விலைகூடின பொருள்
சிலிக்கான் பள்ளத்தாக்கின் சான்டா கிளாரா நகர அலுவலகத்தில் மதிய உணவு நேரம். ஊழியர்கள் உணவருந்தும் அறையில் அதிகக் கூட்டம் இல்லை.

குமார் கையில் உணவு டப்பாவுடன் உள்ளே வந்ததும் ரகு அவனை வரவேற்றான். "வா, வா குமார். என்னிக்கு இந்தியாலேருந்து வந்தே?"

"ரெண்டு நாள் முன்னால்தான். இன்னிக்குதான் ஆபீசுக்கு வரமுடிஞ்சிது"

"ஊர்லருந்து கலைஞரோட தொல்காப்பியம் வாங்கிட்டு வந்தியா?"

"வாங்கினேன். கடைசி நிமிசத்துல என் மாமியார் எனக்குத் தெரியாம அதை வீட்லயே வெச்சிட்டு, மொளகா, புளி, பருப்பு, பட்சணம்னு ஏதோதோ வெச்சு எடத்தை ரொப்பிட்டாங்க"

"அவங்க நகைன்னா பத்திரமா கொண்டு வந்திருப்பாங்க"

"அதயேன் கேக்கிற. பானு பத்து லட்ச ரூபாய்க்கு ஒரு வைர நெக்லஸ் வாங்கினா. பல்லாவரத்துல பதினோரு லட்சத்துக்கு பிளாட் வெலைக்கு இருக்கு. வாங்கிப்போடு. பிற்காலத்துல வந்து தங்க உனக்கு வசதியா இருக்கும்னு எங்க அப்பா சொன்னாரு. பானு கேக்கல. அவங்கம்மா டிசைன் போட்டுக் கொடுத்தாங்கனு தங்க மாளிகையில போயி வைர நெக்லசு வாங்கிட்டா."

"வைர நெக்லசா! பத்திரமா வெச்சுக்க. வீட்ல வெச்சுக்காதே."

"வந்த உடனே பேங்கில லாக்கர்ல வெச்சாச்சு."

குமார் தன் டப்பாவைத் திறந்து பார்த்தான். "அட லெமன் ரைஸ். பகதூர் இருக்கானா? அவனுக்கு லெமன் ரைஸ்னா ரொம்ப இஷ்டம்" என்றபடி சுற்றுமுற்றும் பார்த்தான்.

சற்றுத் தள்ளி பேப்பர் படித்துக் கொண்டிருந்த கோபால், குமார் அருகே வந்து அமர்ந்தான்.

"குமார். பகதூர் ஆபீசுக்கு வரல இன்னிக்கு. சான் பிரான்சிஸ்கோ போயிருக்கான்" என்றான் ரகசியமான குரலில்.

"எதற்கு? க்ளையன்ட பார்க்கவா?" என்றான் குமார்.

"இல்லப்பா. அவனுக்கு ஒரு பிரச்னை. அவன் பிள்ளய போலீசு அரெஸ்டு பண்ணிட்டாங்க. அவனை பெயில்ல எடுக்கப் போயிருக்கான்"

"அரெஸ்டா? ஹைஸ்கூல்ல படிக்கற பையன் என்ன தப்பு பண்ணின்னான்?"

"ஒரு வீட்ல போய் டென்னிஸ் மட்டயத் திருடிருக்கான். அப்ப எதிர்பாராம போலீசு புடிச்சுட்டாங்க."

"டென்னிஸ் மட்டையையா? அப்பன் கோடீசுவரன். புள்ளை இருவது டாலர் மட்டைக்கு திருடினானா? பேத்தலா இல்ல?"

"பையனுக்கு சேர்மானம் சரியில்ல. கேங்குல சேர்ந்திருக்கு. ஒரு த்ரில்லுக்கு திருடப் போனானாம்."

"இங்க இந்தியன் கேங்கு கூட இருக்காமே"

"ஆமா. ரெண்டாவது தலைமுறை இந்தியர்கள் இதுல மாட்டிக்கிறாங்க. போதைப்பொருள், அடிதடி, கலாட்டா, திருட்டுன்னு நடக்குது."

