அதிர்ச்சி
தீபாவளி மலருக்குக் கதை எழுதுமாறு ஆசிரியரிடமிருந்து மூன்றாவது ஞாபகக் கடிதமும் வந்துவிட்டது. கதை எழுத வேண்டுமென்று உட்கார்ந்தேன். அந்த மாய மடந்தை 'கல்பனா' என் பிடிக்குள் சிக்காமல் ஓடி மறைந்தாள். நான் நினைத்தபோது அழைத்தால் வருவாளா அவள்? வெட்ட வெளிச்சமாக எல்லாருக்கும் தெரியும்படி என்னிடம் வருவதற்கு அவளுக்குக் கூச்சம்! நான் கண் அயர்ந்ததும், யாரும் அறியாமல் நிலவுக் கதிர் ஊர்வது போல் அந்நல்லாள் மெல்ல என்னைத் தொட்டு எழுப்பி என் அந்தரங்கத்தே வந்து புகுந்தாள். வற்புறுத்தினால் அவள் பிடிவாதம் பிடிப்பாள். ஏங்கினால்தான் கருணை கூர்ந்து கவனிப்பாள்.

இந்த மாதிரி சங்கட நிலையில் கதைக்கு விஷயம் அகப்படாமல் திண்டாடும்போது ஒருநாள் திடுமென என்னை அணுகும் 'கல்பனா'வின் விசித்திர வளையல் ஒலி என் இருதயத்துள் ஜங்காரம் செய்தது. என் பேனாவின் முனை சிலிர்த்தது. அவளும் நானும் ஒன்றியபோது ஓர் அபூர்வ இலக்கியம் உருவெடுத்தது.

என் மனைவி சற்றைக்கு ஒருதரம் 'ஏன்னா, நாழிகை ஆகிறதே, சாப்பிட்டுவிட்டு எழுதுங்களேன்' என்று அழைப்பது எனக்கு எரிச்சலைத் தந்தது. நான் பதிலே பேசாமல், கதை எழுதும் சுவாரசியத்தில் மூழ்கி இருந்தேன். பிற்பகல் மூன்று மணிக்குக் கதையை முடித்துவிட்டுக் கை விரல்களை நொடித்துச் சாய்வு நாற்காலியில் சாய்ந்தேன். கதையை ஒருதரம் என் மனத்திரையில் ஓட்டிப் பார்த்துக் கொண்டேன். கட்டாயம் ரசிப்பார்கள் என்று தோன்றியது. என் மனைவி கதவோரமாக வந்து உள்ளே எட்டிப் பார்ப்பதை என் புலன் உணர்ந்தது. ''சரி, இலையைப் போடு" என்றதும் எழுந்து சமையலறையை நோக்கி வந்தேன். செய்து வைத்திருந்த சாப்பாட்டை வேண்டா வெறுப்பாக உட்கொண்டதும் என் அறைக்கே வந்தேன். சற்றுக் கண்ணயரலாமென்று சாய்வு நாற்காலியிலேயே சாய்ந்து காலை மேஜை மீது நீட்டிக் கொண்டேன். விளக்கு ஏற்றும் சமயந்தான். என்ன பண்ணுவது? அவ்வளவு ஓய்ச்சல் என் மூளையிலும் உடலிலும்.

யாரோ வரும் காலடிச் சத்தமும் இருவர் மெல்லப் பேசும் அரவமும் என் துயிலைக் கலைத்தன. ''ஏன்னா, உங்களை யாரோ பார்க்க வந்திருக்கா, உள்ளே வரலாமா?'' என்று குரல் கொடுத்தாள் என் மனைவி.

''யார்? வாயேன்'' என்றேன்.

என் மனைவியின் பின்புறமாக ஒரு பெண் பதுங்கிக் கொண்டிருந்தாள். "இவள் யார் தெரியுமோ?'' என்று கேட்டாள்.

நான் எழுந்து அவளை ஒரு பிரதக்ஷ¢ணம் வந்தேன். வெட்கத்தினால் உடலைக் கூசிக்கொள்ளும் அந்தப் பெண்ணைக் கண்டேன். இதற்குள் என் மனைவி சுவர் ஓரமாக உள்ள 'ஸ்விச்'சைப் போட்டாள். எலெக்ட்ரிக் வெளிச்சம் எல்லாவற்றையும் அம்பலப்படுத்தியது. "எங்கோ பார்த்த ஞாபகமாக இருக்கிறதே. இரு இரு'' என்று விழிகளை மேலே ஒட்டி நினைவைப் புரட்டிப் பார்த்து நான், ''நம்ம வைஜி... வைஜயந்தி'' என்றேன்.

''அவளுடைய அம்மா உங்களுக்கு ரொம்பத் தெரியுமாமே?'' என்றாள் என் மனைவி.

''ஆமாம், அம்புஜம்; நன்றாகத் தெரியுமே'' என்றேன்.

