அப்பாவின் பள்ளிக்கூடம்
தோளில் புத்தக மூட்டையோடு பள்ளிக் கூடத்திலிருந்து வந்து தாழிட்டிருக்கும் கொல்லைக் கதவைத் தட்டும்போது பெரியவனுக்கு மனதில் சிணுக்கம் கண்டது. கதவுக்குப் பின்னால் தாழை நீக்கிக் கதவை திறந்து வெளிப்படப் போகும் அம்மாவின் முகத்திற்காக அவன் காத்துக் கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் அவன் தம்பி புத்தக மூட்டையை ஊஞ்சல் ஆட்டிக் கொண்டு நின்றான். ஆளோடியில் கிடந்த ஓட்டாஞ் சில்லில் புத்தக மூட்டையின் முனை இடிக்க வேண்டுமென்று முனைந்து ஆட்டிக் கொண்டிருந்தான். அந்நேரத்தில் செய்யும் அவ்வேலையில் அவன் மனம் முனைந்திருந்தது. இவன் இன்னமும் அம்மா வரவில்லை என்று துக்கம் அடைத்த குரலில், ''அம்மா... அம்மோவ்'' என்று கதவைத் தொடர்ந்து கை சிவக்கத் தட்டினான். விரல்கணுவில் அடிபட்டு வலித்தது. பின் விரல்களை மடக்கிக் கொண்டு ஆத்திரத்தோடு கதவைக் குத்தினான். சின்னவன் ஊஞ்சல் ஆட்டுவதை நிறுத்தி விட்டான். வெய்யிலிலும் மழைச் சாரலிலும் நனைந்து காய்ந்து விரிந்த கதவு அதிர்ந்து தாழ் நாதாங்கியில் அதிரும் ஓசையைக் கேட்டுக் கொண்டிருந்தான் அவன். அவ்வோசையில் மனம் மகிழ்ந்து இவனும் இவன் காதுக்கு இசைந்த ஓசைக்குத் தக்க விட்டுவிட்டுக் குத்தினான். ''வந்துட்டேண்டா... இதோ வந்துட்டேன்'' என்று அம்மா ஓடி வரும் காலடி ஓசை கேட்டது. பெரியவன் கதவோரமாக இன்னும் நெருங்கிக் கதவில் நெற்றியைச் சேர்த்து கொண்டான். சின்னவன் புத்தக மூட்டையைத் தோளில் போட்டுக் கொண்டு கதவை நெருங்கி அதைத் தள்ள முனைந்தான்.

''இருடா கண்ணு வந்துட்டேன்'' என்று அவள் தாழை நீக்கின வேகத்தில் இருவரும் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தனர். அம்மாவைக் கண்டதும் பெரியவனுக்கு அழுகை பொத்துக் கொண்டது. அம்மாவின் காலைக் கட்டிக்கொண்டு புடவையில் முகம் புதைத்துக் கேவிக்கேவி அழ ஆரம்பித்துவிட்டான்.

''ஏண்டா ஏன்? என்ன ஆச்சு?'' என்றாள் அவன் முகத்தை நிமிர்த்தி. ஒரு நொடியில் அம்முகம் தனக்கு அறிமுகமில்லாததென உணர்ந்தாள். பின் அது தனக்கு அறிமுகமாகி வருவதையும் அறிந்தாள். அவள் கண்ணுக்குப் பின் கண்ணீர் மூட்டிற்று.

''வாத்தியார் அடிச்சுட்டாரு'' என்று அவன் தொடர்ந்து அழுதான். ''அடப்பாவி அவனுக்கு என்ன கேடு'' என்று அவனைத் தூக்கிக் கொண்டாள். கதவுக்குப் பின் மகிழ்ந்த இரு முகங்களை எதிர்பார்த்து ஓடி வந்தது தன் விதிக்கு எதிரானது என அவளுக்குத் தோன்றியது. அவள் கண்ணீர் கன்னத்தில் உருண்டது. சின்னவன் இதை எதிர்பார்க்கவில்லை. அம்மா அழுவதை அவன் கவனித்தான். ''ஆமாம்மா அடிச்சுட்டாரு'' என்று நடக்கத் தொடங்கியவனின் காலைக் கட்டிக்கொண்டு அவனும் அழ ஆரம்பித்துவிட்டான். அவனை அடித்தது இவனுக்கு தெரியாது. வரும் வழியில் இவனுக்கு அவன் ஏதும் சொல்லவில்லை. ஊமையாகவே மனதில் அழுகையைத் தேக்கி வைத்துக் கொண்டு வழி முழுவதும் நடந்து வந்தான்.

