அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்களின் போராட்டம்
மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு அ.தி.மு.க. அரசு தேர்தலுக்கு முன் உருவாக்கிய சட்டங்களையும், பறித்த சலுகைகளையும் விலக்கிக் கொண்டது. இதையடுத்து ஊதிய உயர்வு, 20 சதவீத போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் மின்வாரியத் தொழிற்சங்கங்கள் அக்டோபர் மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கத் தவறினால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும் தமிழக அரசுக்கு முன்னறிவிப்புச் செய்தன.

ஊழியர்களை வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தூண்டக்கூடாது. மீறினால், டெஸ்மா சட்டம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊழியர் சங்கங்களுக்கு அரசு எச்சரிக்கை அனுப்பி வைத்ததோடு, வேலைநிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டு சிறை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து தண்டனையாக விதிக்கப்படும் என்று அறிவித்ததையடுத்து இப்பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. இந்தச் செயலை அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் குறைகூறியுள்ளன.

இதற்கிடையில் தமிழக அரசு, அரசு போக்குவரத்துக் கழகங்கள், மின்வாரியம், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகியவற்றின் பணியாளர்களுக்கு 2003-04ம் ஆண்டுக்கு 8.33 சதவீத போனஸ¤டன் 1.67 சதவீதக் கருணைத் தொகையும் சேர்த்து மொத்தம் 10 சதவீதத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது.

நிதிநிலைமை இன்னும் சீர் அடையவில்லை என்றும், பணியாளர்களும், தொழிலாளர்களும் தொடர்ந்து பணியாற்றி, தமது நிறுவனங்களின் உற்பத்தித் திறனையும், செயல் திறனையும் மேம்படுத்த அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் 10 சதவீத போனஸ் வழங்கப்பட்டுள்ளது என்று அரசு கூறினாலும், போனஸ் அறிவிப்பு ஏமாற்றமளிப்பதாகப் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

இதுபற்றி முதல்வர் ஜெயலலிதா ''ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவிருக்கின்றன. இது ஓர் இடைக்கால ஏற்பாடுதான். ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையின் முடிவில் ஏற்படும் உடன்படிக்கையில் இத்தொகை சரிசெய்யப்படும்'' என்றார். ஒரு சரியான ஊதிய ஒப்பந்தம் அரசுக்கும், ஊழியர்களுக்கும் இடையிலான கசப்பு உணர்வுகள் மறைவதற்கு வழிவகுக்கும்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com