பெதும்பைப் பருவத்திற்கும் மங்கைப் பருவத்திற்கும் இடையே தப்பித்து நிற்கும் வைஜயந்தி பக்கென்று சிரித்து விட்டாள்.

''அம்புஜம் அக்காவின் பெண்தானே? சின்னக் குழந்தையாக இருந்தபோது பார்த்தது இவளை, இப்போது அடையாளம் தெரியாமல் மாறிப்போய் நன்றாக வளர்ந்து இருக்கிறாள். அம்புஜம் என்னைவிட நாலு வயசு பெரியவள். திருவல்லிக்கேணியை விட்டு எழும்பூருக்கு நாங்கள் வந்தபிறகு அவ்வளவாகப் போக்குவரத்து இல்லை. ஒரு சமயம் தற்செயலாக அம்புஜத்தின் புருஷர் வேதாந்தம் என்னைச் சந்தித்த போது, விடேன் தொடே¦ன்று என்னை இழுத்துக் கொண்டு போனார் தம் வீட்டுக்கு. இந்த வைஜி கெளன் போட்டுக்கொண்டு 'பாப்' பண்ணின தலைமயிருடன் குடுகுடுவென்று ஓடும் குட்டி அப்போது. என்னைப் பார்த்ததும் மடியில் ஏறிக்கொண்டு சாக்லேட்டுக்காக என் ஜேபியெல்லாம் சூறையாடினாள். கிடைக்கவில்லை. அடுத்த நாள் அவள் ஆசைதீர டப்பி நிறையச் சாக்லேட்டைச் சமர்ப்பித்தேன். சாக்லேட் ரசம் வாய் ஓரத்திலிருந்து வழிய என்னமாத்தான் சப்பினாள் தெரியுமா? இதெல்லாம் இவளுக்குக் கவனம் இருக்காது" என்று ஆதரவுடன் வைஜியின் மோவாயைத் தொட்டேன், அப்போது உலகத்திலுள்ள வெட்கமனைத்தும் அவளைச் சூழ்ந்து கொண்டது. கண்ணை லஜ்ஜையினால் கசக்கிவிட்டாள்.

''அக்கா எல்லாரும் செளக்கியந்தானே... அம்மா?'' என்றேன்.

''செளக்கியந்தான் மாமா... நீங்கள் எங்கள் அகத்துக்கு இவ்வளவு கிட்ட இருப்பது தெரியாது. நாங்கள் ஹால்ஸ் ரோட்டில் இருக்கிறோம்'' என்றாள் வைஜி.

''டி.சி. சாரி என்று போட்டிருக்கிறதே... அந்த பங்களாவா?'' என்றேன்.

''ஆமாம்... அதே'' என்றாள் வைஜயந்தி.

''அட ராமா! உங்கள் அப்பாவை வேதாந்தம் என்று நாங்கள் கூப்பிடுவோம். இப்போது புரிகிறது 'டி.சி. சாரி' யாரென்று. நான் இங்கே இருப்பது உனக்கு எப்படித் தெரிந்தது?'' என்றேன்.

''என் வகுப்புப் பெண் ஸ¤னந்தா. உங்கள் அடுத்த வீட்டுக்காரர் பெண். அவள்தான் சொன்னாள். நீங்கள் பத்திரிகைகளில் கதையெல்லாம் எழுதுகிறீர்களாம். 'மணியன்' என்ற புனைபெயரில் வரும் ஒவ்வொரு கதையும் விசித்திரமாய் இருக்குமாமே. மாமா, எனக்குக் கதை என்றால் அடங்காத மோகம். எத்தனையோ நாவல்கள் எழுதியிருக்கிறீர்களாமே. 'மனக்கோயில்' என்ற உங்களுடைய கதை எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. எப்படி மாமா அந்த மாதிரிக்கதை எழுத வருகிறது உங்களுக்கு? நானும் முயற்சி பண்ணுகிறேன். பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிகிறது! இன்றைக்கு உங்களைப் பார்த்தது ரொம்பச் சந்தோஷம் எனக்கு. உங்கள் புத்தகம் ஒவ்வொன்றிலும் எனக்கு ஒரு பிரதி வேண்டுமே மாமா' என்று வைஜி சாமர்த்தியமாக வலை போட்டாள்.

''இப்போது, கைவசம் இல்லை. பெரும்பாலும் ஆகிவிட்டன. உனக்கு இரண்டு புத்தகங்கள் தருகிறேன்'' என்றதும் நான் அலமாரியிலிருந்து 'ஆடவர் மனம்' என்ற என் புது நாவலையும் 'இடியும் மின்னலும்' என்ற என் சிறுகதையின் மூன்றாம் தொகுதியையும் எடுத்து அவளிடம் தந்தேன்.

அவற்றை ஆர்வத்துடன் கையில் ஏந்தி வைஜி, ''உங்கள் ஆசியுடன் கையெழுத்துப் போட்டுத் தாருங்கள் மாமா'' என்றாள்.

