ஒக்லஹோமா தமிழ்ச்சங்க நிகழ்ச்சி
அக்டோபர் திங்கள் 28ம் நாள் மாலை 3 மணி ஒக்லஹோமா சிட்டி சிவிக் சென்டர் மியூசிக் ஹாலில் உள்ள ஃப்ரீடு லிட்டில் தியேட்டரில் நுழைகிறேன். தமிழ் மணம் வீசுகிறது. அமெரிக்க வாழ்த் தமிழர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. சிறுவர்களும் பெரியவர்களும் ஓட்டமும் நடையுமாகயிருந்தனர். கலைநிகழ்ச்சிகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும் மும்முரத்திலிருந்தனர். அவர்களது
ஆரவாரமும் சுறுசுறுப்பும் குரல் ஒலியும் அலைமோதின. மேடை அலங்காரத்திலும் ஒலி ஒளிச் சாதனங்களை அமைப்பதிலும் சிலர் ஈடுபட்டிருந்தனர்.

சரியாக மாலை 4 மணிக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் ஷண்முகமணியின் நிகழ்ச்சி துவக்க அறிவிப்பை ஒலிப்பெருக்கி முழங்கியது. பள்ளியின் வார்னிங் மணி கேட்டு மாணவர்கள் வகுப்பறையில் அமர்வது போல் அங்கு மிங்குமாகயிருந்தவர்கள் இருக்கையில் விரைந்து வந்து அமர, அரங்கம் அமைதியானது. குண்டூசி விழுந்தால்கூட கேட்கும் நிசப்தம். நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர் பார்ப்பது போன்ற முகபாவனை எல்லோரிடமும்.

நிகழ்ச்சி நிரலில் ஒரு பக்கம் முழுவதையும் நிரப்பிக் கொண்டு 30க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் பட்டியலிடப்பட்டிருந்தன. இன்று சிவராத்திரிதானே என்றுகூட எண்ணினேன்.

பெரியவர்களுக்கு ஈடாக சிறியவர்களின் கூட்டமும் இருந்தது. நிகழ்ச்சிகளின் கதா பாத்திரங்கள் பெரும்பாலும் இளைஞர்களே. இரண்டரை வயது குழந்தை முதல் டீன்ஏஜ் இளைஞர்கள் வரை
நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நான் விழாவுக்கு வந்தது பொழுது போக்குக் காக மட்டுமல்ல அமெரிக்க மண்ணிலே பிறந்து வளர்ந்த இரண்டாம் தலைமுறையினர் தமிழ்க்கலாசாரம், பண்பு, வாழ்க்கைமுறை, தமிழார்வம் ஆகியவைகளில் எந்தளவுக்கு ஈடுபட்டுள்ளார்கள் என்பதை நேரிடையாக தெரிந்து கெள்ளவும் விரும்பினேன். பத்தாண்டுகளுக்கு முன்பு நான் அமெரிக்கா வந்த போது டல்சா சிட்டியில் இதுபோன்ற விழாவைப் பார்த்ததுண்டு. அடுத்து இந்த விழாவுக்கு வந்துள்ளேன்.

நிகழ்ச்சிகள் அனைத்தும் தொடுக்கப்பட்ட ஒரு கதம்பமாக காணப்பட்டது. நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் நிறத்திலும், மணத்திலும் மாறுபட்ட மலர்களாகயிருந்தன. சில மலர்களை மட்டும் அன்பர்களும் முகர்ந்து மகிழ உங்கள் முன் வைக்கிறேன்.

மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. கடல்சூழ் பரதக்கண்டத்தின் திலகமாக தமிழணங்கு (தமிழ்நாடு) புகழ் மணக்க வீற்றிருப்பதைக் கேட்க நமது உள்ளார்ந்த மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. இசை நயங்கொண்ட இப்பாடலை எத்தனை முறை கேட்டாலும் நமது ஆர்வம் அடங்காது.

அடுத்து பாலகன் சாய் கிருஷ்ணா பசுபதியின் புரட்சிக் கவி பாரதியாரின் ஓதீராத விளையாட்டுப் பிள்ளை என்ற பாடல் இடம் பெறுகிறது. பாடலில் வரும் கண்ணனின் குழந்தை பருவ குறும்பு விளையாட்டைக் கேட்டு அவையிலிருந்த குழந்தைகளும் குதூகலித்தனர்.

இரட்டைச் சகோதரிகள் அனிதா சுந்தர மூர்த்தி, அஞ்சலி சுந்தரமூர்த்தி, ஷாலினி மற்றும் லென் ஆகிய யுவதிகளின் அலாரிப்பு நடனம் அற்புதம். இறைவனையும், சான்றோர்களையும் அவையோரையும் வணங்கும் முறையை, தங்கள் கை, கால் அசைவு மூலமும் முகபவானையாலும் தத்ரூபமாக காட்டினார் கள். குழுவின் அமெரிக்கப் பெண் லென், பரதநாட்டியக் கலையில் ஆர்வம் கொண்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது. இக்குழுவினரில் தில்லானா நடனத்தில் முகபாவனை மற்றும் சைகை மூலம் சிவனருளை வேண்டும் காட்சி தமிழர்களின் ஆன்மீக ஈடுபாட்டை உணர்த்தியது. தர்ஷினி மாலா ஆனந்தமூர்த்தியின் ஸ்வர ஜதி நடனமும் பாராட்டுக்குரியதாகயிருந்தது.

