பலவிதமாகத் தென்றலுடன் தொடர்புடைய சென்னை ஆன்லைன் (chennaionline.com) ஏழு ஆண்டுகளைக் கடந்து எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் தென்றலின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமெரிக்க அதிபர் தேர்தலைப் பற்றிப் படிக்கும் போதெல்லாம், அங்கே (மற்றும் ஏனைய மேற்கத்திய நாடுகளில்) உள்ள அரசியல்வாதிகளின் சந்தர்ப்ப வாதமும், அங்கே நிலவும் குறுகிய மனப்பான்மையும் இந்தியாவுக்குக் கொஞ்சமும் குறைவில்லை என்று நினைத்துக் கொள்வேன்.
இப்போது கடைசியாக புஷ்/கெர்ரி விவாதங்களின் அடிப்படையைப் பார்க்கும்போது, இந்த எண்ணம் வலுப்படுகிறது. கெர்ரி தற்சமயம் இராக் மீதான போர்பற்றிய தவறுகள் என்று பட்டியலிட்டுக் காட்ட முயல்கிறார். ஆனால் இப்பிரச்சினையின் ஆரம்பத்தில், இப்போர் நியாயமில்லை என்று அழுத்தமாகச் சொல்லத் துணியவில்லை அவர். ஏனென்றால், அமெரிக்க மக்கள் இப்போரை ஆதரிக்கும் பட்சத்தில் அவர் ஓட்டுக்களை இழக்க நேரிடும். அதேபோல் ·ப்ரெஞ்சு மொழியில் நன்கு பேசத் தெரிந்த அவர், அமெரிக்கப் பத்திரிக்கையாளர்கள் மற்றும் தொலைக்காட்சியினர் முன்னே வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்கள் அவரிடம் ·ப்ரெஞ்சில் கேள்வி கேட்டபோது காதில் விழாதது போல் இருந்து விட்டார். ஏனென்றால் பழமைவாதிகள் அதைக் காரணம் காட்டி அவரை 'மண்ணின் மைந்தர்' இல்லையெனச் சித்தரிக்கக் கூடும்; வாக்காளர்கள் அவ்வாறே எண்ணவும் கூடும்!
புஷ் இராக் மீது போர் தொடுப்பதற்குமுன் கதை கதையாகச் சொன்னார்: இராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் பெரிதும் இருக்கின்றன. ஆகவே...
இப்போது அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று ஆகிவிட்டது. ஆனால் தான் எந்தத் தவறும் செய்யாதது போல் புஷ் மற்றும் அவரது உயர் சகாக்கள் வலம் வருகிறார்கள். ஆக மொத்தம், ஒரே குட்டையில் ஊறிய இரண்டு மட்டைகளில் ஒன்றையே தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு விரும்பத்தகாத நிலையில் அமெரிக்கா இருக்கிறது.
பெரிய வருத்தம் மற்றும் கவலை: இராக் மீது போர் தொடுக்க அமெரிக்காவுக்குச் சரியான முகாந்திரம் இருந்ததா என்ற முக்கியமான கேள்வி பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு முக்கியமில்லாத கேள்வியாக இருக்கிறது.
மீண்டும் சந்திப்போம் பி. அசோகன் அக்டோபர் 2004 |