குழந்தைகள் நலநிதிக்கு ஹரிப்ரசாத் சவுராசியா கச்சேரி
சிறுவர் நிவாரணமும் நீங்களும் (Child Relief and You -CRY) என்று அறியப்படும் ஏதிலிச் சிறாருக்கான அமைப்பின் அமெரிக்கக் கிளை, நிதி திரட்டும்பொருட்டுப் பிரபல ஹிந்துஸ்தானி புல்லாங்குழல் நிபுணரான ஹரிப்ரசாத் சவுராசியாவின் கச்சேரித் தொடரை அமெரிக்காவின் பலபகுதிகளிலும் அக்டோபர் 2 முதல் 30 தேதி வரை நடத்தியது. இவருடன் பண்டித் பவானி சங்கர் கட்டக் மற்றும் மழலைமேதை ரிம்பா சிவா ஆகியோர் தபேலாவும், தேவப்ரிய சாட்டர்ஜி ரணதிவே புல்லாங்குழலும் வாசித்தனர்.

இந்த இசைத் தொடர் மூலம் நிதி திரட்டுவது மட்டுமல்லாமல் குழந்தைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த விழைகிறது இந்நிறுவனம்.

CRY America ஒரு 501(c)(3) பதிவுபெற்ற லாபநோக்கற்ற, வரிவிலக்குப்பெற்ற நிறுவனம். இந்தியாவில் இருக்கும் சுமார் 111 மில்லியன் ஆதரவற்று வாடும் சிறாரின் வாழ்வில் நம்பிக்கை விளக்கேற்றப் பாடுபடும் முயற்சிக்கு உங்கள் நன்கொடை உதவிசெய்யும். அமெரிக்காவின் 17 நகரங்களில் இருக்கும் சுமார் 400 தன்னார்வப் பணியாளர்களில் குடும்பப் பெண்கள், நிர்வாகிகள், மாணவர்கள், கணினிப் பொறியாளர் ஆகியோரும் அடக்கம். 'மாற்றம் என்பது சாத்தியம்; ஏனெனில், அந்த மாற்றத்தை நான் தருவேன்' என்ற உறுதியோடு இவர்கள் பாடுபடுகிறார்கள். அமெரிக்காவில் தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் சுமார் 10 திட்டப்பணிகளை இந்தியாவில் நடத்த உதவிவருகிறது.

அதிக விவரங்களுக்கு: www.america.cry.org
மின்னஞ்சலில் தொடர்புகொள்ள: Saravanan Arunachalam, cryamerica.rdu@crymail.org

© TamilOnline.com