தமிழில் தோன்றிய முதல் அறநூல் திருக்குறள். 30க்கும் மேற்பட்ட உலகமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட உலகப் பொதுமறையை இயற்றியவர் திருவள்ளுவர். சிறுவன் கிஷன் ஸ்ரீகாந்த் திருவள்ளுவர் அவதாரமெடுத்து மேடையில் தோன்றுகிறார். சமுதாய இன்னல்கள் பற்றிய கேள்விகள் அசரீரியின் வாக்காக எங்கிருந்தோ கேட்கப்படுகிறது. முதியவர் ஒருவர் திருவள்ளுவரிடம் வினாக்களுக்கான விளக்கங்களைக் கேட்கிறார். திருவள்ளுவரோ தான் விட்டுச்சென்ற திருக்குறளிலிருந்து மேற்கோள்காட்டி விளக்குகிறார். இக்காட்சி 'மகன் தந்தைக்கான உபதேச' புராணக் கதையை ஞாபகப்படுத்துகிறது. ஆம்! விளக்கம் கேட்டவர் சிறுவரின் தந்தையுமாவார்.

சபையோர்க்கு தமிழ் இலக்கியச் சுவையைத் தந்தார் தமிழ்ச் சங்க துணைத்தலைவி ராதா பரசுராம். தேவாரம், திருவாசகம், திருமந்திரம் போன்ற அறநூல்கள் இறைவனைத் தொழுவதற்கான
துதிபாடலாகுமென்பதை வலியுறுத்துகிறார். திருவாசகத்திற்கு உருகாதவர் ஒரு வாசகத்துக்கும் உருகார். தமிழ் அறநூல்களைப் படிப்பதால் ஏற்படும் உள்ள பரவசத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது. சுவைத்துப் பருக வேண்டிய திகட்டாத தேன். இறைவழி பாட்டு ஆலையங்களுக்கு சிறுவர்கள் செல்லும் போது ஆன்மீக உணர்வு பெற முடியும்.

கீதா பாலமுரளியும், ராஜேஷும் இணைந்து நிகழ்ச்சிகளை நகைச்சுவையுடன் அறிமுகப் படுத்தினர். உதாரணத்திற்கு - பொங்கலுக்கு லீவு விடும்போது இட்லி தோசைக்கு லீவு கிடையாதா? என்ற கேள்வி ஏக சிரிப்பு. இதுபோன்று ஒவ்வொரு நிகழ்ச்சி அறிவிப்புக்கும் முன்னோடியாக பொருத்தமான நகைச்சுவையும் வரும். நிகழ்ச்சிகள் மீது அவையோரின் கவனத்தை ஈர்க்க இது ஒரு புதிய அணுகுமுறையும்கூட.

தமிழ்நாட்டு தலைசிறந்த அரசியல் வாதியினரின் அடுக்குமொழி மேடைப் பேச்சை சிவக்குமார் மிமிக்ரி செய்தார்.

'இப்போது இல்லாட்டி எப்போது' என்ற பாடலுக்கு மீரா, வினோத், விக்ரம், ஹரி, ரூபன், விபுலன், ஆத்மன மேலும் குகன் ஆகிய பாலகர்கள் குழு நடனமாடினர். பாடலின் பொருளும், அதற்கேற்ப இசையமைப்பும், அதோடு இணைந்து சிறுவர்கள் துள்ளிக் குதித்தாட எல்லோரையும் மகிழ்வித்தனர்.

ராம்கிருஷ்ணன் மற்றம் சத்யா பசுபதியின் 'ரோஜா' திரைப்பட டூயட் பாடலின் இனிமையிலும், சபரதா ஸ்ரீதரின் கர்நாடக இசைமழையிலும் அவையோர் நனைந்தனர்.

அடுத்து 'நல்லவன் எல்லாம் வல்லவன் அல்ல' என்ற நகைச்சவை நாடகம். கதா பாத்திரங்கள் - ஜமீன்தார், எம்எல்ஏ, தோட்டக் காரர், வேலைக்காரர் மற்றும் திருடன். நடித்த இளைஞர்கள் - ராஜ்பரத் பாலமுரளி, கணேஷ் கிருஷ்ணமூர்த்தி, ஆஷாகுமார், கிஷன்ஸ்ரீகாந்த், அபினவ் ஐயப்பன் மற்றும் சாய்கிருஷ்ணபசுபதி. நாடகம் தமிழ்நாட்டு கிராமச்சூழலை மனத் திரையில் கொண்டு வந்து சபையோரின் கரவொலியை எழுப்பியது.