சின்னவனின் தலையைத் தடவிக் கொண்டே அவன் நடையைத் தடுக்க அவள் உள்ளே போய்க் கொண்டிருந்தான். நடக்க நடக்க ஊட்டிக் கொண்டே கன்றைப் போல அவன் நடந்து கொண்டிருந்தான். இவர் களைக் கண்டதும் கொட்டாய்க்காலில் குறுக்கிக் கட்டப்பட்டிருந்த பசுங்கன்று தலையைத் திருப்பிக் கொண்டு ''அம்பே'' என்றது. பசுவும் கன்றின் குரலுக்கு வாயில் எடுத்த வைக்கோலுடன் வயிற்றை எக்கி 'ம்' என்றது. தொடர்ந்து இரண்டு மூன்று முறை கூப்பிட்ட கன்றின் குரலிலும் பசுவின் பதிலிலும் கொட்டாய் அதிர்ந்தது.

அவள் தன் கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சமையற்கட்டின் கொட்டாய்ப்புற பின்வாயிற்படி வழியாக உள்ளே நுழைந்தாள். இவர்கள் வருகையை எதிர்பார்த்து காப்பிக்காக மண் குமுட்டியை விசிறிக் கொண்டிருந்த பாட்டி மூவரையும் பார்த்து ''என்னடி என்ன ஆச்சு?'' என்றாள். பிறகு சின்னவனை இழுத்து அணைத்துக் கொண்டாள். ''என்னடி கண்ணு, ஏண்டி கண்ணு அழறே?'' என்று அவன் கண்ணைப் புடவைத் தலைப்பால் துடைத்துவிட்டு மீண்டும் குமுட்டியை விசிற ஆரம்பித்தாள். அவன் அவள் மடியில் இருந்து கரி வெடித்து வெளியில் தெறிக்கும் தீப்பொறிகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

அவள் இடுப்பில் இருந்தவனைக் கீழே இறக்கி விட்டுவிட்டு ''அந்தப் படுபாவி வாத்தி அடிச்சுட்டானாம்'' என்று முகத்தைப் புடவைத் தலைப்பில் மறைத்துக் கொண்டு சுவர் ஓரமாக அமர்ந்து சப்தமின்றி உடல் குலுங்க அழுதாள். அவள் இறந்த தன் கணவனை நினைத்துக் கொண்டாள்.

பாட்டி பெரியவனை அழைத்துக் கண்களைத் துடைத்து விட்டு ''அழாதே, காப்பியைக் குடி, நாளைக்கி நான் வந்து சொல்றேன், அடிக்க மாட்டான்" என்று அடுப்பை விசிறுவதில் முனைந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக விசிறல் வேகம் பெற்றது. குமுட்டி வாயில், மூட்டக் கொளுத்திப்போட்ட காகிதக் கருகல் காற்றில் உருண்டு வெளிப்பட்டுச் சிதறிப் பறந்தது. குமுட்டித் தணல் வெடித்துத் தீப்பொறி தெறித்தது. தணல் கனிந்து செம்மை வெண்மையாயிற்று. தணலில் சிறிய தீ நாக்குகள் ஆடின.

குழந்தைகளின் மீது விழும் அடி அவை அப்பனை இழந்ததை அவளுக்குச் சொல்வது போலிருந்தது. தன் மகனின் மறைவுக்குப் பிறகு அப்பள்ளிக்கூடம் விலகி தூரப் போய்க் கொண்டிருப்பது போலத் தோன்றிற்று. அவன் வாழ்ந்து கொண்டிருக்கும்போது அவனோடு அவன் வேலை செய்த பள்ளி யின் மீது பாசத்தை வளர்த்துக் கொண்டிருந்தாள் அவள். அவளுக்கு அது தன் உடமை எனத் தோன்றிற்று அப்போது. குமுட்டியை அவள் விசிறிக் கொண்டே இருந்தாள். பால் பொங்கி வழிந்து தீய்ந்து நாறிற்று.