"அதிகமா இந்தியர்கள் இருக்குற இடத்தில திருட்டு கூட நடக்குதாமே"

"ஆமா. இந்தியர்கள்னா கையில தங்கம், நகை வெச்சிருப்பாங்கன்னு தெரிஞ்சிருக்கு"

"எப்படி இந்தியன், இந்தியன் வீடுன்னு தெரியும்?"

சாப்பிட்டுக் கொண்டிருந்த வேணு திடீரென்று இதில் கலந்துகொண்டான் "கிச்சன்ல ஓசில எடுத்த டாக்கோ பெல் சாஸ் நூறு பாக்கெட் இருக்கும். இந்தியாக்கு போன் போட்டா முதல்ல 'காதில விழுதா'ன்னு கேப்பாங்க. எந்தப் பார்ட்டிக்கும் லேட்டா போவாங்க. புதிசா வாங்கின சோபா, லைட்டு, செருப்பு, மிதியடி எல்லாம் பிளாஸ்டிக் உறையிலயே இருக்கும், ஒரு சாமானுக்காவது பில்லைத் தூக்கி எறிய மாட்டாங்க, எப்ப வாங்கினலும் நூறு பவுண்டு அரிசிப்பைதான் வாங்கறது, அரிசியைக் கொட்டினப்பறம், பையை மடிச்சு கராஜுல வைப்பாங்க, துணிமணி சின்னதா போனா மூட்டை கட்டி இந்தியாக்கு எடுத்திட்டு போயி பாத்திரக்காரன்கிட்ட போட்டு..."

"சீ, வேணு, ரொம்ப கலாட்டா பண்ணாத. இதெல்லாம் நெட்ல படிச்சாச்சு."

"இன்னும் சில அடையாளம் இருக்கு. வாசல்ல செருப்பை விட்டுருப்பாங்க. வாசப்படியில தோரணம் கட்டியிருக்கும். கதவுல பிள்ளையார், லஷ்மி, சரஸ்வதினு படம் இருக்கும். 1997ம் வருச காலண்டர் 2004ல இருக்கும். சாமி படம் போட்டிருக்கு அதான் தூக்கிப் போடலம்பாங்க. போலீசுலயே போன மாசம் டிவியில சொன்னாங்க. 'நீங்க இந்தியன்னு காட்டற புற அடையாளம் ஏதும் வீட்டுல காட்டிக்காதீங்க'ன்னாங்க"

"பேங்குக்கு போனா பின்னால யாராவது தொடர்ந்து வரானானு பார்த்துக்கணுமாம். பின்னலயே வந்து பையப் பிடுங்கிட்டு போயிடுவாங்களாம்"

"என் பொண்டாட்டி பானுகிட்ட சொல்லணும் இத"

"ஏன்"

"அவ நகையெல்லாம் பேங்கில சே·ப் டிபாசிட் பாக்ஸ்ல இருக்கு. எப்பவாவது பார்ட்டிக்கு போகணும்னா மட்டும் வேண்டியதை எடுத்துகிட்டு மறுபடியும் கொண்டு வெச்சிடுவா. எல்லா வெலகூடின சாமானையும் அங்க வெக்கணும்னு அவளுக்கு பயிற்சி கொடுத்திருக்கேன்"

"நல்லதுதான்"

"இந்த தடவை இந்தியா போயிருந்த போது ஊருல பெரிய கலாட்டாவாயிடுத்து. நகையெல்லாம் எங்கடின்னு அவம்மா கேட்டாளாம். இவ பேங்குல இருக்குன்னவுடனே அய்யோ பேங்குல வெக்கிற அளவுக்கு அப்படி என்ன கஷ்டம்னு அழ ஆரம்பிச்சிட்டாங்களாம். இவதான் விளக்கியிருக்கா, நீ நெனக்கிற மாதிரி பேங்குல அடகு வெக்கல, சே·ப்டி டிபாசிட் பாக்ஸ்ல வெச்சிருக்கோம்னு"

மதிய உணவு வேளை முடிந்து அனைவரும் அலுவலகத்துள் போனார்கள்.

நான்கு மணி இருக்கும். குமார் கம்ப்யூட்டரில் முன்னால் ஏதோ கணக்கு போட்டுக் கொண்டிருந்தான். அறைக்குள் கோபால் வந்தான்.

"குமார் ரேடியோ கேட்டியா?"

