அமெரிக்க அரசியல், சமூக வாழ்க்கையில் கலாச்சார பத்திரிக்கைகள்
அமெரிக்கப் பத்திரிக்கைத்துறையில், கலாச்சார ஊடகங்களின் (Ethnic Media) பங்கு பளீரென்று தெரியும் காலமிது. தனது கலாச்சாரம், தாய்நாடு மற்றும் அதன் சிறப்பு எப்படி அமெரிக்காவின்
வளர்ச்சியில் பங்கேற்கிறது என்பதையெல்லாம் சமுதாயநோக்கோடு எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளும் பத்திரிக்கையாளர்களும், பத்திரிக்கைகளும் தான் இதில் பெரும்பங்கு வகிப்பவர்கள்!

அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களின் கலாச்சார பத்திரிக்கை அமைப்புகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவரும் அமைப்புதான் New America Media (NAM- www.newamericamedia.org).இந்த அமைப்பிற்கு முன்பு New California Media என்ற அமைப்பு இந்த முயற்சிக்கு வித்திட்டது.

பத்திரிக்கையாளர்களையும், பத்திரிக்கைகளையும் கௌரவிக்கும் பொருட்டு NAM அமைப்பு ஒவ்வொரு வருடமும் சிறந்த கட்டுரைகளையும் அதனை எழுதிய பத்திரிக்கையாளர்களையும் தேர்ந்தெடுத்து கௌரவிக்க முடிவு செய்தது. தென்றல் பத்திரிகையும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக இந்த பரிசளிப்பு விழா, Washington D.C யில் கடந்த நவம்பர் 15ஆம் தேதி, Mayflower Hotel-லில் நடைபெற்றது. விழாவிற்கு தலைமை தாங்கிய Sen. Hillary Rodham Clinton பேசுகையில், இந்தக் கலாச்சார ஊடகங்களின் பங்கும் பாதிப்பும் அமெரிக்காவின் அரசியலில் எப்படி பளீரென்று தெரிகிறது என்பதைச் சுட்டிக் காட்டினார்.

கலாச்சார ஊடகங்களில் எப்படி முதன்மை (mainstream) பத்திரிக்கைகளின் எண்ணங்களையும் மற்றும் முதன்மைப் பத்திரிக்கையில் எப்படி கலாச்சார ஊடகங்களின் அம்சங்களையும் புகுத்துவது என்பதைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும் என்று NAM-இன் மேலதிகாரி Sandy Close கூறினார்.

பரிசு பெற்றவர்கள் மேடையில் அணிவகுத்து நின்றபோது, அவர்களின் இளமைத் துடிப்பையும், அவர்கள் எழுத்திலும், கண்களிலும் பரந்து விரிந்த அந்தச் சமுதாயப்பற்றையும் பார்த்து வியந்து பாராட்டினார் Washington Post-ன் Len Downie.

பிறந்தநாட்டின் மொழி, மதம், பண்பாடுகளைக் காக்க, எழுத்தாணி மூலம் சமுதாயத்தின் சுவடுகளைப் புதுப்பிக்கப் புறப்பட்டிருக்கும், புதுப்பித்துக் கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பத்திரிக்கைகளைக் உலகுக்கு எடுத்துக் காட்டிக் கௌரவிக்கும் New America Media-வின் முயற்சி பாராட்டப் படவேண்டிய ஒன்று.

கோபால் குமரப்பன்

© TamilOnline.com