ஆட்சி நிர்வாகத்தை வெற்றி பெற்ற கட்சிகளே நடத்த வேண்டும்
உள்ளாட்சி, சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம் ஆகிய மக்கள் மன்றங்களுக்கு கிரிமினல்கள் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தடுப்பதை உறுதி செய்யும் விதத்தில் அரசியல் கட்சிகள் கூடிப் பேசி ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும். தேர்தல் சீர்திருத்தத்தின் அனைத்து அம்சங்களையும் அலசி ஆராய்ந்து அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும். அதுபோல் பிரச்சனைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

ஆட்சியைப் பிடிக்கும் உரிமை அனைத்துக் கட்சிகளுக்கும் உண்டு. ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி நிர்வாகத்தை வெற்றி பெற்ற கட்சிகளே நடத்த வேண்டும். இது வாக்காளர்கள் ஆட்சியாளர்களுக்கு அளிக்கும் புனிதமான பொறுப்பு.

மன்மோகன்சிங், இந்தியப் பிரதமர், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்ததிலிருந்து...

******


எதிர்காலத்தில் கணினிக்கல்வித் திட்டத்தைத் செயல்படுத்துவதற்கான ஒரு புதிய திட்டத்தை மத்திய அரசுக்குத் தமிழகம் அளிக்க இருக்கிறது.

தமிழகம் கணினிக்கல்வியில் முதலிடம் வகிக்கிறது. அத்துடன், சாலை வசதி, போக்குவரத்து, மின்வசதி ஆகியவை முழுமையாக இருக்கின்றன. அத்தகைய வசதிகள் பிற மாநிலங்களில் இல்லை. எனவே, தேசிய அளவில் இந்தக் கல்வித் திட்டம் பெரும் துணை புரியும்.

தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் தமிழகத்தில் உள்ள 1,197 மேல்நிலைப் பள்ளிகளுக்கும் கணினிகள் வழங்கப்பட்டு விட்டன. இப்பணியைக் கடந்த ஐந்து ஆண்டுகளில் தனியார்க் கணினி நிறுவனங்கள் பூர்த்தி செய்துவிட்டன. அவற்றுக்கான வணிக ஒப்பந்தம் நிறைவாகி விட்டதால், தற்போது மீண்டும் ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் கணினிகளை வாங்கும் பணி தொடங்கிவிட்டது.

விவேக் ஹரிநாராயண், தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலர் செய்தியாளர்களிடம்...

******


நாடு சுதந்திரமடைந்தபோது இருந்த உணவு உற்பத்தியைப் போல் தற்போது நான்கு மடங்கு உற்பத்தி பெருகியுள்ளது. (அதே சமயம் மக்கள் தொகை மூன்று மடங்குதான் உயர்ந்துள்ளது). உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளோம். ஏற்றுமதியும் செய்து வருகிறோம். இச்சாதனைக்கு நமது விஞ்ஞானிகளும், உழவர்களும்தான் காரணம்.

உற்பத்தி அதிகமாக இருந்தும் நாட்டில் நான்கில் ஒரு பங்கினர் மட்டுமே மூன்று வேளை உணவு உண்ணும் நிலை உள்ளது. மக்களுக்கு போதுமான சத்துணவும் கிடைப்பதில்லை. ஒரு நாளைக்கு ஒருவருக்கு 68 கிராம் பருப்புச் சத்து தேவைப்படும். ஆனால் தற்போது பெரும்பாலானோருக்கு 25 கிராம்தான் கிடைத்து வருகிறது. இந்த நிலையை மாற்ற நாம் பாடுபட வேண்டும்.

எஸ். ஜெயராஜ், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்...

******


இந்தியா முழுவதும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கண்கள் ஒவ்வொரு ஆண்டும் தானமாகப் பெறப்படுகிறது. ஆனால், கண் தானத்திற்காகக் காத்திருப்பவர்கள் லட்சக் கணக்கில் இருக்கின்றனர். தானமாக கிடைக்கும் கண்கள் அனைத்தையும் கண் மாற்று அறுவை சிகிச்சைக்கு முழுமையாகப் பயன்படுத்த முடிவதில்லை. பல காரணங்களால் கிடைக்கும் கண்களில் பாதிக்கும் அதிகமாகச் சேதமடைந்து இருக்கிறது. இறந்தவர்களின் உடலில் இருந்து ஆறு மணி நேரத்திற்குள் கண்களை எடுத்துப் பாதுகாத்தால் மட்டுமே உபயோகமாக இருக்கும்.

ஆரோக்கியமான கண்கள் கிடைப்பதற்கு அரசு மருத்துவமனைகள் மூலம் போதுமான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

டாக்டர் பரிமளா, இயக்குநர், எழும்பூர் கண்மருத்துவமனை, கண்தானம் பற்றிய கருத்தரங்கு ஒன்றில்...

******


1999-ஆண்டு ஜெயலலிதாவும் நானும் சோனியா காந்தியின் வீட்டுக்குப் போனோம். அப்போது ஜெயலலிதா சோனியா காந்திதான் பிரதமராகவேண்டும் என்ற வலுவான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தார். வேறு சில கட்சிகள் கடைசி நிமிடத்தில் பின்வாங்கிவிட்டன.

லாலூ பிரசாத் யாதவ், நடுவணரசு இரயில் மந்திரி, வாஜ்பாயி அரசு 1999-இல் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோற்றபின் நிகழ்ந்தவற்றை நினைவுகூர்ந்ததாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில்...

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com