செப்டம்பர் 25, 2004 அன்று மஹீதா பரத்வாஜின் பரதநாட்டிய அரங்கேற்றம் மிசௌரியிலுள்ள கிளேட்டன் உயர்நிலைப் பள்ளி அரங்கில் நிகழ்ந்தேறியது. பத்மஸ்ரீ அடையார் கே. லக்ஷ்மணன் (பரத சூடாமணி நுண்கலை அகாடமி, சென்னை) மற்றும் சுதா ஸ்ரீனிவாசன் (நிருத்யாலயா, இல்லினாய்) ஆகியோரிடம் பரதம் பயின்ற மஹீதாவுக்கு வயது ஒன்பதுதான் என்றாலும் அவரது நடனத்தில் தேர்ச்சி இருந்தது.
கணேசர் துதிக்குப்பின் கம்பீரநாட்டையில் அமைந்த மல்லாரியுடன் துவங்கிய நிகழ்ச்சி, நாட்டை ராகப் பாடலுக்கு அலாரிப்பு, 'ஆயர் சேரியர்...' என்ற பாடலுக்கு சப்தம் என விறுவிறுப்பாக மேலே தொடர்ந்தது. அடுத்து வந்த 'மனவி சேகோநராதா' (சங்கராபரணம்) என்ற தஞ்சாவூர் பொன்னையா பிள்ளையின் வர்ணம் வெகு சிறப்பு.
இடைவேளைக்குப் பின் வந்த அன்னமாச்சார்யாவின் கமாஸ் ராக 'சிருங்கார மூரிதிவி' மற்றும் முத்துசுவாமி தீக்ஷ¢தரின் 'சிம்மாசனஸ்திதே' ஆகியவை மிகுந்த நயத்துடன் அபிநயிக்கப் பட்டன. இறுதியாக வந்த மதுரை என். கிருஷ்ணனின் பிருந்தாவன சாரங்கா ராகத் தில்லானாவுக்கு மஹீதாவின் துல்லியமான நடனம் அவரது திறனை வெளிக்காட்டுவதாக அமைந்தது.
அடையார் லக்ஷ்மண் மற்றும் சுதாஸ்ரீனிவாசன் நட்டுவாங்கம் செய்து குரலிசை வழங்க, மீனாக்ஷ¢ கோபாலன் (வீணை), ரவிச்சந்திர குலூர் (குழல்), ஜனார்த்தன ராவ் (மிருதங்கம்) ஆகியோர் சிறப்பாகப் பக்கம் வாசித்தனர்.
"இந்தச் சிறுவயதிலேயே மஹீதா நுணுக்கங்களை விரைந்து பிடித்துக் கொண்டுவிடுகிறாள். எனக்கு இருப்பவர்களிலேயே வயதில் மிகச் சிறிய சிஷ்யை அவள்தான்" என்கிறார் குரு அடையார் லக்ஷ்மண். "அவள் தக்க முதிர்ச்சி அடையும் போது கவனிக்கத் தக்க கலைஞராக வருவாள்" என்று அவர் சொல்வதில் நமக்கும் ஒப்புமை உள்ளது.
S. சுப்ரமணியன், ராலே, வட கரோலைனா. |