குமரிக் கடலாக, குற்றால அருவியாகத் தமிழமுதத்தை, தன் பேச்சாற்றாலால் அள்ளி வழங்கக் கூடிய இலக்கியச் செல்வர் திரு.குமரி அனந்தன் சென்ற அக்டோபர் 15-16 தேதிகளில், வளைகுடாப் பகுதிக்கு வந்திருந்தார். திரு. குமரி அனந்தன் தமிழ் இலக்கியங்களில் பெரும் புலமை பெற்ற சிறந்த சொற்பொழிவாளர். முன்னாள் தமிழக முதல்வர் காமராஜருடன் 12 ஆண்டுகள் பணியாற்றியவர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர். தமிழில் தந்தி விண்ணப்பங்கள், காசாணை (மணியார்டர்) வேண்டும் எனப் போராடிப் பெற்றுத் தந்தவர்.
அக்டோபர் 15 மாலை தமிழ் மன்றத் தலைவர் இல்ல விருந்தில், திரு. குமரி அனந்தனுடன் ஒரு கலந்துரையாடல் இருந்தது. சுவையான உணவிற்கு நடுவே, குமரி அனந்தன் தனது பொதுவாழ்வின் சுவையான சில தருணங்களைப் பகிர்ந்து கொண்டார். காமராஜருடன் தான் பழகிய காலங்களையும், அவரது எளிமையான அரசியல் வாழ்வையும் நினைவு கூர்ந்தார். ராஜாஜி, காமராஜர் போன்ற தலைவர்களிடம் நிலவிய அரசியல் நாகரீகத்தையும் பண்பாட்டையும் பற்றிப் பேசுகையில், அவரது கண்கள் பனித்தன. அரசியல் அனுபவங்கள் தவிர உரையாடல், தமிழர் காலக் கட்டிடக் கலை, கலைகள், சிலப்பதிகாரம், சங்க காலத் தமிழகத்தின் சிறப்புகள், களப்பிரர்கள் ஆண்ட இருண்ட காலம், என்று அரசியல், வரலாறு, சினிமா, இலக்கியம் என்று பல்வேறு தளங்களிலும் தாவிச் சென்று, கலந்து கொண்ட அனைவருக்கும் இனிமையான ஒரு இரவுப் பொழுதாக கழிந்தது.
அக்டோபர் 16ம் தேதி, சான் ஓசே நகர் மார்டின் லூதர் கிங் நூலகத்தில், தமிழ் மன்றம் இலக்கிய நிகழ்ச்சிக்குப் பெர்க்கலி பல்கலைக் கழகத் தமிழ்ப்பீடப் பேராசிரியர் திரு. ஜார்ஜ் ஹார்ட் தலைமையேற்றுச் சிறப்புரை ஆற்றினார். தமிழின் தொன்மை குறித்தும், அதன் சிறப்புக்கள் குறித்தும், செம்மொழிக்கான தகுதி குறித்தும் பல தகவல்களை வழங்கினார். தலைவரின் அறிமுகத்தைத் தொடர்ந்து, குமரி அனந்தன் 'வெல்லும் சொல்லும், கொல்லும் சொல்லும்' என்ற தலைப்பில் பேசினார். ஒரு மணி நேரத்து மேலான அவரது பேச்சு, கூட்டத்தினரை மயக்கும் விதமாக, சுகமான நடையில், சொக்கும் மொழியில் அமைந்திருந்தது. தமிழ்நாட்டின் தோற்றம், தமிழ் மொழியின் தோற்றம், வளர்ச்சி, தடைகள், மொழி பரவும் விதம், எதிர்காலத் தமிழின் நிலமை என பல்வேறு தளங்களையும் அவரது பேச்சுத் தொட்டுச் சென்றது.
தமிழ் மொழி எவ்வளவு செழிப்பானது, மக்கள் எப்படி அவற்றை கையாண்டனர் என்பதையும் பல சுவையான சம்பவங்கள் மூலமாக விளக்கினார். வீட்டில் உள்ள குப்பைகளை அகற்றும் செயலைத் தமிழில் எவ்வாறு, கூட்டிப் பெருக்குவது என்ற வளர்ச்சியைக் குறிக்கும் தமிழ் சொற்களால் மங்களகரமாகப் பயன்படுத்தியிருக்கின்றனர். அது போல பின் தூங்கி, முன் எழும் மங்கையர்கள் குறித்த அவரது வர்ணணை, ஒரு பழங்காலத் தமிழக இல்லத்தையே நம் மனக்கண் முன்னே கொண்டு நிறுத்தியது. ஒரு தேர்ந்த எழுத்தாளருக்குரிய வர்ணனையுடன், அவரது பேச்சு அமைந்திருந்தது. அது போல், ஊர், வாய்க்கால், கால்வாய், போன்ற பல்வேறு காரணப்பெயர்கள் அமைந்த காரணங்களையும் அவற்றை, இனிய தமிழில் கையாளப்பட்ட இடங்களை, அழகுற விளக்கினார். தமிழில் உள்ள வாழவைக்கும் வளமான சொற்களின் பயன்பாடுகளையும், தாழ வைக்கும், கொல்லும் சொல்லாக மாறிய ஒரு சில இலக்கிய இடங்களையும் சுட்டிக் காட்டி, பேச்சின் இறுதியில், ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை கூறி தனது அற்புதமான உரையை முடித்துக் கொண்டார்.