"இல்லியே"

"கேம்பெல் ஏரியால தாம்சன் தெருல ஒரு இந்தியன் வீட்டுல திருட்டுன்னான். ஒரு பெண்ணுக்குக் காயம் பட்டிருக்குன்னான். அவ பேரு பேனுவோ ஏதோ சொன்னான். நீ அந்தத் தெருதானே? எனக்கு அது ஒரு வேளை உன் மனைவி பானுவோன்னு சந்தேகம்"

விருட்டென்று எழுந்தான் குமார். அய்யோ பானுவுக்கு என்னாச்சு. இவ ஏன் இப்ப வீட்டுக்கு போனாள்? தொலைபேசியைச் சுழற்றி பானுவின் அலுவலகத்தை அழைத்தான். பானு அங்கு இல்லை. அனுமதி வாங்கிக் கொண்டு ஒரு மணி முன்னால போய்விட்டாளாம். பேங்குக்கு போகணும்னு மேரிகிட்ட சொன்னாளாம்.

உடலெல்லாம் நடுங்கியது குமாருக்கு. அப்பொழுது சசி உள்ளே வந்தான். "குமார். உன் வீட்டுக்கு போலீசு வந்திருக்காம். உன்னைக் கூப்பிடறாங்க. போ"

கோபால் கூட வந்தான். "என் காருல போகலாம் வா, நீ ஓட்ட வேண்டாம். பதறாதே" என்று அழைத்துப் போனான்.

குமார் வீட்டு வாசலில் இரண்டு போலீஸ் கார்கள். அப்பொழுதுதான் ஒரு ஆம்புலன்ஸ் கிளம்பி மருத்துவ மனைக்குப் போய்க் கொண்டிருந்தது. காவல் அதிகாரி குமாரை வரவேற்றார்.

"குமார். ஒரு ராபரி. இந்தியன் கும்பல்னு தோணுது. எதிர் வீட்டு அம்மா உங்க மனைவி பானு வீட்டு கராஜ் உள்ள போறதை பார்த்தாங்களாம். பின்னலயே ஒரு ஆளு வந்திருக்கான். கையில மெடல் டிடெக்டர் மாதிரி ஏதோ வெச்சு தேடினானாம். பைய எடுத்திட்டு ஓடறதைப் பார்த்தாங்களாம்.. உங்க மனைவி பின்னாலேயே ஓடியிருக்காங்க. அவன் எப்படி அட்டாக் பண்ணான்னு தெரியல. காயம் பட்டிருக்கு. ஆஸ்பத்திரி போயிருக்காங்க. நீங்க போயி உங்க மனைவிய பார்த்திட்டு, களவுபோன நகை, போட்டோ விவரமெல்லாம் எடுத்திட்டு காவல் நிலையத்துல ஒரு கம்ப்ளெயிண்டு குடுங்க. நாங்க பார்த்துக்கறோம். இல்ல சார் இப்ப வீட்டுக்குள்ள போக வேணாம். கைரேகை எடுக்க ஆளுவருது. நாங்க இங்க காவல் இருக்கோம், நீங்க போங்க"

கோபால்தான் குமாரை மருத்துவ மனைக்கு அழைத்துப் போனான். அங்கே கார் நிறுத்தவே இடம் கிடைக்கவில்லை.. "சரி. குமார், நான் கார்லயே இங்க இருக்கேன். நீ போய் பானுவ பார்த்திட்டு வா" என்று அனுப்பினான்.

குமார் மருத்துவ மனைக்கு விரைந்தான். அவசர மருத்துவப்பிரிவு வாசலில் கையில் கட்டோடு அமர்ந்திருந்தாள். குமாரைக் கண்டவுடன் அவளுக்கு அழுகை வந்தது.

குமார் அவளை அணைத்துக் கொண்டான். "பானு அழாத. உனக்கு எங்க காயம்? நடக்க முடியுமா" எழுந்து நின்று முழங்கையில் கட்டுப்போட்டிருந்த இடத்தைக் காட்டினாள்.

"பானு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். இப்படி பேங்குக்குப் போறச்ச நான் இல்லாம தனியா போகலாமா?"

"உஷா பட்டேல் வீட்டுல இன்னிக்கு சாயங்காலம் பார்ட்டி" என்றாள் விசும்பலுடன். குமாருக்கு அசாத்தியக்கோபம் வந்தது.