''என்னம்மா?''

''இல்லேடி'' என்று அவசர அவசரமாகப் பாலை இறக்கிக் கீழே வைத்துவிட்டு, ''எந்தத் தடியன் அடிச்சவன். தோப்பன் இல்லாத குழந்தையை அடிக்கறமேன்னு இருக்க வேண்டாம். அப்பனோட சேர்ந்து ஒழைச்சமேங்கறது மறந்து போச்சா'' என்று தன் கண்ணைத் துடைத்துக்கொண்டு காப்பியைக் கலக்க ஆரம்பித்தாள்.

கொட்டாயில் கன்று கூப்பிட்டுக் கொண்டே இருந்தது. 'ம்....ம்' என்று ஏதோ யோசனை போல் பதில் சொல்லிக் கொண்டிருந்த பசு கன்றின் அழைப்பு தனக்கல்ல என்பதை உணர்ந்தது போல், வாய்விட்டு ''அம்மா'' என்று கொட்டாய் அதிரும்படி அடுப்பங்கரையில் இருந்தவர் களை அழைத்தது.

''கன்னுக்குட்டியை ஊட்ட அவிழ்த்துவிட மறந்துட்டியா என்ன?'' என்றாள் பாட்டி.

''ஒரு எழவும் ஞாபகம் இருக்க மாட்டேங்கறது'' என்று அம்மா நீர்வடிந்த மூக்கைப் புடவைத் தலைப்பில் சிந்திவிட்டு கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து கொட்டாய்க்குப் போனாள். பாட்டி காப்பியைக் கலந்து குழந்தைகளின் முன் வைத்தாள். கூடத்தில் தெருப் பையன் குரல் கொடுத்தான். ''வரேண்டோய்'' என்று காப்பியைக் குடித்துவிட்டு நுரை ஒட்டிய உதடுகளோடு சின்னவன் தெருவிற்கு விளையாட ஓடி விட்டான். பெரியவன் கூடத்து ஊஞ்சலில் போய்ப் படுத்துக் கொண்டான். மறுநாட்காலையில் பள்ளிக் கூடம் கிளம்பும்போது அவன் சொரத்தாய் இல்லை. முகம் கசந்திருந்தது. வயிற்றை வலிக்கிறது என்று ஊஞ்சலில் போய்ப் படுத்துக் கொண்டான். சமீபகாலமாக அவன் பள்ளிக்குச் செல்ல முடியாது என்று அடம்பிடிக்க ஆரம்பித்திருந்தான். கட்டாயப் படுத்தி அனுப்ப வேண்டியிருந்தது. அவன் முரணக்கூடும் என எதிர்பார்த்து பாட்டி தயாராகக் கிளம்பிக் கொண்டிருந்தாள். அவன் இயல்பாகச் செல்பவனைப் போலவும் அவனுக்குத் தாமதம் இல்லாது உதவியாக அவள் தயார் எனத் தோன்றும் படியும் நடந்து கொண்டாள். கடைசியில் பள்ளிக் கூடம் போவதைத் தவிர்க்க முடியாது எனத் தெரிந்ததும், ''நீ வந்தா இன்னும் அடிப்பாரு பாட்டி'' என்று அழ ஆரம்பித்துவிட்டான்.

''அழக்கூடாதுடி கண்ணு. சமத்தா இருக்கணும்'' என்று பாட்டி அவனைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள். அம்மா முற்றத்தில் நின்று தாழ்வாரத்துக் குறட்டில் நின்று கொண்டிருந்த சின்ன வனுக்கு சட்டை போட்டுக் கொண்டிருந் தாள். ரேழிக்கதவு தாழிடப்பட்டிருந்தது. வாயிற்கதவு திறந்திருந்தது. யாரோ ரேழிக்கதவைத் தட்டினார்கள்.

