ஆரம்ப நிலை நிறுவனத்துக்கு இரண்டாம் சுற்று முதலீடு சேர்ப்பது எப்படி?
(முன்குறிப்பு: ஓர் ஆரம்ப நிலை நிறுவனத்துக்கு எவ்வாறு மூலதனம் வாங்குவது என்று பலரும் என்னைக் கேட்டதற்கு பதிலாக தென்றலில் பல மாதங்களுக்கு முன்பு ஒரு 'கதிரவனைக் கேளுங்கள்' கட்டுரை எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியே இது. அந்தக் கட்டுரை பிரசுரமான பின், பலரும் என்னிடம் கேட்ட கேள்வி, முதல் சுற்று முதலீட்டுக்குப் பிறகு நிறுவனத்தை வளர்த்து எப்படி இரண்டாம் சுற்று முதலீடு பெறுவது என்பது. இந்தக் கட்டுரை அந்தக் கேள்விக்கு பதில் தருவதற்கான முயற்சி.)

ஓர் ஆரம்ப நிலை நிறுவனத்துக்கு இரண்டாம் சுற்று முதலீடு பெற என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்பதற்கு முன்னால், முதல் சுற்று மூலதனம் பெறுவது எவ்வாறு என்று மீண்டும் சற்று நினைவு கூர்வது நல்லது.

முதல் சுற்று முதலீடு பெற அத்தியாவசியமானவை:

1. யோசனை (idea): உங்கள் நிறுவனம் என்ன செய்யப் போகிறது? அது எவ்வளவு மதிப்புள்ளது?

2. குழு (team): நிறுவனத்தில் முக்கியமான, மேல் நிலையாளர் யாவர்? அவர்களின் துறை அனுபவம் என்ன? அவர்களூக்கு முந்தைய ஆரம்ப நிறுவன அனுபவம் என்ன?

3. நிரூபணம் (validation): உங்கள் கருத்துக்களையும் திட்டத்தையும் எப்படி நிரூபிக்க முடியும்? தற்கால வாடிக்கை யாளர்கள், வருங்கால வாடிக்கையாளர் கள், துறை நிபுணர்கள் (analysts) போன்றவர்களின் கருத்துக்களும், புள்ளிவிவரங்களும்.

4. பொருளாதாரத் திட்டம் (financial plan): வருமானம் எத்தனை, எப்படி வளரும்? அதற்கான செலவு எப்படி வளரும்? எவ்வளவு மூலதனம் எப்போது தேவையாக இருக்கும்?

5. தொழில் நுட்பம் (technology): நிறுவனம் ஒரு தொழில் நுட்பமுள்ள தென்றால், அது எவ்வளவு பலமானது, எந்த நிலையில் உள்ளது?

இந்தப் பண்புகள் ஒரு நிறுவனத்தை முதலில் ஆரம்பிக்கும் போது நல்ல வலுவாக இருந்தால் முதலில் மூலதனம் எளிதில் கிடைத்துவிடும். ஆனால் நிறுவனத்தைச் சரியாக உரம் போட்டு வளர்க்காவிட்டால் இரண்டாம் சுற்று மூலதனம் வாங்குவது எளிதல்ல. அதற்குத் தகுதி பெற நிறுவனம் பல எல்லைக்கோடுகளைத் தாண்ட வேண்டும்.

இரண்டாம் சுற்று முதலீடு பெற அத்தியாவசியமானவை:

1. தொழில் நுட்பம் (technology): நிறுவனத்தின் தொழில் நுட்பம், எந்த நிலைக்கு முன்னேறி உள்ளது? தொழில் நுட்ப அபாயத்தை (technology risk) முழுவதும் கடந்து விற்பனைப்பொருள் தயாராகியிருக்க வேண்டும்.

2. குழு (team): நிறுவனத்தின் முக்கியமான மேல் நிலையாளர் குழு வளர்ந்து, முழுமை பெற்று பொருள் விற்பனைக் கான அனுபவம் பெற்றவர்களைக் கொண்டது என்று காட்ட வேண்டும். விற்பனைக்குத் தேவையான பலதுறை நிபுணர்களும் நிறுவனத்தில் இருக்க வேண்டும்.

3. நிரூபணம் (validation): விற்பனைப் பொருள் விற்கத் தயாராயிருந்தால் மட்டும் போதாது. அதைப் பயன்படுத்தி, அதன் புகழ் பாடக்கூடிய பல வாடிக்கையாளர்களும் தேவை.

4. பொருளாதாரத் திட்டம் (financial plan): இரண்டாம் நிலை நிறுவனத்துக்கு விற்பனைச் செலவு அதிகம். அந்தத் செலவுக்கு ஏற்ப எவ்வாறு வருமானம் வளரும்? எவ்வாறு வரவுக்கும் செலவுக்கு மான இடைவெளி குறைந்து வரும் என்று காட்ட வேண்டும்.

5. விற்பனை முறை (sales model): ஓரிரண்டு வாடிக்கையாளர்களே இருந்தால் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் வெவ்வேறு முறையில் விற்க வேண்டியிருக்கும். ஒரே பொருளை ஓரிரண்டு முறைகளிலேயே பல வாடிக்கையாளருக்கு விற்க முடியும் என்று காட்ட வேண்டும்.

இந்தப் பண்புகள் பெரும்பாலாக முதல் சுற்றுக்கும் பொதுவாக இருந்தாலும் அவை தொழில் நுட்பத் தயாரிப்பிலிருந்து பொருள் விற்பனைக்கு மாறியிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். (அப்படியானால் உங்களுக்கு முழு மதிப்பெண்!)

அவ்வாறான மாற்றம் எளிதல்ல. பலப்பல நிறுவனங்கள் தொழில் நுட்ப நிலையிலிருந்து வெளிப்படுவதே இல்லை. அதற்கான பொதுவான மூல காரணங்கள் நான்கு:

1. தொழில் நுட்பம் நினைத்ததை விடக் கடினமாகி, தயாரிக்க இயலாமல் போகலாம்.

2. பொருளாதார நிலை சரியில்லாமல் இருக்கலாம்.

3. ஆரம்பிக்கும் போது இருந்த பொருளுக் கான தேவை, விற்பனைக்கு வரும்போது இல்லாமல் போயிருக்கலாம்.

4. நிறுவனத்தினர் திறமையான தொழில் நுட்ப வல்லுனர்களாக இருந்தாலும் விற்பனைத் திறனே இல்லாமல் இருக்கலாம்.

கட்டுரையின் அடுத்த பாகத்தில் இத்தகைய இடுக்கண்களைச் சமாளித்து எவ்வாறு இரண்டாம் சுற்று மூலதனத்துக்குத் தேவையான பண்புகளை வளர்ப்பது என்று இன்னும் சற்று விவரமாகச் சோதிப்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com