தமிழில் சிறுகதை நவீனத் தன்மைகளின் உணர்திறன், அனுபவ வெளியைக் கடந்து தன்னளவில் சுயத்துவமிக்க தரிசனங்களை வெளிப் படுத்தத் தொடங்கியது. இதன் மூலம் படைப்பு அனுபவம் மட்டுமல்ல கதையின் எடுத்துரைப்பில் புதிய மாற்றமும் மொழி நடையும் ஏற்பட்டது.
ஒவ்வொரு எழுத்தாளரின் ஆளுமை மலர்ச்சிக்கேற்ப வித்தியாசமான படைப்பாக்கங்கள் தமிழுக்கு வந்து சேர்ந்தன. இந்தத் தொடரோட்டத்தில் 'எழுத்து' பத்திரிகை மூலம் அறிமுகமானவர் ந. முத்துசாமி. இவர் பெரும்பாலும் நவீன தமிழ் நாடக வரலாற்றில் அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருப்பவர். இருப்பினும் இவர் எழுதிய சிறுகதைகள் கதைசொல்லல் மரபில் புதுத்தடம் அமைத்தன.
முத்துசாமி இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 சிறுகதை கள் அடங்கிய 'நீர்மை' என்ற முதல் தொகுதி க்ரியா வெளியீடாக 1984 இல் வெளிவந்தது.
முத்துசாமி 1936 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்திலுள்ள புஞ்சை என்னும் கிராமத்தில் பிறந்தவர். அந்தக் கிராமத்துச் சூழல் கட்டமைத்த மனவோட்டம் சார்ந்து இயங்குபவர். தன்னை அறிந்து கொள்ளும் தேடலாகவே எழுத்து இவருக்கு அமைந்துள்ளது. இவரது கதைகள் பொரும் பாலும் முத்துசாமியின் உள்நோக்கிய சுயப்பிரக்ஞைக்கான தரிசன வேள்வி என்றே கூறலாம்.
முத்துசாமியுடன் நெருங்கிப் பழகும் எழுத்தாளர் அசோகமித்திரன் இவர் குறித்து தனது அபிப்பிராயங்களை சில இடங்களில் பதிவு செய்திருக்கிறார். "தான் ஒரு இலக்கியப் படைப்பாளி என்று கூட இன்னும் உணர்த்திக் கொள்ளவில்லை. இவ்வளவு சிறப்பான சிறுகதைகளைப் படைத்திருந்தும் ஒரு மிகச் சாதாரண எழுத்தாளருக்குள்ள தன்னபிப்பிராயம் கூடக் கிடையாது" என்கிறார் அசோகமித்திரன்.
"படைப்பிலக்கியத் துறையில் சிறுகதை மட்டும் என்றில்லாமல் நெடுங்கதைகள் நாவல் முதலியவைகளிலும் முத்துசாமி ஈடுபட்டிருந்தால் ஒருவேளை அவர் பெயரும் அவருடைய தனிச்சிறப்பும் இன்னும் அதிகமான வாசகர் கவனத்திற்கு வந்திருக்கக் கூடும். அவரைத் தெரிந்த சிறுவாசகர் குழுவுக்குக் கூட முத்துசாமி நவீன தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் என்றொரு உணர்வு ஏற்பட்டிருக்கிறதா என்பது சந்தேகம். காரணம் முத்துசாமியின் கதைகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகே வெளிவருகின்றன."
இவ்வாறு அசோகமித்திரன் குறிப்பிட்டிருப்பது மிகப் பொருத்தமாகவே உள்ளது. சிறுபத்திரிகை வாசகர் வட்டத்தில் 'நாற்காலிக்காரர்', 'சுவரொட்டிகள்' ஆகிய நாடகங்கள் மூலம் நாடகத் துறை சார்ந்தவராகவே அடையாளம் காணப்பட்டுள்ளார். கூத்துப்பட்டறை என்ற அமைப்பின் மூலம் நவீன நாடகங்களை மேடையேற்றும் முயற்சிகள் பலவற்றையும் மேற்கொண்டு வருகிறார்.
நாடகக் கலைஞரான முத்துசாமிக்குள் அமிழ்ந்து கிடக்கும் சிறுகதைக் கலைஞன் சரியாக இனங்காணப்பட்டால் நவீன தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் ந. முத்துசாமியும் தவிர்க்கப்பட முடியாதவர் என்ற கணிப்பு தெளிவாகும். ‘நீர்மை’த் தொகுதியுடன் வாசகர் கொள்ளும் உறவு முத்துசாமியின் அறியப்படாத உலகில் பயணம் செய்யும் வாய்ப்பை நிச்சயம் வழங்கும்.
“தொடர்ந்து எழுதிக் கொண்டு போகிற போது படித்துப் படித்து விரும்புகிற சப்த ஓட்டமும் கதை ஓட்டமும் கிடைக்கிற வரையில் திருத்தித் திருத்தி எழுதிக் கொண்டிருப்பேன். பகுதி பகுதியாகத் திருத்தி எழுதிக் கொண்டிருப்பேன்” என்று தனது எழுதுதல் பற்றிய செயல்பாட்டை முத்துசாமி குறிப்பிடுகிறார். ஆக இத்தகைய 'எழுதுதல்' தான் முத்து சாமியின் நடைச் சிறப்புக்குக் காரணம்.
தெ. மதுசூதனன் |