துள்ளாத மனமும் துள்ளும்...'' என்ற 'கல்யாணப் பரிசு' பாடலை யாரால் மறக்க முடியும்? அத்தனை சுகம்... பாடுபவரின் குரலின் இனிமை... அந்த லாவகம்... கேட்பவரை ஒரு கணம் மெய்மறக்கச் செய்யும். அந்தத் தேன் குரலுக்குச் சொந்தக்காரர் ஜிக்கி என்கிற ஜி. கிருஷ்ணவேணி. இவர் அண்மையில் தனது எழுபதாவது வயதில் மறைந்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, சிங்களம் என்று பலமொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடிய பெருமையைக் கொண்டவர். முதன் முதலாக தெலுங்குப் படத்தைச் சேர்ந்த பின்னணி பாடகி ஒருவர் ஹிந்திப் படத்திற்குப் பாடியது ஜிக்கிதான். 'பாதாளபைரவி' என்கிற தெலுங்குப் படத்தின் ஹிந்திப் பதிப்பிற்குப் பாடினார்.
ஜிக்கியின் சொந்த ஊர் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள சந்திரகிரி. தந்தை கஜபதி நாயுடு, தாயார் ராஜகாந்தம்மா. வேலைதேடி கஜபதி குடும்பத்துடன் சென்னைக்கு வந்தார். மகள் கிருஷ்ண வேணி சிறிய வயதிலேயே அருமையாகப் பாடும் குரல் வளத்தைக் கொண்டு விளங்கினார்.
ஜிக்கியின் மாமா தேவராஜ நாயுடு, கன்னடத் திரையுலகில் பிரபலமாக விளங்கிய குப்பி வீரண்ணாவிடம் உதவியாளராக இருந்தார். பின்னாளில் பாடகியாக பிரபலமடைந்தாலும் திரை யுலகில் ஜிக்கி நடிகையாகத்தான் உள்நுழைந்தார். 'பந்தல்லம்மா' என்கிற தெலுங்குப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு சிறுமி ஜிக்கிக்கு கிட்டியது. படத்தில் கதாநாயகியிடம் பாட்டுக் கற்கும் சிறுமியாக, சிறிய வேடத்தில் நடித்தார்.
பின்னர் ஞானசெளந்தரி என்ற படத்தில் பேபி ராஜாமணிக்காக இவரும், படத்தின் நாயகி எம்.வி. ராஜம்மாவிற்காக பி.ஏ. பெரியநாயகியும் பாடிய 'அருள் தரும் தேவமாதா' என்ற பாடல் மிகப் பெரிய வெற்றியைத் தர, தமிழகமெங்கும் ஜிக்கியின் தேமதுரக் குரல் ஒலிக்கத் தொடங்கியது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல மொழித் திரைப்படங்களில் ஜிக்கி பாடினார். அன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான சிங்களப் படங்களுக்கு தென்னிந்தியாவிலேயே படப்பிடிப்பு மற்றும் பாடல் பதிவுகள் நடந்தன. இதனால் ஜிக்கி சிங்களப் படங்களிலும் பாடும் வாய்ப்பைப் பெற்றார்.
இசையமைப்பாளரும், பாடகருமான ஏ.எம். ராஜாவை இவர் மணந்தார். ஸ்ரீதரின் 'தேன்நிலவு' ராஜாவிற்கு மிகப்பெரிய வெற்றியை அளிக்க, படத்தில் 'ஊரெங்கும் தேடினேன்...' என்கிற பாடல் ஜிக்கியின் குரலில் ஊரெங்கும் ஒலித்தது. வாழ்வில் தன்னால் மறக்கமுடியாத நிகழ்வு என்று அடிக்கடி ஜிக்கி கூறியது கணவர் ஏ.எம். ராஜாவின் மரணத்தைத்தான். ஆம்... கண் எதிரிலேயே ஒரு இரயில் விபத்தில் கணவர் இறந்துபோக துடிதுடித்துப் போனார் ஜிக்கி.
கணவரின் மறைவுக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இளையராஜாவின் இசையமைப்பில் தமிழில் சில படங்களில் பாடல்களைப் பாடினார். தன் இருபெண்களுடன் இணைந்து இசைக்குழு ஒன்றை அமைத்து பல ஊர்களில், அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்குச் சென்று மெல்லிசை நிகழ்ச்சிகளை நடத்திய அனுபவமும் இவருக்கு உண்டு. பிரபல தயாரிப்பாளர் வலம்புரி சோமநாதனின் படம் ஒன்றில் ஐந்து பாடல்களைப் பாடுகிற வாய்ப்பு இவருக்குக் கிடைத்ததும், ஒரே படத்தில் இத்தனை பாடல்களைப் பாடவைத்ததற்கு நன்றியாக படத் தயாரிப்பாளர் வலம்புரி சோமநாதனிடம் தனக்கான சம்பளத்தைக் குறைத்துத் தருமாறு கேட்டுக்கொண்டது இவரது உயரிய குணத்திற்குச் சான்று!
இந்தக் குயில் நம்மைவிட்டுச் சென்றாலும், குரல் நம் மனதில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.
தொகுப்பு: கேடிஸ்ரீ |