நல்ல தமிழில் பயனுள்ள கதைகள், கட்டுரைகள், செய்திகள், பாப்பாவுக்கும் தமிழைக் கற்கச் சில பகுதிகள் என்று தென்றல் இதழுக்கு இதழ் மனதை மேலும் குளிர வைக்கிறது. நேர்காணலில் வரும் பிரபலங்கள் மூலம் இளைய தலைமுறையினருக்கு பாரதநாட்டை பாருக்குள்ளே நல்ல நாடாக்க நாளும் நடந்து வரும் சாதனைகள் அறிமுகமாகின்றன.
சென்ற இரு இதழ்களில் விஜய்அமிர்தராஜின் அருமையான நேர்காணல் அவரை ஒரு சிறந்த விளையாட்டு வீரராக மட்டுமல்லாமல், சிறந்த மகனாக, கணவராக, தந்தையாக, தொழில் விற்பன்னராக, மனிதநேயமிக்க மாமனிதனாக, நாட்டுப்பற்றுடைய நல்லவராக அறிமுகப்படுத்தி உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் அவரது பாட்டியின் சகோதரி செல்வி துரைசாமி மீனாட்சி கல்லூரியில் (மதுரை) முதல்வராகப் பணியாற்றியபோது அவருடன் பேராசிரியையாகப் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அமிர்தராஜ் சகோதரர்களின் திறமைகளையும், சிறந்த பண்புகளையும் அவற்றை உருவாக்கப் பெற்றோர் காட்டும் ஆர்வத்தையும், உழைப்பையும் அவர் பெரிதும் பாராட்டியது இன்றும் என் செவிகளில் ஒலிக்கிறது.
டாக்டர் கிருஷ்ணவேணி அருணாசலம் ஹில்ஸ்பரோ, ஓரெகன் ****** தென்றல் வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்.
கௌரி என். சுவாமி, சுசிலா சுப்ரமணியன் ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா ****** ஒரு அன்பான வேண்டுகோள். தென்றல் இதேபோல் மனதை இதமாக வருடும் தென்றலாகவே இருக்கட்டும். போட்டிகளிலும், அதிகமான புதுமைப் பித்திலும் சுழன்று புயலாகாமல் இருக்கவேண்டும்.
இந்திரா ராமதுரை மவுன்டன் வியூ, கலிஃபோர்னியா ****** தென்றலைக் கண்டேன். தமிழ்நாட்டில் வாழ்கின்றவர்கள், தமிழால் வாழ்கின்றவர்கள் செய்யாத, செய்ய மறந்த தொண்டை அமெரிக்கா வாழ் தமிழர்கள் செய்வது கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
புலவர் கி. கிருஷ்ணசாமி ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா ****** சுவையான மாயாபஜார் பகுதி, சமயம், முன்னோடி, கவிதை, அரசியல், அருமையான கட்டுரைகள், அறிவுபூர்வமான எழுத்துக்களைத் தென்றல் தாங்கி வருகின்றது. நேர்காணலில் இதுவரை வெளிவராத தகவல்களைப் படிக்க நன்றாக இருக்கிறது. பழம்பெரும் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி, அவர்கள் கதையையும் வெளியிடுவது நல்ல பகுதி.
கே. மங்களம், நியூனன், ஜார்ஜியா.
******
கல்கியைப் பற்றிய சரிதம் வாசித்தேன். 1938ஆம் வருடம் நான் மாணவனாக இருந்தபொழுது ஓவியர் மாலியுடன் வந்து யாழ் இந்துக்கல்லூரியில் ஒரு சுவையான சொற்பொழிவாற்றினார். தலைமை வகித்தது கல்லூரி ஆசிரியர் நாராயண சாஸ்திரிகள்.