''ஆடவர் மனம் மட்டும் உன்போன்ற இளம் வயசினருக்குப் புரியாது. பெரியவர்களுக்குத்தான் அந்த மனத் தத்துவம் விளங்கும்'' என்று நான் அந்த நாவலின் உட்புறத் தாளில் 'மாமாவின் அன்பளிப்பு' என்று மட்டும் எழுதினேன். 'இடியும் மின்னலும்' என்ற கதைத்திரட்டில், ''பயப்படாதே, இடியும் மின்னலும் இராது போனால் மழை பெய்யாது. உன் மனத்தைக் குளிர்விக்கும் மழையை இக்கதைத் தொகுதி கட்டாயம் பொழியும். அநுபவித்துப்படி - மாமா'' என்று வரைந்தேன்.

''நாங்கள் வைஷ்ணவர்கள், நீங்கள் ஸ்மார்த்தர்கள். எந்த முறையில் நீங்கள் எனக்கு மாமாவாக முடிந்தது?'' என்று கேட்டாள்.

''உன் அம்மா எந்த முறையில் எனக்கு அக்கா ஆகிறாளோ அந்த முறையில் மாமா நான் உனக்கு'' என்றேன்.

இதைக் கேட்டு வைஜயந்தி உரக்கச் சிரித்தாள். வெள்ளிச் சதங்கையின் ஒலி அதில் கேட்டது.

''நான் இன்னொரு நாள் வருகிறேன். உங்களோடு ரொம்பப் பேச வேண்டும். உங்களை இப்போது தொந்தரவு செய்யவில்லை'' என்றதும் வைஜி போய் விட்டாள்.

என் இளமையில் நானும் அம்புஜமும் பழகிய நினைவுகள் நினைவுக்கு வந்தன. யாவும் மங்கலாகத் தெரிந்தன. ஞாபகத்தைப் பறிகொடுத்து நான் நிற்பதைப் பார்த்து என் மனைவி, ''ஏன்னா, காதிலே விழுந்ததா? யாராவது வந்தால் போனால் காபி தர நல்ல பாத்திரம் இல்லை. எவர்சில்வர் டீ செட்டு ஒன்று அவசியம்'' என்றாள்.

''சரி ஆகட்டும்'' என்று நான் சற்று வெளியே போய்வரச் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்பினேன்.

மூன்று நாட்களுக்குப் பிறகு, ஆங்கிலத்தில் இருந்த அருமையான சுயசரிதையொன்றில் ஊறிப் போயிருந்தேன். பூனை வருவது போல் வைஜயந்தி எப்போது என் பின்னால் வந்து நின்றாளோ தெரியாது. என் உணர்வு வேறொன்றில் பாய்ந்திருப்பினும் யாரோ வந்தது மட்டும் நிழல்போல் என் மனத்துள் விழுந்தது. திரும்பினேன். அன்று என் மனைவியின் எதிரே வைஜயந்தியைக் கூர்ந்து கவனிக்கத் துணிவு ஏற்படவில்லை. எங்கோ ஓரிடத்தில் படித்திருக்கிறேன். ஆமாம், தமிழ் உலாவில் வருகிறது.

...மதன்
பேறும் மடநாணும் பெண்மைப் பெருமிதமும்
வீறும் சிறிது அரும்பும் மெய்யினாள்.
இந்த வர்ணனைக்குச் சரியாக ஒத்திருந்தாள் வைஜயந்தி.

''என்ன அம்மா?'' என்றேன்.

''இன்றைக்கு லீவ் மாமா, அப்பாவும் ஊரில் இல்லை. உங்களோடு பேசலாமென்றுதான் வந்தேன். ஏதாவது இடைஞ்சலாக இருக்குமோ?" என்றாள் வைஜயந்தி. இப்போது அவள் கண்களிலோ அங்க வளைவுகளிலோ வெட்கம் குறுகுறுக்கவில்லை.