"பெரீய்ய பார்ட்டி. நாலு பேரைக் கூப்பிட்ருப்பான். அதுவும் 'பாட் லக்'ம்பான். விருந்தாளிங்களே சமச்சு கையில் எடுத்திட்டு போகணும். அவன் சிம்பிளா சன்னா சப்பாத்தி போட்டுட்டு பார்ட்டி குடுத்ததா ஒப்பேத்திட்டு, என்னை எப்ப உங்க வீட்டுக்குக் கூப்பிடபோறேன்னு தெனம் அரிப்பான். இந்தப் பார்ட்டிக்குப் போயி ஒன் நெக்லசப் போட்டுக்கிட்டுக் காட்டி மினுக்கணுமாக்கும்? பத்து லட்சம் இப்ப அம்போனு போயிடுத்து. எங்கப்பா பிளாட் வாங்குனு அடிச்சிட்டார். உங்கம்மாதான் உன் மனசைக் கலைச்சு உனக்கு டிசைன் போட்டுக்குடுத்து...."

"எங்கம்மா...எங்கம்மா" என்று பானு கண்ணீருடன் விசும்பினாள்.

குமாருக்கு மாமியாரை நினைத்ததும் கோபம் தலைக்கேறியது.

"பானு எதுக்குப் போயி நெக்லச நீ எடுத்த? உஷாகிட்ட பீத்திக்கத்தானே"

"நான் நெக்லச எடுக்கலியே. உஷா முப்பது லட்ச ரூவாய்க்கு நெக்லசு வெச்சிருக்கா. அவ வீட்டுக்கு இதைப்போயி அவள் வீட்டுக்குப் போட்டுப்பேனா?"

"பின்ன பேங்குல போயி எதை எடுத்தே?"

"தேங்குழல் அச்சு எடுக்கப்போனேன்"

"என்னது? தேங்குழல் அச்சா, எதுக்கு?"

"அதான் சொன்னனே, உஷா பட்டேல் என்கிட்ட பார்ட்டிக்கு சீக்கிரமா வந்து தேங்குழல் பண்ணிக்காட்டுனு சொல்லியிருந்தா. லாக்கர்லேருந்து அதை மட்டும் எடுத்து பையில போட்டு, வீட்டுக்குப் போயி அதை கராஜுல வெச்சிட்டு உள்ள காப்பி குடிக்கப் போனேன். திருடன்னு எதுத்த வீட்டுக் கெழவி கத்தின உடனே வந்து பார்த்தா இவன் பையைத் தூக்கிட்டு ஓடறான். துரத்தினேன். புல்வெளி நீர்தெளிக்கும் குழாய் மேல தடுக்கி விழுந்து முழங்கையில வெட்டிடுச்சு. கெழவி ஆம்புலன்சைக் கூப்பிட அவங்க வந்து என்னைத் தூக்கிட்டுப் போயிட்டாங்க. சின்னக் காயம்தான் ஆஸ்பத்திரிக்கிப்போகத் தேவையில்லன்னு சொன்னேன். கேக்கல."

"அப்ப நம்ம நெக்லசு கெட்டுப் போகல"

"எந்த நகையும் போகலே. நான் எடுத்திட்டும் வரல. தேங்குழல் அச்சுதான்"

"தேங்குழல் அச்சா? அச்சுன்னா என்ன?"

"அதான் தேங்குழல் பிழியறதுக்கு. மாவை உள்ள போட்டு அமுக்கினா குழாய் குழாயா தேங்குழல் வரும். அதை எண்ணெயில பொரிச்சு.."

"அது என்ன விலை இருக்கும்"

"எங்கயும் கிடைக்காம எங்கம்மா கும்பகோணத்திலேருந்து இருவத்தி இரண்டு ரூவா குடுத்து வாங்கிட்டு வந்தாங்க"

"சீ இவ்வளவுதானா. நான் உனக்கு பத்து அச்சு வாங்கித் தரேன். அதயேன் போய் நீ லாக்கர்ல வெச்ச?"

"நீங்கதானெ சொன்னீங்க வெலகூடின பொருள்னா பேங்க்ல வைக்கணும்னு. அது எவ்வளவு அபூர்வம்னு உங்களுக்குச் சொன்னா புரியவே புரியாது"

எல்லே சுவாமிநாதன்,
லாஸ் ஏஞ்சலஸ்

© TamilOnline.com