விநாயகப் பெருமானின் பெருமையைப் பேசும் 'கஜமுகா' நாட்டிய நாடகம் கிளேரன்ஸ்வில் உயர்நிலைப்பள்ளி அரங்கம், லிவோனியா, மிச்சிகனில் அக்டோபர் 16, 2004 அன்று நடைபெற்றது. கிரேட் லேக்ஸ் ஆராதனைக் குழுவும் மிச்சிகன் தமிழ்ச்சங்கமும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.
மோஹினி ஆட்டம், குச்சிப்புடி மற்றும் பரதநாட்டியத்தின் பாணிகளில் அமைக்கப்பட்டிருந்த நடனங்களை எல். நரேந்திரகுமார், எஸ். சிவகுமார், ஆதித் நாராயண், அஸ்வினி விஸ்வநாதன், ப்ரீதி ராமச்சந்திரன் மற்றும் சைலஜா சிவகுமார் ஆகியோருடன் ஜெயந்தி ராமன் முக்கியப் பாத்திரமேற்று வழங்கினார். டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா மற்றும் லால்குடி ஜெயராமனின் படைப்புக்கள் தவிர பாகவதலு சீதாராம சர்மா, கணேஷ் (கணேஷ்-குமரேஷ் புகழ்), ராஜேஷ் வைத்யா, ஆகியோரின் இசைப்பாடல்களையும் இதிலே பயன்படுத்தினர். தவிர, இந்நிகழ்ச்சிக்காகவே சமஸ்கிருதத்தில் டாக்டர் பப்பு வேணுகோபால ராவ் மற்றும் தமிழில் பேரா. வ.வே.சு. ஆகியோர் இயற்றியிருந்த பாடல்களும் பயன்படுத்தப்பட்டன.
ஓரேகானிலுள்ள ரசிகாவின் இயக்குநரான டாக்டர் ஜெயந்திராமன் 'கஜமுகா'வின் பொருட்டு விநாயக புராணத்தை ஆய்வுசெய்து அதை செவ்வியல் மேடைவடிவமாக்கி, பல நடனவகைகளின் அழகிய கதம்பமாகப் பின்னி வழங்கினார். மருத்துவர் மற்றும் கணினி வல்லுநரான ஜெயந்தி நடனத்தைத் தன் உயிர்மூச்சாக நினப்பவர். நந்தியாகவும் சுண்டெலியாகவும் (சிவன், பிள்ளையார் ஆகியோரின் வாகனங்கள்) தோன்றிய நரேந்திர குமாரின் லாகவமான சித்தரிப்புகளைக் குறிப்பிடவேண்டியது இங்கே அவசியம்.
அரவிந்த் கே. ரமேஷ் |