''எத்தனை நாழிகை வேண்டுமானாலும் பேசு, எனக்கும் இன்று ஓய்வுதான். எந்த வகுப்பில் படிக்கிறாய்? எந்தப் பள்ளிக்கூடம்? என்று விசாரித்தேன். கையிலுள்ள புத்தகத்தை மூடிவிட்டு.
''மெட்ரிக் ஸெயின் டெரிஸா ஸ்கூல் மாமா, அப்பாவுக்கு நான் இங்கிலீஷ் நன்றாகப் படிக்க வேண்டுமென்ற எண்ணம். எனக்கோ தமிழில்தான் ஆசை. வீட்டில் ஒரு தமிழ்ப் புத்தகம் கண்ணில் படச் சகிக்கமாட்டார். தூக்கி எறிந்து விடுவார். திருட்டுத்தனமாகப் படித்தால்தான் முடியும். அம்மாவிடம் சொன்னேன். உங்களைப் பற்றி, 'மணியன்' என்று பத்திரிகைகளில் எழுதுபவர் நீங்கள்தாம் என்று, அம்மாவும் உங்களைப் பற்றி என்ன என்னவோ உயர்த்தியாகச் சொன்னாள். என் அதிருஷ்டந்தான். புரியுமென்று சொன்னீர்களே, அந்த 'ஆடவர் மனம்' என்ற நாவல் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. புதுவிதம், மாமா. நான் படித்த புத்தகங்களைவிட இது வேறு மாதிரி பெண் தன்மையைப் பற்றி எத்தனையோ நாவல்கள் படித்திருக்கிறேன். ஆடவர் மனம் எந்த மாதிரியென்று தெரிய வேண்டாமா? அந்த மனத்தத்துவம் புரியாதென்றீர்களே இந்த வயதில். எனக்கு விஷயம் தெளிவாகத்தான் இருக்கிறது'' என்று கூறியபோது அவளுடைய கொழுவிய தாடைகளில் சிவப்பு நிறம் படர்ந்தது. கண்களில் வேட்கையும், உடல் வளைவில் அபூர்வ நெளிவும் தோன்றின. பதினைந்து வயசுப் பெண்ணிடத்தில் வயசை மீறிய பாவங்கள் தோன்றுவது சற்று வியப்பாகத்தான் இருந்தது எனக்கு.

''நீ தமிழ் நாவல் படிப்பது அப்பாவுக்குத் தெரியுமோ?'' என்றேன்.

''ஐயோ, தெரிந்தால் கொன்றுபோட்டு விடுவாரே! அம்மாவையும் கோபித்துக் கொள்வார். 'பள்ளிக்கூடப்பாடம் இருக்கும் போது இதிலே மனசைச் செலுத்தினால் உருப்பட்டாற் போலத்தான்' என்று. ஆனால் மாமா, உங்கள் புத்தகம் என்றதும் அவள் ஒன்றும் சொல்வில்லை. நேற்று ஒரே மூச்சில் படித்தபிறகே நான் எழுந்தேன். நீங்கள் வர்ணிக்கும் ராமுவைப் போல் உலகத்தில் யாராவது இருப்பானா? வெறும் கற்பனைதானே?'' என்றாள்.

''ஏது, பெரிய கேள்வி போடுகிறாயே! சரி, உங்கள் அப்பாவைப் பார்த்துச் சொல்லி விடுகிறேன்'' என்றேன்.

''ஐயோ! வேண்டாம், மாமா'' என்று கெஞ்சினாள் வைஜி.

''பிழைத்துப் போ.. உனக்குக் கதை பிடிக்கிறதா?''

''ரொம்ப ராமுவைப் பார்க்க வேண்டுமென்றிருக்கிறது'' என்றாள்.

''அசடே... கற்பனையையும் வாழ்க்கை அனுபவத்தையும் வைத்து இந்த ராமுவைச் சிருஷ்டி செய்தேன். அவன் பாதி உண்மை. ராமுவைப் போல ஒரு பையன் இருந்தால் அவன் மீது ஆசை கொள்வாயா?'' என்றேன். இதைக் கேட்டதும் லஜ்ஜை அவளைக் கவிந்து கொண்டது. வெகுநேரம் அவள் என்னை நிமிர்ந்தே நோக்கவில்லை. ஜன்னல் சட்டத்திற்குள் அடங்கித் தோன்றும் வெளிக்காட்சியில் கண்ணைச் செலுத்தினேன். வைஜயந்தி இதற்குள் வெட்கத்தைக் களைந்து, ''மாமா'' என்றாள். நான் திரும்பினேன். அப்போது அறையில் எங்கள் இருவரைத் தவிர வேறு பிராணி இல்லை. என் மனைவி கீழே காரியமாக இருந்தாள். அவள் குறுக்கிட வாய்ப்பில்லை.

''என்னம்மா?'' என்றேன்.

என்னையே உருக்கமாகப் பார்த்தாள் வைஜி.

''நாழிகை ஆகிறது. அப்பா வந்துவிடுவார். 'எங்கே இத்தனை நேரம்?' என்பார். எங்கள் வீட்டுக்கு வாருங்கள். அம்மா அழைத்து வரச் சொன்னாள். இப்போது வருவீர்களா?'' என்றாள்.

''இன்றைக்கு வேண்டாம். இன்னொரு நாள் வருகிறேன். உங்கள் அப்பாவையும் பார்க்க வேண்டும்'' என்றேன்.

''எதற்கு மாமா? என்னைப் பற்றிச் சொல்லவா?'' என்றாள்.

நான் சிரித்தேன். அவளுக்கு இருந்த திகில் ஒழிந்தது.

