அபிநயா டான்ஸ் கம்பெனியின் ரிதுஸம்ஹாரம்
2006 நவம்பர் 18ம் தேதி மாலை 4 மணி அளவில் சான்ஓசே மெக்சிகன் ஹெரிடேஜ் தியேட்டரில் 'அபிநயா டான்ஸ்' கம்பெனியார் வழங்கிய கவிகாளிதாசனின் '"ரிதுஸம்ஹாரம்" எனும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

வசந்த, கிரீஷ்ம, வர்ஷ, சரத், ஹேமந்த, சிசிர எனும் ஆறுவித பருவ காலங்களை பற்றி கவி காளிதாசன் இயற்றிய சம்ஸ்கிருத ஸ்லோகங்களை உருக்கமுடன் பாடி தாளக்கட்டுடன் தத்ரூபமாக அபிநயம் பிடித்து மாணவிகள் அளித்த விதம் அலுப்பு தட்டாமல் அருமையாக அனுபவிக்க முடிந்தது.

வசந்தகால வர்ணனையில் பூக்கள் மலர்வது, தடாகத்தில் தாமரை வளர்வது, மன்மதன் மலர்களை வீசுவது, ஆண்குயில் கூவுவது, தேனீக்கள் மலரில் தேனை ஊறிஞ்சுது, இனிய தென்றல் காற்றில் இளம் காதலர்கள் மனநிலை ஆகியவற்றை தன் சிறந்த முகபாவம், அபிநயம் மூலம் ஆடி ரசிகாகுமார் அவர்கள் ரசிகர்களின் பலத்த கைதட்டலை பெற்றது மிக்க ரம்மியம்.

அடுத்து கோடைகால வர்ணனையில் திரை பின்னணியில் சுட்டெரிக்கும் சூரியனை காண்பித்தது, ஆறு மாணவிகள் அனுபவித்து ஆடி கொளுத்தும் வெயில் குறைந்து இரவில் சந்திரனின் தன்னொளியில் அழகான அரண்மனை, நீர் அருவி கொட்டுதல் குளிர்ந்த சந்தனத்தை பூசுவது, சூடு தாங்காமல் பாம்பு பொந்துக்குள் செல்ல, மயில் ஆடும் நிழலில், ஜன்ம பகைமையையும் மறந்து பாம்பு தூங்குவது, களைத்த குரங்குகள் மரத்தில் ஏறுவது, பட்க்ஷிகள் தண்ணீர் தேடி செல்வது ஆகியவற்றை படம் பிடித்து காண்பித்தது போல் முகபாவத்தில் கொண்டு வந்து காட்டியது கன கச்சிதம்.

பின் மழைகாலம்: இரு மாணவிகள் போரில் முரசு கொட்டும் ஒலி போல் இடிஇடிப்பதை இயக்கி காட்டி பின் 5 மாணவிகளுடன் சேர்ந்து, மழை கொட்டுவதையும் மயில்கள் நடனமாடுவதையும் நதிகள் 'சலசல' வென சத்தத்துடன் கடலில் கலப்பதையும் மழை ராகமான அமிர்தவர்ஷணியில் பாடிய ஸ்லோகத்திற்கு நேர்த்தியுடன் நீலநிற உடைகளில் தத்ரூபமாக தாளத்திற்கேற்ப தடபுடலாக ஆடி மாணவிகள் அசத்தினர். இது நிகழ்ச்சியின் உச்சம் எனலாம்.

சரத்கால வர்ணனைகளை ஏழு மாணவிகள், இளவேனிற்கால இரவில் இனிய மணமுடன் கூடிய காற்று, பூமி வறண்டு, நீர் ஓடைகளில் தெளிவு, ஆகாயத்தில் நட்சத்திரங்கள் பதிக்கப்பட்டு, சந்திர கிரணங்கள் ஒளிர்வது ஆகியவற்றை சர்வசகஜமாக ஆடியது சுகம்.

பனிக்கால வர்ணனையில் பனிதுளி விழுவதும், வயல்களில் பழுத்து முதிர்ந்த சோளங்கள் நிறைந்து இருப்பதும் பெண் மான்கள் கூட்டமாக ஓடி வருவதும் பற்றி மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள உணர்வின் பந்தங்களை, அப்படியே ரசிகர்களின் முன்னிலையில் அபிநயத்து காண்பித்து ரசிகர்களை மகிழச் செய்தார் மைதிலி குமார் அவர்கள்.

நிறைவாக குளிர்காலம்: பனி கடுமையாக பெய்வது, இரவில் குளிரில் காய நெருப்பு அடுப்பின் கீழ் குளிர் காய்வது, தெருபூராவும் வெண்மையான பனி, வெளியில் குளிரில் விளையாடாதே என வெளியில் விளையாடிய இரு சிறுமிகளை மைதிலிகுமார் அவர்கள் அபிநயத்தில் கூப்பிட்டதும், இரு சிறுமிகளும் வெடவெடவென குளிரில் நடுங்கியபடி ஓடிவந்து ஆடி காண்பித்தவிதம் மக்களின் மனதை கொள்ளை கொண்டது. சிவரஞ்சனி ராகத்தில் ஸ்ர்வேபவந்து ஸுகினோ என முடித்தவிதம் சிறப்பு.

நூதனமாகவும் நேர்த்தியாகவும் நிகழ்ச்சியை வழங்கிய அனைவர்க்கும் பாராட்டுக்கள். ஆர்க்கெஸ்ட்ரா குழுவினர் அனைவரும் அருமையாக இணைந்து வாசித்து அவையோரை ஆனந்தப்படுத்தினர்.

பாராட்டுக்கள்.

சீதா துரைராஜ்

© TamilOnline.com