பரதநாட்டியமும், பாலே நடனமும் ஒரே மேடையில் ஒன்றோடு ஒன்றாக இணைந்து பக்குவமாய் அரங்கேறியதென்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியம் தானே? இதோ அந்தப் புதுமையான Dance of Destiny: Mime, Myth and Modernismஔ என்ற நடன நிகழ்ச்சி நியூ ஜெர்சியில் உள்ள நியூ புரூன்ஸ்விக்கின் மாநில அரங்கத்தில் நடைபெற்றது. தாள ஸ்ருதியின் (www.talashruti.com) மாணவர்களும், பாலே மற்றும் நவீன நடனக்கலைஞர்களும் இணைந்து வழங்கிய இந்த நிகழ்ச்சி, ஒரு புது பரிமாணத்தையே நமக்கு வழங்கியது.
விழாவின் முத்தான முதல் பகுதியினை, தாள ஸ்ருதியின் குரு ரேணுகா ஸ்ரீனிவாசன் அவர்கள் நடனம் அமைத்து பளீரென துவக்கி வைத்தார். தாள ஸ்ருதியின் ஆரம்பநிலை மாணவர்களின் இறைவழிபாட்டோடு நிகழ்ச்சி துவங்கியது. அதைத் தொடர்ந்து, பள்ளியின் மூத்த (மேடையில் அரங்கேற்றம் செய்த) மாணவர்களின் 'ஜதி' நடன நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் 'ஆண்டாள் கவுதம்' மற்றும் 'ஹரி வரசனம்' நடனத்தின் மூலம் வியப்பிலே ஆழ்த்தினார் குரு ரேணுகா ஸ்ரீனிவாசன். முதல் பகுதியின் முத்தாய்ப்பான நிகழ்ச்சியாக, மூத்த மாணவர்கள் வழங்கிய வர்ணம் நடனம் அமைந்தது. 15 நிமிடங்கள் நடந்த இந்த நடன நிகழ்ச்சி, அரங்கத்தில் அனைவரையும் அப்படியே கட்டிப் போட்டது என்றால் மிகையாகாது.
நிகழ்ச்சியின் பிற்பகுதி முழுவதிலும், பரத நாட்டியமும், பாலே மற்றும் பல நவீன நடனங்களும் இணைந்து அரங்கேறியது. பிற்பகுதியின் முதல் நிகழ்ச்சியாக ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பதிவிலே வெளியான 'வந்தே மாதிரம்' தொகுப்பிலேயிருந்து ஒரு பாடலுக்கு ரேணுகா ஸ்ரீனிவாசனும், பாலே நடனக்கலைஞரான Christine Bragg-ம் இணைந்து நடனமாடினர். பின்பு, 2004-ல் ஏற்பட்ட சுனாமியின் கோரப் பிடியில் மாட்டி சிக்குண்ட இந்தியா, ஸ்ரீலங்கா மக்களை நினைவு கூறும் வகையில், பத்து நிமிட 'Water Ballad' நடன நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நடனத்தில், பாலே நடனக் கலைஞர்கள் நீரைப் பிரதிபலிக்கவும், தாள ஸ்ருதியின் பள்ளி மாணவர்கள் சூரியன், மேகம் மற்றும் மீனவர்களையும் சித்தரித்தது, எல்லோர் கண்களுக்கும் விருந்தாக அமைந்தது. மாலை நிகழ்ச்சிகளுக்கு மகுடமாக 'Morning Raga' படத்தின் 'தாயே யசோதா' பாடலுக்கான நடனம் அமைந்தது. பரதநாட்டியம், பாலே மற்றும் நவீன நடனங்கள் ஒன்றுக்குள் ஒன்றாய்ப் பிசிறில்லாமல் பிண்ணிப் பிணைந்து, ஒருமுகமாய், கண்களுக்கு விருந்தாய் அமைந்தது மட்டுமல்லாமல் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் 'நடனம்' எனும் நான்கெழுத்தில் நனையவைத்தது!
தாள ஸ்ருதி நாட்டியப்பள்ளி (www.talashruti.com) 1995ஆம் ஆண்டு பரதநாட்டியக் கலையைப் பயிற்றுவிக்கும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. இந்தப்பள்ளியின் கலை நிர்வாகி ரேணுகா ஸ்ரீனிவாசன் அவர்கள் ஒரு திறமையான, பரதநாட்டியத்தில் பல சிறப்புப் பயிற்சிகளையும்(சென்னையில்), பட்டங்களையும் பெற்றவர். பள்ளியின் தினசரி வகுப்புகள் Ford, நியூ ஜெர்சியில் நடைபெற்று வருகிறது. தாள ஸ்ருதி - பரதநாட்டியக் கலையைக் கற்பிப்பதே பள்ளியின் முக்கியக் குறிக்கோளாய் இருந்தாலும், சமீபகாலத்தில் மற்ற நடன வகைகளிலும் கால் பதிக்க ஆரம்பித்துள்ளது. ரேணுகா ஸ்ரீனிவாசன் அவர்கள், Christine Bragg-வுடன் இணைந்து, பலவிதமான Jazz, ballet மற்றும் நவீன அமெரிக்க நடனங்களை பரதநாட்டியத்துடன் கலந்து அளிப்பதில் ஆர்வமாக உள்ளார்.
தமிழ் வடிவம் - கோபால் குமரப்பன் |