நவம்பர் மாதம் 4ஆம் தேதியன்று மிக்சிகன் தமிழ் சங்கத்தின் தீபாவளித் திருவிழா Troy High Schoolல் இனிதே நடந்தேறியது. அலை கடலென திரண்டு வந்து, தன் திறமைகளைக் காட்டிச்சென்ற குழந்தைகளைப் பார்த்த பொழுது, இந்தத் தீபாவளித் திருவிழாவை, கண்மணிகளின் பெருவிழா என்று அழைத்தாலும் மிகையாகாது!
170 மாணவ/மாணவியர் பங்கேற்ற இவ்விழா மாலை 3 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெற்றது. முத்தான முதல் நிகழ்ச்சி யாக, 5-8 வயது வரை உள்ள குழந்தைகள் மழலை மாறாத அமெரிக்கத் தமிழில் தமிழ்த் தாய் வாழ்த்தினை சுருதியுடன் பாட, விழா களை கட்டியது.
வித்தியாசமான, வரவேற்கக்கூடிய சில நிகழ்ச்சிகள் இவ்விழாவில் இடம்பெற்றது - பல ஆண்டுகளாய் மிக்சிகன் தமிழ் சங்கத்தை ஆதரித்து, பிரத்தியேகமாக அதற்கென நடன நிகழ்ச்சிகளை அமைத்து உதவிவந்த நான்கு நடனக் கலைஞர்களுக்கு 'குரு வணக்கம்' என்ற நிகழ்ச்சியின் மூலம் கேடயங்கள் அளித்து கெளரவிக்கப்பட்டது. அவர்கள் அழைப்பிதழின் வரவு நடனநிகழ்ச்சியை மாணவர்களை முன்னே நிறுத்தி நடத்தியது, அவர்களின் திறமைக்கு இன்னுமோரு எடுத்துக் காட்டாக அமைந்தது.
பங்கேற்க விரும்பிய அனைத்து குழந்தைகளுக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் ஒரு இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நல்ல வரவேற்பையும் பெற்றது. குழந்தைகள் முழுக்க முழுக்க தமிழில் பேசிய அருமையான இரண்டு நாடகங்கள் நிகழ்ச்சிகளுக்கு முத்தாய்ப்பாய் விளங்கின.நமது பண்பாடான விருந்தோம்பலை மறவாமல்,நாவிற்குச் சுவையான உணவு அன்பு நண்பர்களால், இன்முகத்துடன் உபசரிக்கப்பட்டது.
2007ம் ஆண்டிற்கான செயற்குழு உறுப்பினர் களின் அறிமுகம், வரவு-செலவு கணக்குகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தேறின. 'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தலை நேரில் கண்டு கேட்கக்கூடிய அருமையான நிகழ்ச்சியாக அமைந்தது!
காந்தி சுந்தர் |