ஸெயிண்ட் டெரிஸா கான்வென்ட் பக்கம் நான் வந்து கொண்டிருக்கிறேன். கான்வென்டிலிருந்து பெண்கள் பள்ளிக்கூடப் பஸ்ஸிலும் தனிக் கார்களிலும் செல்வதைக் கவனித்தேன். என் பக்கமாக ஒரு மின்க்ஸ் உராய்வது போல் வந்து நின்றது. மாமா என்ற இனிய குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். வைஜயந்தி. முத்துப் பற்களைக் காட்டி, ''என்னோடு வாருங்களேன். அம்மாவும் உங்களைப் பார்த்தாற்போல் இருக்கும்'' என்று கழுத்தை அழகாக வளைத்துக் கெஞ்சினாள்.

என்னால் மறுக்க முடியவில்லை. ''சரி, வருகிறேன்'' என்று கதவைத் திறந்து காரில் ஏறிக்கொண்டு அவள் பக்கத்திலேயே அமர்ந்தேன். என்ன தென்பு, என்ன குதூகலம் அவள் முகத்தில் அச்சமயம் விளையாடியது!

''பரி¨க்ஷ மாமா, இந்த ஒரு வாரமாக எனக்குக் கதை படிக்க ஒழிவே இல்லை. பல்லைக் கடித்துக் கொண்டு கொஞ்ச நாள் கடத்திவிட்டேனானால் அப்புறம் என்னைக் கேட்பார் இல்லை. என் இஷ்டம் போல் எதை வேண்டுமானாலும் படிப்பேன். 'இருமுனை' என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறீர்களாமே. எல்லாரும் சொல்லுகிறார்கள். ரொம்ப நன்றாக இருக்குமாம். ஒரு பெண்ணின் சோகக் கதையாம். இரண்டு புருஷர்களிடையே ஊசலாடும் ஒருத்தியின் காதல் சித்திரம் மனசை அப்படியே உருக்கிவிடுமாம். நிஜமாவா மாமா? அந்தப் புத்தகம் எனக்கு ஏன் கொடுக்கவில்லை?'' என்றாள்.

''அதைப் படிக்கும் வயசு வரும்போது நானே தருவேன்'' என்றேன்.

கார் செல்லும் விசையில் அவளுடைய முன்னுச்சியில் தொங்கும் குழல்கள் பறந்தன. நீண்ட கை விரல்களை ஒன்றோடு ஒன்று பிணைத்துப் பிரித்துக் கொண்டிருந்தாள். விரலில் நுனியில் பேனாவின் மசி படிந்திருந்தது.

பங்களாவுக்குள் கார் நுழைந்து 'போர்ட்டிகோ'வில் வந்தது. இறங்கினோம். வேதாந்தம் வாசலில் நின்றிருந்தார். முன்பு நான் பார்த்ததைவிட அவருக்கு உடம்பெங்கும் சதை போட்டிருந்தது. வழுக்கைதட்டிய தலை. பனியனை விட்டுப் பிதுங்குவது போல் வயிறு ஊதிப் புடைத்திருந்தது. என்னைப் பார்த்ததும் முதலில் புரிந்து கொள்ளாதது போல் கடுகடுத்தது அவர் முகம். என்ன இருந்தாலும் அவ்வளவு சீக்கிரம் என்னை மறந்துவிட முடியுமா? ஓ பாலசுப்பிரமணியம்! பாலு, என்னப்பா! ரொம்ப நாளுக்கு ரொம்ப நாள், வா, வா!'' என்று முகமெல்லாம் வாயாக என்னை ஹாலுக்கு அழைத்துச் சென்றார்.

இதற்குள் வைஜயந்தி உட்புறம் சென்று அம்மாவிடம் வத்தி வைத்துவிட்டாள். முதலில் அம்புஜமென்றே நினைக்கவில்லை. அவள் மட்டும் என்னைப் புரிந்து கொண்டு, ''வா பாலு, எத்தனை நாளாச்சு? வைஜி உன்னை எங்கிருந்து பிடித்தாள்? வேடிக்கை?'' என்றாள். நான் பழைய சம்பந்தத்தை விடாமல், "இல்லை அக்கா நான் கதைகிதை பத்திரிகையில் எழுதுகிறேனோ இல்லையோ'' என்று ஆரம்பிப்பதைப் பார்த்து வைஜயந்திக்குத் தர்மசங்கடமாகி விட்டது. அப்பா வேதாந்தத்தின் எதிரே இந்த ரகசியத்தை நான் உடைப்பதுதான் அவளுக்குப் பெரும் பீதியை மூட்டியது. மகளின் முகத்தில் செல்லும் வேதனையை ஜாடையாகக் கவனித்து அம்புஜம், ''வாயேன் உள்ளே பாலு! உன்னைப் பார்த்து எத்தனை வருஷமாச்சு!'' என்றாள்.

நானும் அவள் பின்னாலேயே சென்றேன்.

