திசை மாறும் போயஸ் தோட்டத்துக் காற்று!
மத்தியில் மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று 3 மாதங்கள் முடிவடைந்த நிலையில் முதன்முறையாக ஜெயலலிதா அவரை தில்லியில் நேரில் சந்தித்து தமிழகத்தில் வறட்சி நிலைமையைப் பார்வையிடுவதற்காக மத்தியக் குழுவை விரைவில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதையடுத்து மத்திய, மாநில அரசுகளுக்கிடையே இதுவரை இருந்த சுணக்கமான நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

35 நிமிடங்கள் நடந்த சந்திப்பில், தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியை எடுத்துரைத்த முதல்வர் ரூ. 1,680 கோடி நிதி ஒதுக்குமாறும், 5.4 லட்சம் டன் உணவு தானியம் வழங்குமாறும் பிரதமரைக் கேட்டுக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் தமிழைச் செம்மொழியாகவும் மத்திய ஆட்சி மொழியாகவும் அறிவித்தல், திருக்குறளைத் தேசிய இலக்கியமாக அறிவித்தல், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது, கச்சத்தீவை மீட்பது, தமிழகத்துக்குக் கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு உள்ளிட்ட பலகோரிக்கைகளை வலியுறுத்தினார்.

தற்போதைய ஜெயலலிதாவின் தில்லி பயணத்தின் மூலம் இதுவரை மாநில அரசிற்கும், மத்திய அரசிற்கும் இடையே நிலவிய இறுக்கமான சூழ்நிலையில் கொஞ்சம் தளர்வு ஏற்பட்டதாகவே தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் தில்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா, அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியைத் தான் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை என்று கூறியிருப்பது மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள 12 மத்திய மந்திரிகளுக்கும் அ.தி.மு.க. அரசு ஒத்துழைப்புக் கொடுக்கும் என்று கூறியுள்ளதையும் கவனிக்க வேண்டும்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com