''போய்க்கதவைத் திறந்துட்டுவா'' என்றாள் பாட்டி. அவனைச் சமாதானப்படுத்த இதுவும் ஒருவழி என அவளுக்குத் தோன்றிற்று. அவன் ஊஞ்சலை விட்டுக் கிளம்பவில்லை. சின்னவன் ஓடிப் போய்க் கதவைத் திறந்தான். வருவது யார் எனத் தெரியாது. அம்மா உள்ளே போய்விடத் தாழ்வாரத்தில் ஏறினாள்.

அதற்குள் ரேழி வாயிற்படியைத் தாண்டி ''இன்னிக்குத் தான் பட்டணத்திலிருந்து வந்தேன். இப்படிச் செஞ்சுட்டானேடி'' என்று முந்தானையால் வாயைப் பொத்திக் கொண்டு வந்த எதிர்த்த வீட்டுப் பாட்டி தாழ்வாரத்துக் குறட்டில் தூணில் சாய்ந்து உட்கார்ந்தாள். அடுப்பங்கரைக்குப் போகத் தாழ்வாரத்தில் ஏறியவள் அப்படியே உட்கார்ந்து அழுதாள். பாட்டி இவனைச் சமாதானப்படுத்துவதை நிறுத்திவிட்டு அழுது கொண்டு தாழ்வாரத்தில் போய் உட்கார்ந்தாள். திரும்பி வந்த சின்னவன் அம்மாவின் முதுகில் சாய்ந்து கழுத்தைக் கட்டிக் கொண்டு விசும்பினான். இவன் ஊஞ்சலில் இருந்தபடியே தன் அழுகையைத் தொடர்ந்து நீட்டினான். அப்பா இறந்த பிறகு துக்கம் கேட்க வந்தவர்கள் அம்மாவையும் இவனையும் அழ வைத்தார்கள். அவர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தார்கள். அப்பா, அப்பா என்று சொல்லி அழ வைத்து விட்டார்கள். இந்தப் பாட்டி எழுந்து தொலைந்தால் போதும் என்றிருந்தது. வீட்டை விட்டு வெளியில் போய்விட வேண்டும் போலிருந்தது.

அவள் துக்கம் கேட்டுவிட்டுப் போகக் கொஞ்ச நேரம் பிடித்தது. பாட்டி மிகுந்த ஆயாசத்தோடு எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டு இவனைப் பள்ளிக்கு அழைத்தாள். அவனும் உடன்பட்டுக் கிளம்பினான். சாலையோடு வர அவள் மறுத்து விட்டான். அப்பாவோடு அவன் தினம் சாலையோடயே பள்ளிக்கூடம் போனான். இப்பொழுது அவன் கடாரங்கொண்டான் வாய்க்காலைக் கடந்து குறுக்கு வழியாகவே போவதை விரும்பினான். ஆனால் வாய்க்காலில் அதிகத் தண்ணீர் இருக்கும்போது சாலையோடேயே போயாக வேண்டும். நடமாட்டம் அதிகம் இல்லாத குறுக்கு வழியே அவனுக்குப் பிடித்திருந்தது. வாய்க்காலைக் கடந்ததும், பூண்டுகள் முளைத்த பொட்டல் திடல், பூண்டுகளுக்கு இடையில் நடந்து நடந்து புல் முளைக்காமல் தேய்ந்து குழிந்து போன ஒற்றையடிப் பாதை தனிமையாக கொல்லன் பட்டறை வரையில் போகிறது. கொல்லன் பட்டறைக்கருகில் அது சாலையில் இணைகிறது. மூவரும் கொல்லன் பட்டறையை நெருங்கிக் கொண்டிருந்தனர். பட்டறையில் கட்டைச் சுற்றி மூட்டியிருந்த வரட்டித்தீ எரிவதைப் பார்த்துச் சற்று நின்றனர் இருவரும். அது உள்ளே தணலும் வெளியில் கரியும் புகையுமாக எரிந்து கொண்டிருந்தது.

