ஆத்மார்த்தமான ஆதரவு
அன்புள்ள சிநேகிதியே...

எனக்குத் தெரிந்த ஒரு இளம் தம்பதி. திருமணம் ஆகி 4, 5 வருஷம் தான் இருக்கும். என்னுடைய பக்கத்து 'அப்பார்ட்மெண்ட்டில்' புதிதாகக் குடித்தனம் வந்தார்கள். அவர்கள் இரண்டு பேருமே மிகவும் நட்புடன் இருப்பார்கள். நானும் நிறைய உதவி செய்திருக்கிறேன். பிறகு நாங்கள் புது வீடு கட்டிக்கொண்டு வந்து விட்டோம். அவர்களும் வேறு ஊருக்கு மாறிப் போய் விட்டார்கள். அவ்வப்போது பேசிக் கொள்வோம். ஆனால் இரண்டு வருடமாகத் தொடர்பு இல்லை. சமீபத்தில் இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து வந்த ஒரு நண்பரிடம் அவர்களைப் பற்றி விசாரித்த போது, அவர்கள் விவாகரத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.

அதைக் கேட்டதிலிருந்து என் மனதே சரியில்லை. அவளைக் கூப்பிட்டு கேட்க வேண்டும் போலத் தோன்றுகிறது. தப்பாக எடுத்துக் கொள்வாளோ என்ற பயமும், நாம் ஏன் பிறர் விவகாரத்தில் தலையிட்டுக் குட்டையைக் குழப்ப வேண்டும் என்றும் தோன்றுகிறது. எனக்கு கவுன்சலிங் தெரியாது. ஆனாலும், எப்படியும் அவர்கள் ஒன்று சேர வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அதிகம் நெருக்கமாகப் பழகவில்லை என்றாலும் திருமணமான புதிதில் அவர்கள் எவ்வளவு 'ஜாலியாக' இருந்தார்கள் என்பதை நான் கவனித்திருக்கிறேன். ஏன் இந்த வேதனை இப்போது?

இப்படிக்கு,
............

அன்புள்ள சிநேகிதியே...

பல வருடங்களுக்கு முன்பு எனக்கு ஏற்பட்ட இதே அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம் - எனக்குக் கொஞ்சம் கவுன்சலிங் தேர்ச்சி அப்போதும் உண்டு. எப்படி, எனக்கு சற்றே அறிமுகமான, வயதில்முதிர்ந்த கணவன், மனைவிக்கு ஆலோசனை வழங்க முடியும் என்று நான் பேசாமல் இருந்துவிட்டேன். மனதில் 'அவர்கள் அந்தரங்க வாழ்க்கையில் நாம் தலையிடுகிறோமோ' என்றும், நம்மை இழிவாகப் பேசிவிட்டால் என்ன செய்வது என்றும் ஒரு சங்கடம். அன்று எனக்கும், அவர்களுக்கும் தெரிந்த கார் டிரைவர் என்னை அணுகி, ''உங்களால் இது கண்டிப்பாக முடியும். தயவுசெய்து அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அப்படி, அவர்கள் உங்களை அவமானப்படுத்தி விட்டால் என்ன - ஒரு நல்ல காரியம் செய்யத் துணிகிறீர்கள். வாழ்க்கையில் நாம் ஒன்றும் செய்யாமல் இருந்தால்கூட, ஏதோ ஒரு வகையில் யாரோ நாம் விரும்பாத சொற்களைக் கூறி நம்மை வேதனைப் படுத்துவார்கள். அதுபோல், இதையுடன் நினைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை அவர்கள் நீங்கள் சொல்படி நடந்தால் - யோசித்துப் பாருங்கள்'' என்றார். அவருடைய அந்தப் பேச்சு என் போக்கையே மாற்றி, மனதில் பலத்தைக் கொடுத்தது. That car driver was my source of inspiration.

தைரியமாக அவர்கள் இருவரையும் தனித்தனியாகச் சந்தித்து பேசினேன். மாதக்கணக்கில் பேசாமல் இருந்த அவர்களைப் பேசவைத்தேன். மீண்டும் காதல் கதைதான். அந்த முடிவு எனக்கு மிகவும் ஆத்ம திருப்தியைக் கொடுத்தது.

ஆகவே உங்கள் நண்பர்களின் 'திருமண முறிவு' பற்றிய செய்தி மற்றவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும் பட்சத்தில் நீங்கள் அவர்களைக் கூப்பிட்டு உங்களுடைய அக்கறையைக் காட்டலாம். உங்கள் ஆதரவைக் கொடுக்கலாம். கவுன்சலிங் தெரியாவிட்டாலும் சில நேரம், தம்பதியர் இது போல் மணமுறிவு, மன உளைச்சலில் இருக்கும் போது, யாராவது அனுதாபத் தோடு அணுகினால், தங்கள் கவலைகளையும், ஏமாற்றங்களையும் பகிர்ந்து கொள்ள ஏங்குவார்கள்.

உங்களிடம் 'confide' செய்யத் தயங்கினால் அவர்களை வற்புறுத்தி மேலும் மேலும் கேட்காதீர்கள். உங்கள் நட்பு எவ்வளவு பலம் வாய்ந்தது என்று எனக்குப் புரியவில்லை. ஒருவேளை உங்களை அவமானப்படுத்திப் பேசினால் மனம் குன்றிப் போய்விடாதீர்கள்.

வம்பளக்கும் நோக்கம் இல்லாமல் ஒரு நல்லுணர்வோடு செயல்படும்போது நண்பர்கள் புரிந்து கொள்ளுவார்கள். உங்கள் ஈடுபாட்டால், அவர்கள் ஒன்று சேருகிறார்களோ இல்லையோ உங்கள் ஆத்மார்த்தமான ஆதரவு, இந்தக் கடினமான தருணத்தை எதிர்கொள்ள அவர்களுக்கு உதவும். Your genuine support will help them to survive this emotional trauma.

வாழ்த்துக்கள்.
மீண்டும் சந்திப்போம்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com