சலுகைகளும் அரசியலும்
அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தமிழ்த்திரைப்பட உலகம் தங்கள் கோரிக்கைகளுக்காகவும், தங்கள் பிரச்சனைகளுக்காகவும் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கப் பலமுறை முயற்சிகள் செய்தும் பலனளிக்காமல் இருந்தது. செப்டம்பரில் ஒட்டுமொத்தத் திரையுலகத்தினரும் பேரணியாகச் சென்று முதல்வரைக் கோட்டையில் சந்தித்துத் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதையதையடுத்துத் திரையுலகிற்குப் பல சலுகைகளை அளித்து அவர்களைத் திக்குமுக்காடச் செய்தார் ஜெயலலிதா.

திருட்டு விழிம வட்டுக்கு (VCD) எதிரான அதிரடி நடவடிக்கை, புதிய படங்களுக்கான கேளிக்கை வரி குறைப்பு, சமூக சிந்தனையை உருவாக்கும் குறைந்த செலவிலான படங்களுக்குக் கேளிக்கை வரியிலிருந்து முழுவிலக்கு, பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கான கட்டணங்கள் அதிரடிக் குறைப்பு என்று ஏகப்பட்ட சலுகைகள். இதுமட்டுமல்லாமல் கடந்த மூன்றாண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறந்த நடிகர், நடிகை, கலைஞர்களுக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் திரைப்பட உலகைத் தன் பக்கம் நிறுத்திக் கொள்வதற்காகவே அரசு ஒரே அறிவிப்பில் இத்துணைச் சலுகைகளை வழங்கியுள்ளது என்று பேசுவோரும் உண்டு. ஆனால், நன்றிமிக்க தமிழ்த்திரைப்பட உலகம் முதல்வரைப் பாராட்டி விழா எடுக்கக் காத்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நடிகர் சங்கப் பொதுச்செயலர் பதவியிலிருந்து சரத்குமார் விலகியது பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. வாரஇதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சரத்குமார் திரையுலகத்தினர் ஜெயலலிதாவைப் பாராட்டிப் பேசுவதை விமர்சித்திருக்கிறார். எங்கும் அரசியல்தான்!

கேடிஸ்ரீ

© TamilOnline.com