''நேரமாச்சு போகலாம் வா'' என்றாள் பாட்டி. ''கொஞ்சம் வேடிக்கை பார்த்து விட்டுப் போகலாம்'' என்றான் இவன். பட்டறைக் கொட்டாயில் துருத்தி ஆட்டிக் கொண்டிருந்த சிறுவன் இவர்களைப் பார்த்துச் சிரித்தான். அவனைப் பார்த்து, ''நான் கொஞ்சம் ஆட்டட்டுமா?'' என்றான் இவன். உலையில் இரும்புத் துண்டை காய்ச்சிக் கொண்டிருந்தவன் உலை தணிவதைக் கண்டு சிறுவனை அதட்டினான். அவன் திரும்பி துருத்தியின் நீண்ட மூங்கில் கைப்பிடியை வேகமாக ஆட்ட ஆரம்பித்தான். இவனுக்கு அந்த கைப் பிடியைத் தானே ஆட்ட வேண்டு மென்றிருந்தது. வண்டி கட்டிவிட வந்தவர், ''டேய் பசங்களா, பள்ளிக்கூடத்திலே மணி அடிக்கப் போறான், இங்கே என்ன வேடிக்கை, ஓடுங்க, ஓடுங்க'' என்றார். இவர்கள் நின்று கொண்டே இருந்தனர். ''பாவம் வாத்தியாரு இதுங்களே விட்டுவிட்டு இப்படிச் சின்ன வயசிலே பூட்டாருங்களே'' என்றான் கொல்லன் பாட்டியைப் பார்த்து.

பெரியவன் அங்கு நிற்கப் பிடிக்காமல் கிளம்பி விட்டான். சின்னவன் பின் தொடர்ந்தான். பாட்டி பெருமூச்சு விட்டுக் கொண்டு கிளம்பினாள். மூவரும் சாலை யோடு வடக்கே நடந்தனர். தூரத்தில் பள்ளிக்கூடம் தெரிந்தது. கடாரங்கொண்டான் பெருமாள் கோயிலுக்குப் பின்னால் அக்ரகாரத்துப் பையன்கள் தோளில் புத்தக மூட்டையோடு பள்ளிக் கூடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். பையன்களைப் பார்த்ததும் அவனுக்கு பயம் தோன்ற ஆரம்பித்தது. தயங்கினான். பாட்டி அவன் கையைப் பிடித்துக் கொண்டாள். ''வாத்தியார் அடிப்பாரு பாட்டி'' என்றான். ''நான் இருக்கேன். அடிக்க மாட்டான் பா'' என்று தயங்கியவனைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போனாள். பாட்டியின் நடையைவிட அவன் நடை மெதுவாக இருந்தது. பள்ளிக்கூடத்தில் நுழைந்ததும் சின்னவன் தன் வகுப்பறைக்குப் போய் விட்டான். இவனைப் பாட்டியோடு கண்டதும் வாத்தியார், ''என்னடா பாட்டியே தொணக்கி அழைச்சிக்கிட்டு வந்தியா?'' அவன் பதில் சொல்லவில்லை.

''நீங்க அடிக்கறேள்னு அழுதுண்டு வர மாட்டேனுட்டான்'' என்றாள் பாட்டி.

''ஏண்டா... நான் உன்னை அடிக்கறேனா?'' என்றார் அவர். அவன் அதற்கும் பதில் சொல்லவில்லை, கண்ணீர் மூட நின்றான்.

''சொல்லேண்டா. ஒங்க பாட்டி கடிச்சுத் தின்னுடுவாங்க போலேருக்கே'' என்றார் சிரித்துக் கொண்டே.

''சொல்லேண்டா'' என்றாள் பாட்டி. அவன் பாட்டியைப் பார்த்து ''இல்லே'' என்றான்.

''பாத்தீங்களா பாட்டி!''

''மனசு கேக்கமாட்டேங்கறதேன்னு வந்தேன்'' என்றாள் பாட்டி. வரும்போது இருந்த மனநிலை மாறி விட்டது. அவளுக்கும் இந்தப் பள்ளிக்கும் இனிச் சம்பந்தமில்லை எனத் தோன்றிற்று.

