதிபர் பதவியேற்றதும், சில நாட்களுக்கு (100 என்று ஞாபகம்) செய்தியாளர்கள், எதிரணியினர் ஆகியோர் ஒரு குறையும் சொல்லாமல் இருப்பார்கள். இந்தியாவில் இந்தப் பழக்கமில்லை. ஆனாலும் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை மிகக் கடுமையான எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டியதாகி விட்டது. எனக்கென்னவோ தேர்தலில் தோற்ற எரிச்சலில் முட்டுக் கட்டை போடுவதாகவே தோன்றுகிறது. கச்சா எண்ணெயின் கன்னாபின்னா விலை உயர்வில் தொடங்கி, சற்றுப் பொய்த்துப் போன வானம் வரை பல பிரச்சினைகள் நெடுநோக்குடன் தீர்க்கப்படவேண்டிய நிலையில், இவ்வாறு நாடாளுமன்றம் செயல்படாமலிருப்பது (அல்லது செயலிழக்க வைக்கப்பட்டது) நாட்டுக்கு நல்லதல்ல. இருசாராரும் சற்றுப் பொறுமையாக யோசித்துச் செயல்பட்டால் நன்றாக இருக்கும்.

அமெரிக்க அதிபல் தேர்தல் அருகில் வர வர, பிரச்சாரத்தின் தரம் தாழ்வது நன்றாகத் தெரிகிறது. மக்களாட்சி என்பதா, அல்லது மக்களை மக்குகளாகக் கருதும் முயற்சி என்பதா, தெரியவில்லை. என்றோ முடிந்த வியட்நாம் யுத்தத்தின் எதிரொலி இன்னும் தேர்தல் பிரசாரத்தில் கேட்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் அந்த யுத்தத்தில் அமெரிக்காவின் நிலை சரியா என்ற முக்கியமான கேள்வியை அலசுவதற்கு வெகு சிலரே தயாராக உள்ளனர்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் முடிந்து விட்டன. ஆரம்பிக்கும் முன்னர் இந்தியாவிலிருந்து வீர வசனங்களுடன் சென்ற அனைவரும். வாலையும். வாயையும் சுருட்டிக் கொண்டு எப்போதும் போல் ஒன்றரைப் பதக்கங்களுடன் சிலபல சட்டவிரோத மருந்துத் தகராறுகளுடனும் வெற்றிகரமாக திரும்பி வந்து சேர்ந்துள்ளார்கள். மிகவும் வருத்தமாக இருக்கிறது.

பி. அசோகன்,
செப்டம்பர் 2004

© TamilOnline.com