இராசா சேனாதிராசா, லாங் பீச், கலிஃபோர்னியா
******
பக்கத்துக்குப் பக்கம் வரிக்கு வரி தென்றல் இதழில் சுவையும் விறுவிறுப்பும் கூடிக்கொண்டே போகிறது. ஒரு வரி விடாமல் படித்து மகிழ்கிறேன்; பயனடைகிறேன் என்பது உண்மை. தென்றல் வாசகர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
டாக்டர் டி. சுப்ரமண்யன், சன்னிவேல், கலிஃபோர்னியா ****** அமெரிக்காவில் தென்றல் மாத இதழைக் கடையில் பார்தது அளவளா மகிழ்ச்சி. ஒவ்வொரு மாதமும் ஆவலுடன் அதை எதிர்நோக்குகிறேன். அதிலும் கோவையில் நான் படித்த அவிநாசிலிங்கம் மனையியல் கல்லூரி நிறுவனர் அவர்களின் புகைப்படத்தை அட்டையில் கண்டு இரட்டிப்பு சந்தோஷம். சிறுகதைகள், கவிதைகள், மேலும் முக்கியமாகத் தங்கம் ராமசாமியின் சமையல் குறிப்புகள் அற்புதம். நான் தொலைபேசியில் உரையாடும்பொழுது இந்தியாவிலிருக்கும் என் உறவினர், சிநேகிதர்களுடனும் இந்தச் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.
வசந்தா ஜானகிராமன், சன்னிவேல், கலிபோர்னியா ****** எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் குற்றாலம், பாபநாசத்தில் தென்றல் வீசும். அதே தென்றல் சன்னிவேலில் இருந்து அமெரிக்கா மட்டுமல்ல, உலகம் முழுவதும் தமிழ் மணத்துடன் வீசுவது கண்டு மிக்க மகிழ்ச்சி.
விஜய் அமிர்தராஜ் நேர்காணல் தெளிவாக இருந்தது. இந்தியாவில் 'அரசே' ஒரு விளையாட்டாகிவிட்ட பின்பு, விஜய் அமிர்தராஜ் சொல்வதுபோல், விளையாட்டுத்துறையில் அரசு குறுக்கிடாமல் இருப்பது இயலாத காரியம்.
'சிலப்பதிகாரம்' நாட்டிய நாடகம் பற்றிய தென்றலின் முன்னோட்டத்தைப் படித்த பின்புதான் மிச்சிகன் நகரில் அந்த நாடகத்தைப் பார்த்தேன். எழுதிய அவ்வளவும் உண்மை. இளங்கோ அடிகள் காலத்திற்கே கொண்டு போய்விட்டார்கள். 'பூக்கள், சுழல்கள், மகாத்தொடர்கள்' எழுதிய வாஞ்சிநாதன் அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கிறார்.
'சினிமா சினிமா' என்ற பகுதியில் இயக்குனர் ஜெனநாதன் பற்றி விபரமாக எழுதியிருந்தது படித்தேன். கட்டுரையின் இறுதியில் 'இயற்கை' ஜெனநாதன் என்று அடைமொழிகளோடு முடித்திருப்பது பாராட்டப்பட வேண்டியதாகும். உங்களுடைய புத்தக அறிமுகம் என்ற பகுதியில் எஸ். ராமகிருஷ்ணனின் 'நெடுங்குருதி' பற்றி ஒரு முழுப் பக்கம் எழுதியிருக்கிறீர்கள். இது மிகவும் பாராட்டப்பட வேண்டியது.
ராமானுஜம் கேன்டன், மிச்சிகன் ******
கணிதவியல் உலகில் முதன்முதலாக வரம்பிலிகளிலேயே பலவகைகள் உள்ளன என்று செர்மானிய அறிஞர் கியார்க் கெண்டர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிறுவினார் என வாஞ்சிநாதன் தன் கட்டுரையில் கூறுகிறார். இது ஐரோப்பியச் சிந்தனை மரபின் ஒரு வடிவம். கணிதவியல் வடிவம் எனவும் சொல்லலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் விவேகானந்தர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யும் போது தனிப்பட்ட பொருளை ஆராயப் புகும்போது, அது எல்லையற்றதாக ஆகிறது என்றார் (ஞான தீபம் 3, 1964). மெய்யியல் உலகில் இது இந்தியச் சிந்தனையை புதிய எல்லைகளுக்கு வழி நடத்திச் சென்றது.
அமெரிக்காவுக்கு வந்து ஒரு மாதமாகக் கவனித்து என்னுள் ஏற்படுத்திக் கொண்ட உணர்வைத் தலையங்கம் முறைப்படுத்திய வடிவில் கூறி இருப்பது கண்டு உடன் இருப்போரிடம் பகிர்ந்து கொண்டேன்.
முப்பால் மணி, சான்டா ஃபே, கலிஃபோர்னியா |