''போய் இடத்தில் உட்கார்'' என்றார் அவர் அவனைப் பார்த்து.

''அப்போ நான் வரட்டுமாடா?'' என்றாள் பாட்டி. அவன் பதில் சொல்லாமல் தலையை அசைத்து விட்டு தன் இடத்திற்குப் போய்விட்டான்.

''நான் பார்த்துக்கறேன், நீங்க போய்ட்டு வாங்க'' என்றார் அவர். ''தோப்பன் இல்லாத கொழந்தே'' என்று சொல்லிக் கொண்டே திரும்பி விட்டாள் பாட்டி. அவள் அதை தனக்குச் சொல்லிக் கொண்டாளா, அவனுக்கோ அவருக்கோ சொன்னாளா என்று குறிப்பிட முடியாமல் சொல்லிக் கொண்டே போனாள்.

வாத்தியார் கையில் பிரம்பை எடுத்துக் கொண்டார். பாடம் ஆரம்பமாயிற்று. பிரம்பை அவர் விரல்களில் விழாமல் சுழற்றிக் கொண்டிருந்தார். அது இல்லாமல் அவரால் இருக்க முடியாது போலத் தோன்றிற்று. அவர் தனக்காகவே பிரம்பு வைத்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டான் இவன். பாட்டியை அழைத்துக் கொண்டு வந்ததற்காக அடிக்கப் போகிறார் என்று நினைத்தான். பையன்கள் எல்லோருமே பிரம்பைப் பார்த்து விழித்துக் கொண்டிருந்தார்கள். அவர் பையன்கள் பக்கமாக நடந்து வந்து கொண்டிருந்தார். இவன் அவரையே விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். இவனிடம் வந்ததும் 'முழிக்காதே முழி அப்படியே தங்கிவிடப் போகுது' என்றார். பையன்கள் எல்லோருடைய பார்வையும் அப்படியே தங்கிவிடப் போவதாக இவனுக்குத் தோன்றியது. கடாரங்கொண்டானில் இனிமேல் எல்லோரும் இப்படித்தான் விழிக்கப்போகிறார்கள். புஞ்சையில் இவன் மட்டும் இப்படி விழிப்பான். இனிமேல் புஞ்சைக்கும் கடாரங்கொண்டானுக்கும் பார்வையில் நிறைய வித்தியாசம் இருக்கப் போகிறது.

இரண்டாவது சுற்றுக்கு இவன் முன் வந்தவர் "எங்கே கவனிச்சிட்டிருக்கே" என்று பிரம்பைக் கையில் பிடித்துக் கொண்டார். இவனை அடிக்கவில்லை. அடிக்க விரும்பியதைப் போலவேகமாக முகத்திற்கு நேரரே ஆட்டிவிட்டுப் போய் மேஜை மீது அமர்நது கொண்டார். அவன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். கண்ணை இமைக்காமல் அவரையே பார்த்தான். வகுப்பு அறையின் வெற்று இடம் மட்டும் அவனுக்குத் தெரிந்தது. மற்றவை மறைந்தன. கண் முன் வெற்று இடத்தில் பல வடிவத்தில் பூக்கள் பூக்களாக சங்கிலித் தொடராகவும் தனித்தும் பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன. கோடியில் வாத்தியார் தனித்து தன்னைச் சுற்றி வெளிச்ச விளிம்பு கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.

