கனடாவில் நடந்த காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, அமெரிக்காவிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார் தமிழகச் சட்டப் பேரவைத் தலைவர் காளிமுத்து. செப்டம்பர் 18, 2004 அன்று மதியம் 2 மணியளவில், யூனியன் சிட்டி நூலகத்தில், சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றத்தின் சார்பாக இவருக்கு ஒரு வரவேற்பு அளிக்கப்பட்டது.
வளைகுடாப் பகுதியில் ஒரு நாள் மட்டுமே இருந்த பொழுதிலும், இப்பகுதி தமிழ் மக்களைச் சந்திக்கும் பேரார்வத்தால், நகரைச் சுற்றிப் பார்ப்பதைத் தவிர்த்து விட்டு, நிகழ்ச்சிக்கு சபாநாயகரும் அவரது மனைவியும் வருகை தந்திருந்தனர். தமிழ்மன்றத் தலைவர் மணிவண்ணன் சபாநாயகரைக் கூடியிருந்த உறுப்பினர் களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். தமிழில் முனைவர் பட்டம் பெற்ற காளிமுத்து, எம்.ஜி.ஆர். அமைச்சரவைகளில் விவசாயத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
பிறகு சொற்பொழிவாற்றினார் காளிமுத்து. தமிழின் சிறப்புக் குறித்தும், தமிழர்கள் கடல்கடந்து வந்தும் தாய் மொழிக்காக சிறப்பான தொண்டாற்றுவது குறித்தும், பெருமிதம் பொங்கப் பேசினார். தமிழ்த் தொடர்பில்லாமல் போனால் புலம்பெயர்ந்த தமிழர்கள், பிஜித்தீவுத் தமிழர்களைப் போல் தங்கள் அடையாளத்தை வெகு சீக்கிரம் இழந்து விடுவார்கள் என்று மன்றத்தலைவர் மணிவண்ணன் தன்னிடம் குறிப்பிட்டதைச் சொன்னார். புலம்பெயர்ந்த பிஜித்தமிழர்கள் தங்கள் பெயர்களிலும் தமிழை இழந்த அவலத்தைக் குறிப்பிட்டார். தமிழ்ப் பெயர்களைப் பற்றிப் பேசும்போது பாவேந்தர் பாரதிதாசனின் கண்ணகி புரட்சிக்காப்பியத்திலிருந்து ஒரு பாடலை நினைவுகூர்ந்தார்.
"அன்பரசி ஆணழகு கன்னல் பொன்னன், ஆடுமயில் அறிவழகன், அன்னம் நல்லான்" என்று தொடங்கும் அந்தப் பாடல் கோவலன், கண்ணகியின் திருமணத்திற்கு வருகை தந்திருந்த ஒரு நூறு விருந்தினர் களின் செந்தமிழ்ப் பெயர்களைக் கடகட வெனப் பொழிந்தது அவையினரைப் பெரிதும் வியக்க வைத்தது. பிறகு கலந்து கொண்டவர்களின் கேள்விகள் பல வற்றிற்கும் பொறுமையாகப் பதிலுரைத்தார். சேது சமுத்திரத் திட்டம், தமிழ் செம் மொழியானதின் முக்கியத்துவம் போன்றவை குறித்த கேள்விகளுக்குப் பதில் வழங்கினார். தமிழ் மன்றம் சார்பாகவும், பிற அமைப்புக் களின் சார்பாகவும் வைக்கப் பெற்ற கோரிக்கைகளை ஏற்று, தமிழ்நாடு திரும்பியதும் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
சடகோபன் திருமலைராஜன் |