''அவர் எதிரே வேண்டாமென்றுதான் இங்கே வந்தேன். உன்னைப்பற்றி வைஜி எல்லாம் சொன்னாள். நீ கிட்டத்தான் இருக்கிறாயாமே? நம் வைஜிக்குத் தலைகால் தெரியவில்லை. உன் கதை, உன் நாவல் என்றால் விடுவதே இல்லை. எனக்குப் படித்துச் சொல்வாள். இதெல்லாம் அவள் அப்பாவுக்குத் தெரியாமல் செய்யும் சர்ச்சை. ஏதோ பெண் இவ்வளவாவது புத்திசாலியாக உன்னை இங்கே அழைத்து வந்தாளே!'' என்றாள்.

''அக்கா, பழைய வாசனை எப்படி மறைந்து விடும்? உன் பெண் அல்லவா?'' என்றேன்.

அம்புஜம் சற்று ஸ்தூலமாகிவிட்டாள். புருஷன் நல்ல ஸ்திதியில் இருந்தாலும் கர்வம், அகம்பாவம் துளிக்கூட இல்லை. பழைய அன்புடன் என்னை உபசரித்தாள். இதற்குள் பரிசாரகன் எனக்குச் சிற்றுண்டியும் காபியும் கொண்டு வைத்தான். அதைச் சாப்பிட்டேன். வைஜியும் குளித்துவிட்டுப் புதிய உடை அணிந்து கொண்டு பனியில் தோய்ந்த பதுமம் போல் என் எதிரே வந்து நின்றாள். அம்மாவின் இளம் வயசு அழகையெல்லாம் திரட்டிக் கொண்டு வந்திருந்தாள். அம்புஜத்தின் புத்தம் புதிய எடிஷன். ''மாமா வாருங்களேன்... மாடிக்குப் போகலாம். நான் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களைக் காண்பிக்கிறேன். அப்பாவுக்குத் தெரியாமல் எவ்வளவு கஷ்டப்பட்டுச் சேர்த்தேன்! மறைவான இடத்தில் தான் வைத்திருக்கிறேன்'' என்று எனக்கு வழிகாட்டித் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே படி ஏறினாள்.

தெற்கு நோக்கிய அறை. கன்னிப் பெண்ணுக்குரிய தூய்மை, அவ்வறையில் ஒவ்வோர் அலங்காரத்திலும் மண்டிக் கிடந்தது. சுவரில் ஒரே இடத்தில்தான் படம், கன்யாகுமரி அம்மனின் பெரிய அளவுப் படம். அதன் கீழ் ஒரு சின்னச் சந்தனமர ஷெல்பில் ஓம் என்ற வடிவுடைய ஊதுவத்தி ஸ்டாண்டு ஒரு பெரிய கண்ணாடி புக்கேஸ், அதனுள் ஒழுங்காக அடுக்கிய புத்தகங்கள். அவற்றுள் பெரும்பான்மையும் தமிழ் நாவல்களே, வெண்நுரை போன்ற கொசுவலை மாட்டிய ஒற்றைக் கட்டில், அறை நடுவில் எட்டுக் கோணமான சிறந்த வேலைப்பாடுடைய பீடம், அதன்மீது பளபளவென்று பித்தளைச் செம்பினுள் தேர்ந்தடுக்கிய வண்ண மலர்களும், கொடிக் கொத்துக்களும், இரண்டு ஓரங்களில் அழுக்குப் படாத ஸோபா; இவ்வளவே. இந்தப் புனிதக் கோயிலுக்குள் எனக்குக் காலை வைக்கவே கூசியது.

வைஜி என்னை உட்காரச் சொன்னாள். அவளும் அமர்ந்தாள். ''மாமா, இதுதான் என் அறை; எப்படி இருக்கிறது?'' என்றாள்.

''பேஷ், கன்னிப் பெண்ணுக்கு ஏற்ற இடம்.''

என்னுடைய பிரசம்சையைக் கேட்டு அவளுக்கு ஆனந்தம் பொங்கியது.

''அது இருக்கட்டும். இந்த கன்யாகுமரியின் படத்தை மாட்டியிருக்கிறாயே. ஏதாவது அதில் விசேஷம் உண்டா? அவளைப் போல நீ யாரை எதிர்நோக்கி இருக்கிறாய்?'' என்றேன்.

இதற்கு அவள் பதில் எதுவும் சொல்லவில்லை. படத்தையே சற்று நேரம் நோக்கிவிட்டுத் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில் கீழே ஹாலில் உள்ள ரேடியோவைத் திருப்பி யாரோ பி.பி.சி. ஸ்டேஷனை ட்யூன் செய்துவிடவே பெரிய ஆர்கெஸ்ட்ராவின் இரைச்சல் வீடெங்கும் ஒலித்தது.

"சம்பத்து ராஸ்கலின் வேலை இது" என்றாள் வைஜி.

"கிடக்கிட்டும். குழந்தை ஏதாவது சேஷ்டை செய்ய வேண்டுமோ இல்லையோ?'' என்றேன்.

