அன்புள்ள சிநேகிதியே,
உங்கள் 'அன்புள்ள சிநேகிதியே' பகுதியைத் தவறாமல் எடித்து வருபவள் நான். நாங்கள் இங்கு வந்து தங்கி 35 வருடங்களுக்கு மேல் ஆகியவிட்டது. எங்களுடைய பிரச்சனைகள் இங்கு வந்திருக்கும் இளம்தலைமுறையினரைவிட வித்தியாசமானவை.
குழந்தைகளின் எதிர்காலத்துக்காகப் பெற்றவாகளையும், உற்றார்களையும் பிரிந்து இங்கு வந்தோம். (ஒரு கடிதத்துக்கும், தொலைபேசி அழைப்புக்கும் ஏங்குவோம்) பெண்களுக்கு நல்ல வசதியும், படிப்பும் கொடுக்க முடிந்தது. ஆனால், அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க இயலாதவர்களாகப் போய்விட்டோம். எங்கோ தவறு செய்து இருக்கிறோம். ஏன் அவர்களுக்கும் சரியான வாழ்க்கைத்துணை அமைத்துக் கொள்ளத் தெரியவில்லை. எங்களையும் கிட்ட நெருங்கவிட மாட்டேன் என்கிறார்கள்?
இப்படிக்கு, ...........
அன்புள்ள,
இது தனிப்பிரச்சனையும் அல்ல. தலைமுறையான பிரச்சனையும் அல்ல என்பது என்னுடைய பணிவான கருத்து.
இந்தியாவில் வளரும் குழந்தைகளை விட, இங்கே வளரும் குழந்தைகளுக்கு வசதிகளும், வாய்ப்புகளும், வாழ்க்கைத் தரமும் பலமடங்கு அதிகமாக இருக்கிறது என்று எல்லோருக்குமே தெரியும்.
வசதி அதிகரிக்க, வாய்ப்புகள் கூட, நாம் கல்வியுடன், மற்றக்கலைகளையும் சேர்த்துச் சொல்லிக் கொடுக்கிறோம். எல்லாமே இந்த இடத்தின் கலாசாரத்தின் பின்னணியில் தானே நடக்கிறது. அறிவு வளர்கிறது. ஆர்வம் பெருகுகிறது. தன்னம்பிக்கை தழைக்கிறது. தங்கள் வாழ்க்கையை தாங்களே நிர்ணயம் செய்ய வேண்டும், செய்ய முடியும் என்ற மனஉறுதிக்கு கல்வியும், கலாசாரமும் உரம் போடுகின்றன.
யோசித்துப் பாருங்கள். 16வயது வரை தான் நாம் அவர்களை கோழி அடைகாப்பது போலப் போற்றிப் போற்றிப் பாதுகாக்கிறோம். அதன்பிறகு நாம் சொல்லிக் கொடுத்த பண்புகளும், பழக்கங்களும் தான் அவர்களுக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கை தான் நமக்கு மிச்சம்.
இதைப் பற்றி சில நாட்களுக்கு முன் ஒரு விவாதம் நடந்த போது, ஒரு பெண் என்னிடம் தனியாக முறையிட்டுக் கொண்டாள். மாமி, மூன்று வயதிலிருந்து எனக்கு பிடித்த ஆடை, பிடித்த நிறம், பிடித்த உணவு, பிடித்த படம் என்றுதான் அப்பாவும், அம்மாவும் என்னைப் பார்த்துக் கொள்கிறார்கள். இப்போது எனக்குப் பிடிக்காத ஒன்றைத் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கே நியாயம்? அவர்களை வருத்தப்பட வைக்க எனக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும், வீட்டிற்கு வருவதையே தவிர்த்துக் கொண்டிருக்கிறேன் என்றாள்.
பணம் பெருகும்போது, அறிவு வளரும்போது, மனம் விரியும் போது சுதந்திரம் நம் மனதில் பொங்கும். தன்னிச்சையாகச் செயல்பட விரும்புவோம். அது நம் குழந்தைகளுக்கும் பொருந்தும். எங்கே, எப்போது என்று, ஏன், யாரை அவர்கள் தாங்களே துணை தேடி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்று அவர்களுக்கும் தெரியாது. நமக்கும் தெரியாது.
படிப்பை ஊட்டியிருக்கிறோம். பரிவுடன் பாதுகாத்திருக்கிறோம். நம் பங்கை முடித்து விட்டோம். நீந்தக் கற்றுக் கொடுத்து விட்டோம். ஒருநாள் கரையைத் தொடுவார்கள். கவலைப்படாதீர்கள். இதில் நானும் ஒருத்தி.
வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம் சித்ரா வைத்தீஸ்வரன் |