71 தேர்தலில் காமராசர் தலைமை வகித்த காங்கிரஸ் தோற்றவுடன், நடந்த கடற்கரைக் கூட்டத்தில், ரஷ்யாவில் இருந்து வரவழைக்கப்பட்ட பொய் மையின் உதவியுடன், பொய்மை எப்படி வாய்மையை வென்றது என்று காமராசர் முன்பு இவர் பேசியிருக்கிறார். ஆனால் அதே தகவலை காமராஜர் பேச மறுத்து விட்டிருக்கிறார். அப்படித் தான் பேசியிருந்தால், உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் பெருமையான ஜனநாயகம் என்பதும், தேர்தலும் கேலிப்பொருளாக மாறியிருக்கும். என் தாய் நாட்டின் பெருமை குலையும் விதமாக என் பேச்சு என்று மே அமைந்து விடாது, தோல்வியைப் பெருந்தன்மையாக ஏற்றுக் கொள்வேனே ஒழிய, என் தாய்நாடு தாழ்வடையும் விதத்தில் என் சொற்கள் அமைந்திடா என்று கூறியிருக்கிறார். இதைச் சொல்லும் பொழுது, குமரிஅனந்தனது குரல் கம்மி, உணர்சி வசப்பட்டு நெகிழ்ந்து விட்டார். அவரது உணர்ச்சிகரமான பேச்சு கலந்து கொண்டோர்களையும் கலங்க வைத்துச் சிந்திக்கத் தூண்டியது.
அவரது சொற்பொழிவிற்குப் பிறகு, வினாவிடை நேரத்தில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப் பட்டதன் பயனாய், ஆண்டொன்றுக்கு நூறு கோடி ரூபாய்கள் வழங்கப்படும் எனவும், அது தக்க முறையில், தமிழின் வளர்ச்சிக்குச் செயல் படுத்தப்பட வேண்டுமெனவும் கூறினார். அவ்வாறு அறிவிக்கப்படுவதற்கு தான் மேற்கொண்ட முயற்சிகளையும், போராட்டங்களையும் விளக்கினார். நதி நீர் இணைப்புத் தொடர்பான ஒரு கேள்விக்கு, தான் தமிழக நீர்ப்பாசன மாநாடு நடத்தியதையும் , நதி நீர் இணைப்பு குறித்து தான் மேற்கொண்ட முயற்சிகளையையும், அதன் தொடர்பாக தான் எழுதிய புத்தகம் ஒன்றின் தகவல்களைப் பற்றியும் எடுத்துக் கூறினார். தமிழர்கள் தங்கள் இலக்கிய வளங்களான ஏட்டுச் சுவடிகளைப் பாதுகாக்கத் தவறியதின் காரணமாக இழந்த ஏராளமான செல்வங்களைப் பற்றியும், உ வே சா மிஞ்சியதை மீண்டெடுத்த தகவல்களையும் கூறி, செம்மொழி அறிவிப்பின் காரணமாக வழங்கப்படும் பணத்தின் மூலமாக, தமிழின் பண்டைய செல்வங்களைப் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தினையும், அதன் தொடர்பாக எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்தும் பதில்களை வழங்கினார். இந்தியாவின் தென் கோடியானக் குமரிக் கரையில் ஒரு பண்பாட்டுத் தகவல் மையத்தை தான் கட்டி வருவதாகவும் அதற்கான நிதிஉதவி வேண்டிய தகவல்களையும் தெரிவித்தார்.
தமிழுக்காக குமரிஅனந்தன் அவர்கள் அளித்துள்ள சேவையைப் பாராட்டி, வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் சார்பாக ஒரு பட்டயத்தை தலைவர் மணி மணி வண்ணன் வாசிக்க, ஜார்ஜ் ஹார்ட் குமரிஅனந்தனுக்கு வழங்கினார். தில்லைக்கலியபெருமாள் அவர்கள் நன்றி அறிவிக்க விழா இனிதே நிறைவேறியது.
சடகோபன் திருமலைராஜன் |