''உங்களுக்குத் தெரியாது மாமா. அவன் இப்படித்தான் யாராவது வரும்போது குறும்பு பண்ணுவது வழக்கம்'' என்றாள்.

''நீ சாயங்காலம் எங்கேயும் போவதில்¨யா?'' என்றேன்.

''சினிமா என்றால் எனக்கு விஷம். நாடகம் எப்போதாவது பார்க்கப் போவேன்..''

''என்ன.. என்ன இந்த காலத்துப் பெண் நீ... சினிமாவை வெறுக்கிறாயே! ரொம்ப அதிசயம்... எப்படித்தான் உனக்குப் பொழுது போகிறது!'' என்றேன்.

"புதுபுதுப் புத்தகங்களைப் படிப்பதில்தான். இராது போனால் ரேடியோவைத் திருப்புவேன். வீணை அல்லது கோட்டு வாத்தியமென்றால் சற்று ஆவலாகக் கேட்பேன். மீதி வேளை அசட்டு பிசட்டு என்று எதாவது கற்பனையில் வருவதை எழுத்தில் சிறைபிடிக்க முயலுவது, இவ்வளவே'' என்றாள்.

அந்த விசித்திரமான பாவையையே சற்று நேரம் கண் மைக்காமல் நோக்கினேன். ஆ! அந்த அழகிய தலைக்குள் என்ன விநோதமான எண்ணங்கள் விளையாடுகின்ற இந்தச் சிறு வயசிற்குள்! மொட்டு அலர்வதன் அறிகுறி அவள் பேச்சிலும் செய்கையிலும் நன்றாக வெளிப்பட்டது.

''மாமா ஒன்று உங்களைக் கேட்க வேண்டுமென்ற ஆசை. நீங்கள்தான் எத்தனையோ வகைப் பெண்களை வைத்துக் கதைகளை ஜோடிப்பதில் வல்லவராயிற்றே. என் வயசுப் பெண்ணை வைத்து ஒரு கதை இன்னும் ஏன் எழுதவே இல்லை? எப்போது எழுதப் பேகிறீர்கள்?''

என் வாயைத் திறக்கவிடாமல் செய்து விட்டது இந்தக் கேள்வி. நான் திகைத்துப் போய் அவளையே பார்த்த போது கதவருகே யாருடைய நிழலோ தோன்றிய மாதிரி இருந்தது. சட்டென வைஜி வெளிப்பக்கம் சென்றதும் திரும்பினாள்.

''யாரது வைஜி?" என்றேன்.

''யாருமில்லை; எதிரகத்துப் பிள்ளை'' என்றாள்.

''எதிரகத்தில் யார் இருக்கிறார்கள்?'' என்றேன்.

''யாரென்று சொல்வது? உங்களுக்குத் தெரியாதவர்கள்'' என்றாள்.

அதே சமயம் அறையினுள் சற்று உயரமும் ஒல்கிய உடலுமுள்ள அழகிய பையன் நுழைந்தான். பைஜாமாவும் நீளக்கை ஷர்ட்டும் அணிந்திருந்தாள். தலையில் சுருட்டைக் கிராப்பு. முகத்தில் மெல்லிய கீற்றாக அரும்பு மீசை. வைஜியிடம் இரண்டு புத்தகங்களைத் தந்துவிட்டுச் சரேலென்று திரும்பி என்னை வணங்கி, ''வைஜி சொன்னாள், நீங்கள்தான் 'மணியன்' என்று. உங்களுடைய இலக்கியத்தில் பித்துக் கொண்டவர்களுள் நானும் ஒருவன்'' என்று லஜ்ஜையினால் உடல் சிறிது வளைய நின்றான்.

''ரொம்ப சந்தோஷம்'' என்றேன்.

இளைஞன் வைஜியை ஒரு விதமாகப் பார்த்துவிட்டு அகன்றான். கொஞ்ச நேரம் வைஜி எதுவுமே பேசாமல் மெளனமாக இருந்தாள்.

மோனத்தைக் கலைத்து நான், ''வருகிறேன் வைஜி, அடுத்த தடவை நீ சொன்ன பிரகாரமே உன் வயசுப் பெண்ணை வைத்து ஒரு கதையைப் புனைந்து எடுத்து வருகிறேன்'' என்றேன். இடத்தை விட்டு எழுந்தேன். அவளும் எழுந்தாள். நாங்கள் இருவரும் கீழே இறங்கினோம்.

வேதந்தம் ஹாலில் சோபாவில் சாய்ந்த வண்ணம் ஆங்கிலப் பத்திரிகையொன்றைப் புரட்டிக் கொண்டிருந்தார். கண்ணைக் கூசும் எலெக்ட்ரிக் விளக்கின் ஒளி அங்கே. சலவைக்கல் சிலை மாதிரி வைஜி தந்தையின் பின்னால் போய் நின்றாள். இன்னும் அவளுக்குத் திகில் இருந்தது. என்னைப் பார்த்து 'வேண்டாம்' என்று சொல்வது போல் தான் அழகிய உதடுகளைக் குவித்தாள். நான் புரிந்து கொண்டேன். வேதாந்தம் பத்திரிகையிலிருந்து முகத்தைக் காட்டி, ''ஆனால் வருகிறாயா, பாலு? இந்தப் பக்கம் அடிக்கடி வாயேன். அம்புஜம், பாலு போகிறானாம்'' என்று குரல் கொடுத்தார்.