அவர் சாயலில் இவன் அப்பாவைப் போலவே இருப்பதாகத் தோன்றிற்று. ஆனால், அப்பாவின் முகம் அதற்குள் இவனுக்கு மறந்துவிட்டது. இப்பொழுது முயன்றால் இவனுக்கு வாத்தியாரின் முகம்தான் நினைவுக்கு வருகிறது. அவன் அப்பாவோடேயே இருந்தான். இறந்து போனபோதுகூட அவன் பக்கத்தில் இருந்தான். இந்தப் பள்ளிக்கூடத்தில்தான் அவர் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் போதே இறந்தார். மார்பை வலிக்கிறது என்று பிடித்துக் கொண்டு நாற்காலியில் சாய்ந்தவர் கொஞ்ச நேரத்தில் இறந்து விட்டார். எல்லா வாத்தியார்களும் அவரைச் சூழ்ந்து கொண்டிருந்தார்கள். பையன்களும் கூடிக் கொண்டனர். அவன் அழுது கொண்டே முண்டியடித்து இடுக்கு வழியாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த முகத்தை இவனால் நினைவுபடுத்திக் கொள்ள முடியவில்லை. அங்கே இந்த வாத்தியாரின் முகம்தான் தோன்றுகிறது. கையில் பிரம்பை ஆட்டிக் கொண்டிருக்கிறார் அவர். இவனை அழ மூட்டிக்கொண்டிருக்கிறார். வகுப்பில் நடந்தது ஒன்றும் இவனுக்குத் தெரியவில்லை. காலை வகுப்பு முடிந்த மணி அடித்தது. பையன்கள் வீட்டுக்குக் கிளம்பினார்கள். இவன் விழித்துக் கொண்டு புத்தக மூட்டையை எடுத்துக் கொண்டு கடைசியாகக் கிளம்பினான். பையன்கள் எல்லோரும் போய்விடத் தான்
மட்டும் தனியாக இருந்தது அவனுக்குப் பயமாய் இருந்தது. வாத்தியாரும் தனியாய் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். எங்கோ நோக்கம் இருந்த இவனுடைய பயந்த பார்வையில் அவர் பூதாகாரமாய் வகுப்பையே அடைத்துக் கொண்டிருப்பது போலத் தெரிந்தது. ஒரே தாண்டலில் வகுப்பறையை விட்டு ஓடிவிட வேண்டும் போலிருந்தது. வாயிற்படியைத் தாண்டி ஓடியவன் தடுக்கிக் கீழே விழுந்தான். வாத்தியார் ஓடிவந்து இவனைத் தூக்கி விட்டார். இறந்து போன தன் அப்பாவே பின்னால் வந்து இவனைப் பிடித்துக் கொண்டது போலிருந்தது. 'ஓ' வெனக் கதறிவிட்டான்.

''பாத்து.. பாத்து.. பாத்துப்போ'' என்றார் அவர். புத்தக மூட்டையைத் தோளில் போட்டுக்கொண்டு தம்பி வருகிறானா என்று கவனிக்காமல் ஓடினான். அவன் இவன் பின்னால் ஓடினான். அவன் இவனைத் தூரத்திக் கொண்டு வருவது போல் இவனுக்குப் பயமாய் இருந்தது. வீட்டில் கொல்லைக் கதவு திறந்தே இருந்தது. ''அம்மா... அம்மா...'' என்று கூப்பிட்டுக் கொண்டே ஓடினான். அம்மாவைக் கண்டதும் ஓடிப்போய்க் கட்டிக் கொண்டான். கேவிக் கேவி அழுதான். முகம் சிவந்திருந்தது. வாய் கோணிக் கொள்ள நெஞ்சுக் குழியில் சதை குழிந்து குழிந்து எழும்ப சப்தம் எழாது மூச்சு நின்றுவிடும் போல அழுதான். அவன் அழுவதைக் கண்டு தம்பியும் அழுதான். இன்னும் ஒருமுறை தன் கணவனை நினைவுபடுத்திக் கொண்டு அவளும் அழுதாள். "அந்த நாசமாய்ப் போற பள்ளிக்கூடத்தை தொலைச்சுத் தலைமுழுகு" என்று அவனை அணைத்துக் கொண்டாள்.

"அவனுக்கு அப்புறம் நமக்கு அங்கே என்ன வேலைன்னு இருந்திருக்கணும். நாளைக்கி நான் புஞ்சைப் பள்ளிக்கூடத்திலே கொண்டு சேர்த்துட்டு வந்துடறேன்" என்று பாட்டி தன் கண்ணைத் துடைத்துக் கொண்டு அவன் கண்ணையும் துடைத்துவிட்டாள்.

ந. முத்துசாமி

© TamilOnline.com