ILP-யின் சுனாமி நிவாரண நிதி திரட்டலில் வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம்
சுனாமி வந்து போனது என்னவோ 2004ல் ஆனால் அதன் சுவடுகள் அழியாமல் இன்னும் எத்தனையோ மக்களை வருத்திக் கொண்டிருக் கிறது. உலகிலுள்ள பல தொண்டு நிறுவனங்களும் அதற்கான நிதி திரட்டும் வேளையில் ஈடுபட்டுள்ளனர். அப்படிப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான, அமெரிக்காவில் இருந்து 1990ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் ILP (India Literacy Project) நிறுவனம், ஆக்கப்பூர்வமான முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முக்கிய மாக குழந்தைகளுக்கு தொண்டு புரிந்து வருகிறது. ILP தொண்டு நிறுவனம், தனது நெடுங்கால நிவாரணத் திட்டத்திற்கான நிதி திரட்டும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளது.

தமிழ்நாட்டில், சர்வதேச மற்றும் தேசிய நிறுவனங்களும், அரசும், தங்கள் நிவாரணப் பணியை நாகப்பட்டினம், கடலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருமித்த நோக்கோடு மேற்கோள்ள, ILP நிறுவனம் நெடுங்கால நிவாரணப் பணிக்கு, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சில கிராமப் பகுதிகளைத் தேர்ந்தெடுத்தது. அதிலும் முக்கியமாக, விளாத்திகுளம் தொகுதியில் உள்ள பெரியசாமிபுரம் பஞ்சாயத்தின் கீழ் வரும் பெரியசாமிபுரம், குஞ்சய்யாபுரம் மற்றும் முத்தையாபுரம் கிராமங்களில் படிப்பறிவு சதவிகிதம் 35% க்கும் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இக் கிராமங்களில், கல்வியறிவின் மூலம் நீடித்த வேலைவாய்ப்பையும், சமுதாய - பொருளாதார முன்னேற்றத்தையும் கொண்டுவர முயற்சி செய்யும் 'விடியல் டிரஸ்ட்' அமைப்பை ILP நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது.

அதே சமயத்தில், சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் 1980ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் தமிழ் மன்றமும் (www.bayareatamilmanram.org), சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க நிதி திரட்டும் பணிகளை மேற்கொண்டது. இளைய தலைமுறைக்கு கல்வியறிவுக்கான அஸ்திவாரமும், சமூகச் சீர்கேடுள்ள பகுதிகளில் குறிப்பிடத்தக்க சமூக மாற்றங்கள் கொண்டு வருவதும் தன் இலக்காகக் கொண்ட தமிழ் மன்றம், இதுவரை திரட்டிய நிதியை சில தொண்டு நிறுவனங்களின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகிறது. அதன்படி திரட்டிய நிதியில் ஒருபகுதியை, ILP நிறுவனம் தேர்ந்தெடுத்த 'விடியல் டிரஸ்ட்' அமைப்பின் முதல் வருட நிதிக்கு வழங்க முன்வந்துள்ளது. இதன் மூலம், சுனாமியால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தொழில் நசிந்து, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப இயலாத நிலை ஏற்பட்டதின் தாக்கத்தைக் குறைக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

படிப்பறிவு சதவிகிதத்தை அதிகரிக்கவும், சிறார்களின் பள்ளிப்படிப்பு பாதியிலேயே தடை படுவதை தடுத்து, பள்ளிகளில் மாணவர்களை தக்க வைத்துக் கொள்ளவும், இலவச பயிற்சி நிலையங்கள் நடத்தும் முயற்சிக்கு இத்திட்டம் ஆதரவளிக்கின்றது. அது மட்டுமின்றி, அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த, உதவி ஆசிரியர்களை அமர்த்தவும், கல்வியறிவின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், பெற்றோர் மற்றும் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு விழிப்புணர்வளிக்க, சமூகத்தை ஒன்று திரட்டும் திட்டங்கள் நடைமுறை படுத்தவும் இத்திட்டம் ஆதரவளிக்கின்றது. இளைஞர்கள் தங்கள் வேலைவாய்ப்பைப் பெருக்கிக்கொள்ளும் பொருட்டு, படகு செப்பனிடும் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இத்திட்டங்களைத் தொடர, ILP நிறுவனம் நன்கொடையாளர்களின் ஆதரவை வேண்டுகிறது. கல்வி கற்க வாய்ப்பில்லாத குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு, அவ்வறிவைப் பெற வழி வகுக்கும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் கூட்டோடு ILP நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 16 ஆண்டுகளில் நூற்றுக் கணக்கான திட்டங்களின் மூலம் பல்லாயிரக் கணக்கானோர் பயனடைந்துள்ளனர். மேலும் விவரங்கள் www.ilpnet.org என்னும் வலைத் தளத்தில் காணலாம்.

வைத்தியநாதன், கோபால் குமரப்பன்

© TamilOnline.com