நெஞ்சமே அஞ்சாதே நீ!
என் பெயர் சுமதி. இளவயதிலேயே என் தந்தையை எதிர்த்துக் கொண்டு காதல் மணம் செய்து கொண்டேன். இருவரும் மிகுந்த அன்போடு குடும்பம் நடத்தினோம். ஆனால் திடீரென்று அவர் ஒரு விபத்தில் உயிர் இழந்தார். அவரை விட்டு ஒருநாள் பிரியாத எனக்கு வாழ்க்கை நரகமானது. தற்கொலைக்கு முயற்சித்தேன். அதில் தோல்வியுற்றேன்.
இந்தச் சமயத்தில்தான் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும்கலைப் பயிற்சி என் வாழ்க்கையை மாற்றியமைத்தது.
கணவன் இறந்தபோது ஒரு 10 மாதக் குழந்தை உட்பட எனக்கு இரண்டு குழந்தைகள். 9ஆம் வகுப்பு வரையிலேயே படித்திருந்தேன். அவர் இறந்து ஆறு மாதங்களில் 10-ஆம் வகுப்புத் தேர்வு எழுதினேன். நல்ல மதிப்பெண்கள் பெற்று கோவைத் தொழிலதிபர் கிருஷ்ணராஜ் வானவராயர் அவர்களின் உதவியுடன் மேற்கொண்டு படிப்பைத் தொடர்ந்தேன். என் மகள் இரண்டாம் வகுப்பு படித்த அதே பள்ளியில் நான் அதே சீருடையுடன் +2 படித்தேன். உறவினர்கள் எல்லோரும் என்னை "நீ இனிமேல் படித்து என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்டு என்னை அதைரியப்படுத்த முயற்சித்தனர்.
பள்ளித் தலைமை ஆசிரியை குமுதினி பெரியசாமி மற்றும் இதர ஆசிரியைகள் நான் தொடர்ந்து படிக்கவேண்டும் என்பதை என் தந்தைக்கு எடுத்துக் கூறினர். தனது வேளாண்மைப் பேராசிரியர் பதவியை 6 வருடங்கள் முன்னதாகவே உதறிவிட்டு, என் தந்தை என்னைப் பல போதனை வகுப்புக்களுக்கு அழைத்துச் சென்றார். நல்ல முறையில் தேறி நான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த அதே வருடம் என் தம்பி பொறியியல் படிப்பை முடித்து அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்கு வந்தான். என் தந்தையாரின் விருப்பத்துக்கு மாறாக என் திருமணம் நடந்தபோதும், என் மேற்படிப்புக்குத் தூணாக இருந்த அவர், நான் MBBS இறுதியாண்டு வரும்போது மரணமடைந்தார்.
கோவையில் மூன்று மகப்பேறு மருத்துவர்கள் இணைந்து நடத்தும் Women+Childcare மருத்துவமனையில் பணிபுரியும் நான் இப்போது ஏராளமான பெண்களுக்கு மருத்துவம் செய்கிறேன். செயற்கைக் கருத்தரிப்பு மூலம் என்னிடம் வந்தவர்களில் நூறுசதம் வெற்றி கண்டிருக்கிறார்கள். என் மேற்பார்வையில் ஒவ்வொரு குழந்தை பிறந்ததும் அதை நான் பெருமையோடும் மகிழ்வோடும் கையில் எடுத்துப் பார்க்கிறேன்.
இதோடு முடியவில்லை. இன்னும் மேலே படிக்கவேண்டும். சாதிக்கவேண்டும். உலகில் ஊக்கமும் ஆதரவும் தரும் நல்லவர்கள் இருக்கிறார்கள். நமக்குத் தேவை உழைப்பு, விடாமுயற்சி, மனத் துணிவு. எனக்கு ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை உண்டு. இந்தச் சமயத்தில் என்னை மீண்டும் வாழவைத்த நல்ல உள்ளங்களை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.
நம்புங்கள். புதிய கதவுகள் திறக்கும்.
கேட்டு எழுதியவர்: கலைச்செல்வி கோபாலன் |