முடிவுரையில் தமிழ்ச்சங்கத் தலைவர், சங்கத்திற்கு தமிழ் நூலகம் தேவை என்ற ஒரு முத்தான கருத்தை முன்வைத்தார். அக்கருத்து சபையோரின் ஒருமித்த ஆமோதிப்பை பெற்று தமிழ்ஆர்வம் மிக்க ஒருவர் ஆரம்ப நிதியாக எடுத்து தொகையையும் அறிவித்தார்.

மேடை அலங்காரமும், ஒலி ஒளி அமைப்பும் காட்சிக்கு காட்சி மாறிக்கொண்டேயிருந்தன.

பொதுவாக அனைத்து நிகழ்ச்சிகளும் சுருக்கமாகவும் சுவையாகவும் இருந்தன. எதிர் பார்த்ததுபோல விழா நடுநிசியை நீடிக்காமல், மின்னல் வேகத்தில் விறுவிறுப்பாகவும் மாலை 8.30 மணிக்கு நிறைவுற்றது.

நன்றியுரை முடிய அவையோருக்கு பசி எடுக்க உணவுக்கூடம் நோக்கி நகர்ந்தனர். 'டேஸ்ட் ஆஃப் இண்டியா' கேட்டரிங் நிறுவனம் தமிழ்நாட்டு உணவு வகைகளை சுவையுடன் சூடாக வைத்திருந்தது.
அனைவரும் தேவைக்கு உண்டு, கல்யாணச்சாப்பாடு திருப்தியிடன் இருப்பிடம் நோக்கி விரைந்தனர்.

ஓக்லஹோமா தமிழ்ச்சங்கத்தின் வயது பதினெட்டு. சங்கம் 8 வயது சிறுமியாக இருந்த போதும் பார்த்தேன். 18 வயது யுவதிநிலையிலும் பார்க்கிறேன். கலைநிகழ்ச்சிகளின் தரத்திலும் விரும்பத்தக்க விளைவுகளிலும், வயதுக்கு மீறிய வளர்ச்சியும் முதிர்ச்சியும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிகிறது. இந்த வளர்ச்சிக்கு துணை நின்றவர்களை நினைவு கூறாமலிருக்க முடியாது.

முன்னாள் மற்றும் இந்நாள் சங்கத் தலைவர்கள், நிர்வாக உறுப்பினர்கள், கமிட்டி உறுப்பினர்கள், ஆகியவர்களின் கடும் உழைப்பும், தமிழார்வமும், சேவை மனப் பான்மையும் சிந்தித்து திட்டமிடும் திறனும் வளர்ச்சியின் காரணிகள் என்று சொல்வது மிகையாகது. சங்க உறுப்பினர்களின் ஒத்துழைப்பும், தங்கள் குழந்தைகளை கலை நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்துவதற்கான ஆர்வமும் மிகுந்து காணப்படுகின்றன.

டல்சா ஸன்ஸ்கிருத்தி நாட்டியப்பள்ளி, டல்சா லாஸ்யா ரோட்டினப் பள்ளி, மற்றும் கலைத் திறமை வாய்த்துள்ள சங்க உறுப்பினர்கள், சில முக்கிய பெண்மணிகள், சிறுவர், சிறுமிகளுக்கு மாதக்கணக்கில் நாட்டிய நாடகக் கலைகளில் பயிற்சியும் கொடுத்துள்ளனர். டல்சா பல்கலைக் கழகத்தின் தமிழ்நாட்டு மாணவ, மாணவிகளும், தங்கள் கலைத்திறனை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இவ்விதம் அனைவரது உழைப்பும் தமிழார் வமும் ஒன்று சேர ஓக்ஹோமோ தமிழ்சங்கம் தலைநிமிர்ந்து நிற்கிறது.

தமிழினம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்து நின்று உலகளாவ பரவியிருக்கிறது. தமிழ் வாழ்வியல் உலகம் உய்வதற்கான நெறிகாட்டி. இலக்கண இலக்கியத் தொன்மை வாய்ந்த செம்பொழி, திரைகடலோடியும் திரவியம் தேட தமிழர்கள் அமெரிக்க மண்ணை மிதித்துள்ளார்கள். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதற்கேற்ப இங்கு வளர்ந்து வருகிறார்கள். அதே நேரத்தில் தங்களை பெற்று வளர்த்த தமிழ் தாயை காப்பாற்ற வேண்டிய கடமையும் அவர்களுக்குண்டு. தமிழ் வேரிலே திளைத்தவர்கள் ஆணிவேர் அறுபட விடக்கூடாது. அமெரிக்க மண்ணில் குடிபெயர்ந்துள்ள தமிழர்கள் இம்மண்ணிலே பிறந்து வளர்ந்துள்ள தங்கள் இளவல்கள் - தமிழ் வாழ்வியலைக் கற்றுக் கடைப்பிடிக்கச் செய்ய ஒரு சக்தி வாய்ந்த சாதனமாக ஓக்ஹோமா தமிழ்ச்சங்கத்தை பயன்படுத்துவார்களாக.

வி.எஸ். சுப்பிரமணியன்

© TamilOnline.com