எங்கள் பெற்றோருக்கு நான்கு குழந்தைகள். வாய்க்கும் கைக்குமான வருமானம். அந்த நிலமையில் என் அம்மா வழிப் பெரியம்மா பெரிய பணக்காரர். தீபாவளிக்கு எங்கள் வீட்டிற்கு வரப் போவதாகக் கடிதம் போட்டிருந்தார். எல்லோருக்கும் துணிமணி, பட்டாசுகள் வாங்கி வருவதாக வேறு எழுதியிருந்தார். ஒரே கொண்டாட்டம்தான். சென்னையிலிருந்து பெரியம்மா வரப்போகும் நாளை வெகு ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம்.
தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பு பெரியம்மா வந்துவிட்டார்கள். பெரியம்மாவைவிட அவருடன் வந்த பெட்டியிலேயே எங்கள் முழு கவனமும் இருந்தது. வந்தவுடன் வழக்கமான உபசரிப்பு, பேச்சுக்கள் முடிந்தது. பெரியம்மா பெட்டியைத் திறக்க ஆரம்பித்தார். நாங்கள் பரபரப்பானோம். பெட்டியைத் திறக்கவே முடியவில்லை. என்ன இது என்று மிகவும் பிரயாசைப்பட்டுப் போராடி ஒருவழியாகத் திறந்து ஆயிற்று.
திறந்த பெட்டியில் பத்து கட்டு அப்பளம், ஜபமாலை, பழனி விபூதி குங்குமம், பல்செட், பழைய புடவைகள்! ''ஐயையோ...'' என்று பெரியம்மா அதிர்ச்சியுடன் கூச்சலிட்டுவிட்டார்.
எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ''சே... அவ்வளவுதான் தீபாவளி போலிருக்கு...'' என்று வெறுப்பும் ஏமாற்றமுமாய் நின்றிருந்தோம்.
''என்கூடவே ஒரு வயதான அம்மா வந்தாங்க... அவங்க பெட்டியும் என்னுடையதும் ஒரே மாதிரி இருக்கவே மாறிப் போயிடிச்சு...'' என்று வருத்தம் பொங்கப் புலம்பியவர் சிறிது நேரத்தில் மனம் தேறி, ''சரி வாங்க கடைக்கு...'' என்று கிளம்பிச் சென்று துணிமணிகளும், பட்டாசு இனிப்புகளும் நிறைய வாங்கிவிட்டார்கள்.
மறுநாள் காலை வீட்டு வாசலில் காரில் வந்து இறங்கிய ஒருவர் உள்ளே வந்தார். ''அம்மா நேற்று முன்தினம் என் அம்மா சென்னையிலிருந்து உங்களுடன் பிரயாணம் செய்தாங்க. அவங்களுடைய பெட்டி மாறி தவறுதலாய் உங்களுக்கு வந்திருக்கு... இதோ உங்க பெட்டி கஷ்டப்பட்டுத்தான் திறந்தோம். நல்லவேளையாய் உங்க விலாசம் இருந்தது. தீபாவளித் துணிமணிகள் போல இருக்கே. எல்லோருக்கும் ஏமாற்றமாக இருக்கப்போகிறதே என்று ஓடி வந்தேன். மன்னிச்சுக்கோங்க'' மிகுந்த சங்கடத்துடன் பவ்யமாய் கூறினார்.
பிறகு என்ன? அந்த வருட தீபாவளி தூள்தான் போங்க! எல்லாமே ரெண்டு ரெண்டு ஆச்சே. மறக்கமுடியுமா!
தங்கம் ராமசாமி |