மனுபாரதியின் 'நீலமேஜை'
காலத்தின் உள்மடிப்புகளில் எழுத்தாளனின் பிரக்ஞை இயங்குகிறது. அங்கிருந்து அவன் தன் இருப்பை எழுதுகிறான். தன் கனவுகளை எழுதுகிறான். தன் வாதங்களைச் சொல்கிறான். காலத்தின் பேரிரைச்சல் முன்னால் தன் இருப்பு எடையற்ற ஒரு துளியெனவும் அவன் உணர்கிறான். எல்லா வழிகளிலும் காற்று இழுத்துச் செல்லும் இலையைப் போல அவனுடைய எழுத்து எல்லையற்று அலைகிறது. ஒவ்வொரு வாக்கியத்தின் அதிர்விலும் அவன் சேரும் இடம் அவனை பித்துப்பிடித்தாற் போலாக்குகிறது.

அதே பித்தை, அதே பரவசத்தை, அவனைப் படிக்கும் ஒரு வாசகன் உணரும் பொழுது அங்கே புதிதாக ஒரு வாக்கியம் துவங்குகிறது. பல எழுத்தாளர்களின் படைப்புகளில் அவர்கள் குரல் முடிவற்று ஒலித்துக்கொண்டிருக்கிறது. வாசகனின் மனதைத் தீண்டும் படைப்புகளில் எழுத்தாளனின் குரல் அமிழ்ந்தே கிடக்கிறது, ஆழ்நீரில் மிதக்கும் நிசப்தத்தைப் போல. மனுபாரதியின் சில கதைகளில் இந்த நிசப்தம் சாத்தியமாகியிருக்கிறது.

மனுபாரதி தென்றல் வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான். நவீன இலக்கியத்தின் காலடிச்சுவடுகளை அறிமுகப்படுத்தி வருபவர். அவர் எழுதிய ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு நீலமேஜை என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 'சிறகுபலம்', மற்றும் 'சிகரங்களை நோக்கி' என்ற இரு கதைகள் தென்றலைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு பரிச்சயமானவைதாம். மற்றவை தீராநதி, சொல்புதிது போன்ற இலக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன.

இந்தியக் குடும்பம் என்பது மாமாக்களும், அத்தைகளும், சித்திகளும், பெரியப்பாக்களும், பாட்டிகளும், தாத்தாக்களும் கூடும் விரிந்த அமைப்பாக உள்ளது. ஒரு உறவு அறுபடும் பொழுது இன்னொன்று முளைக்கிறது. தமிழ்க்குடும்பத்தின் அரசியல், அதன் போராட்டங்கள், இழப்புகள் மனுபாரதியை 'நீலமேஜை'யை எழுத வைக்கிறது. ஆனால் இந்தக் குடும்பம் இந்திய வாழ்நிலைக் கலாச்சாரத்தின் ஒரு வகைமாதிரி மட்டுமல்ல, அதனுடைய குரல் உலகமெங்கும் ஒலிக்கிறது. மெக்ஸிக்கோவின் வாழ்நிலைச் சூழலில் இந்தியக் குடும்பத்தின் குரல் ஒலிக்கிறது. அதன் மொழி வேறுபட்டாலும், குரல் வாழ்வின் குரல்தானே. 'நீலமேஜை' என்ற திடப்பொருளை வைத்து விரியும் கதையில் கேட்கும் தமிழ்நாட்டு கூட்டுக்குடும்பத்தின் நாடித்துடிப்பும், மெக்ஸிக்க வேலன்ஷியாவின் குடும்பத்தின் நாடித்துடிப்பும் ஒன்றாக இணைகின்றன. 'நீலமேஜை'யில் வரையப்பட்டிருக்கும் முல்லைப்பூக்களைப் போன்று எல்லாரும் தனித்தனியே சிதறிப்போகும் போது கதைசொல்லியின் துயரம் கலந்த மௌனம் மழை நின்ற மாலைப்பொழுதின் துக்கத்தைப் போல நம்மீது கவிகிறது.

'ஒரு நாடோடியின் பயணக்குறிப்பு' என்ற கதையில் அமெரிக்காவில் வேலை இழந்த ஒரு பெண் ஐரோப்பாவில் சுற்றுலா செல்கிறாள். தனிமையும் வெற்றிடமும் அவளுக்குள் நிரம்பி வழிகின்றன. அவள் பார்க்கும் இடங்களை, நபர்களை நாட்குறிப்பாக எழுதுகிறாள். நாம் பழகின இடத்தை விட்டுப் புதிய இடத்துக்கு செல்லும் பொழுது, நம்மை அறியாமலேயே புதிதான ஒரு உருவத்தைப் பெற்றுக்கொள்கிறோம். நாயகிக்கு ஐரோப்பாவின் காட்சிகள் புதியதாக இருக்கின்றன. அதே தீவிரத்துடன் தன் வாழ்க்கையின் இறந்தகாலக் காட்சிகளையும் பார்வையிடுகிறாள். புறக்காட்சியும், அகக்காட்சிகளும் ஒன்றுகூடும் தருணங்கள் கதையில் சிறப்பான அனுபவத்தை அளிக்கின்றன.

'பட்டுப்புழுக்கள்' கதை ஒரு விவரணப்படம் போல விரிகிறது. பட்டுப்புழுக்கள் மீதும், பட்டுத்துணி நெய்யப்படும் ஆலைகளில் வேலை செய்யும் குழந்தைத் தொழிலாளிகள் மீதும் மாறிமாறிக் காமிராவின் பார்வை நகர்கிறது. எதையும் உரத்துச் சொல்லாமல், காட்சிகள் மூலமாக மனதில் தைக்கும் உணர்வுகளைக் கதையின் பாணி ஏற்படுத்துகிறது.

'சக்கர வியூகம்' குறிப்பிட்டு சொல்ல வேண்டிய கதை. இதில் அபிமன்யுவின் கதை மீள்பார்வை செய்யப்படுகிறது. அபிமன்யுவிற்கும், பெயரில்லாத ஒரு கதைசொல்லிக்கும் நிகழும் பேச்சு மூலம் கதை நகர்கிறது. கதை முடியும் பொழுது, கதைசொல்லியின் குரல் அபிமன்யுவின் பிரக்ஞை போலவும் சரித்திரத்தின் பிரக்ஞை போலவும் விரிவடைகிறது. அபிமன்யுவால் உடைக்கமுடியாத காவிய சக்கரவியூகம், இன்றும் மிகச்சிறந்த மனங்களை முறித்துக்கொண்டிருக்கும் நவீன வாழ்வின் இருண்மையாக உருவெடுக்கிறது.

மனுபாரதியின் மொழி எளிமையானது. அதேசமயம், நுட்பங்களைத் தீட்டும் கூர்மையை மேலே சொன்ன கதைகளில் வெகுசிறப்பாக அடைந்திருக்கிறது. புத்தக உருவாக்கம் எளிமையான அழகுடன் பிரகாசிக்கிறது.

நீலமேஜை (சிறுகதைகள்)
மனுபாரதி (manubharathi@yahoo.com)
சிந்தியன் பதிப்பகம்
முதலாம் முதன்மைத் தெரு,
நந்தனம், சென்னை - 600 035

புத்தகம் கிடைக்குமிடம்:
Mailbag, San Hose, California.
தொலைபேசி: 408 946 3131

கோகுலக்கண்ணன்

© TamilOnline.com