அன்று ஒளிவீசும் தீபங்கள் ஒலிபரப்பும் வாணங்கள் களிக்கூத்தாடி எங்கும் கலகலக்கும் இல்லங்கள் வெளிவாயில் எங்கணுமே விளையாடும் மழலையர்கள் துளியாய்ப் பெயத் துவங்கி தூள்பரப்பும் அடைமழைகள்
கால்பாவ இடமின்றிக் கடலொக்கும் கடைத் தெருக்கள் நால்வகையாம் உடைகளுடன் நகைகளுமே மிக்குண்டாம் சேலைக்காய் அங்காடி தெருநிறையப் போதாதாம் சேல்விழியார் மொய்த்திடுவர்; செயலிழக்கும் கொழுநர் குலம்!
நெய்மணமும் ஏலமுடன் குங்குமப்பூ முந்திரியும் பெய்த செழும் பாலுடனே சேர்ந்து கமகமக்கும் கைவரிசைகாட்டிடவே காரவகை பற்பலவாம் மைபோலக் கிளறிவைத்த மருந்தும் மணத்திடுமே
சிவகாசிச் சீமைக்கு சீர்கொணரும் இப்பொன்னாள் சீனிவெடி, மத்தாப்பு, ஆயிரம் பத்தாயிரமாய் சிங்கார வெடிகளெலாம் சீறிப்பறந்து வரும் சின்னஞ்சிறாருடனே முதியோர்க்கும் கொண்டாட்டம்
சாய்ந்துறக்கம் கொள்ளுமுன்னே சடசடக்கும் பேரோசை சரவெடிக்குத் துணையாக ஜொலிஜொலிக்கும் மத்தாப்பு காய்ச்சிவைத்த எண்ணெயுடன் கண்கரிக்கச் சிகைக்காயும் கங்கையவள் வெந்நீரில் காத்திருக்க நீராட்டம்
திருநாளாம் தீவிளியோ திசைஅதிர வந்ததுவாம் பெருநாளாய்க் கொண்டாடிப் பெருமை கொளும் நன்னாளாம் சிறுவருடன் விருத்தர்வரை சிரித்ததனை வரவேற்க மருகனொடு மாமனுக்கும் சேரத் தலை தீவிளியாம்
இன்று நாடு கடந்து பல காவதங்கள் வந்தாச்சு நாள்கிழமை கொண்டாட்டம் முறைகழிக்கவென்றாச்சு வீடுமுற்றும் வேலைக்காய், பள்ளிக்காய்ப் பறக்கையிலே விடுமுறையில் கூட்டுணவு விருந்துண்டால் சரியாச்சு!
காக்கையுடன் போட்டியிட்டுக் குளியல் முடித்தாச்சு கண்மூடிக் கால்நிமிடம் கை குவித்து நின்றாச்சு கண்டங்கள் மாறிடினும் மாறாத தொன்றுண்டு காலைமுதல் வாழ்த்திவரும் "கங்காஸ்நானம் ஆச்சா?"
அம்புஜவல்லி தேசிகாச்சாரி |