அம்புஜம் வந்தாள். ''ஏண்டா பாலு, சாப்பிட்டு விட்டுத்தான் போயேன்'' என்றாள்.

''இருக்கட்டும் அக்கா. இன்னொரு நாள் சாவகாசமாக வந்தால் போகிறது. நாழிகை ஆகிறது. நான் வருகிறேன்'' என்று விடைபெற்றுக் கொண்டேன்.

ஒருவாரம் நான் வெளியில் கிளம்பவே இல்லை. யாராவது சிநேகிதர்கள் வந்தாலும், 'வீட்டில் ஆள் இல்லை' என்று சொல்லிவிடும்படி என் மனைவிக்குக் கடுமையான உத்தரவு போட்டுவிட்டு, வைஜியை வைத்து ஒரு விசித்திரமான கதையைப் புனைந்தேன். ஆனால் அந்தக் கதையில் அவளுக்கும் அந்த எதிர்வீட்டுப் பையனுக்கும் நான் முடி போடவில்லை. கதையில் அவனும் முக்கியமான குணசித்திரம்.

நான் எழுதிய கதை எனக்கே பரம திருப்தியை அளித்தது. வைஜயந்திக்குக் காட்ட அதை எடுத்துச் சென்றேன். நல்ல காலம். அவளுடைய அப்பா அன்று ஊரில் இல்லை. ஏதோ வழக்கு விஷயமாகத் திருச்சிக்கு சென்றிருந்தார். வைஜயந்தியும் வீட்டில் இருந்தாள். முன் போலவே எனககு உபசரணையெல்லாம் நடந்தன. அவள் என் கையிலுள்ள காகிதச் சுருளை வாங்கிக் கொண்டு எனக்கு முன்னாலேயே இரண்டடியாக மாடிப் படியேறித் தன் அறைக்குள் சென்றாள். முதலில் தானே படிக்க வேண்டுமென்று ஆவல் இருந்ததோ என்னவோ அவளுக்கு. மறுஎண்ணம் வரவே. என்னையே அதைப் படிக்கும்படி கேட்டுக் கொண்டாள். கதையின் பெயர் 'பனி மலர்'. அவளுக்கு வெகுவாய்ப் பிடித்திருந்தது. நிதானமாகப் படித்தேன். சுமார் முப்பது பக்கங்கள். தன்மயமாகக் கேட்டு வந்தாள். நடுநடுவே சில கட்டங்கள், அவள் முகத்தில் பலவிதமான மாறுதலை எழுப்பின. பொலிவுற்ற சந்தர்ப்பங்களும் உண்டு. அவள் உள்ளத்தில் பெருங்கிளர்ச்சியை மூட்டிய இடங்களும் உண்டு. கதை முடிவடைந்ததும், அசையாமல் நிலைத்துவிட்ட அவளையே நீண்ட நேரம் நான் கவனித்தேன்.

''கதை எப்படி?'' என்றேன்.

கண்களை இரு கையாலும் மூடிக்கொண்டு விக்கி விக்கி அழுதாள் வைஜி.

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. ''உனக்கு என்ன வைஜி?'' என்றேன்.

வெகுநேரம் பொறுத்தே அவள் என் பக்கமாக முகத்தைத் திரும்பினாள். கண்களில் இரு முத்துக்கள் துடிக்க அவள் குரலில் என்ன வேதனை தெறித்தது? ''உங்களுக்கு எப்படித் தெரிந்தது என் மனசு?'' என்றாள்.

எனக்குப் பேசவே தெரியவில்லை. அவள் தன் இடத்தை விட்டுப் பெயர்ந்து என் காலடியில் வந்து உட்கார்ந்தாள்.

''மாமா, என் மனசில் உள்ளதை நான் யாரிடமும் சொல்லவில்லையே! உங்களுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது?'' என்றாள்.

சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். மீண்டும் என்னை நோக்கி, ''சொந்த அநுபவம் இராமல் இந்த விஷயத்தை யாராலும் இப்படி வர்ணிக்கவே முடியாது'' என்றாள்.

''எந்த விஷயம்?''

''அத்தகைய விசித்திரக் காதலை, எந்த யுவதியைச் சுற்றிக் கதை சுழல்கிறதோ அவள் கட்டாயம் நான் அன்று பார்த்த மாமியாக, உங்கள் சம்சாரமாக இருக்கவே முடியாது. வேறு யாரோதான். நிச்சயமாக யாரோதான் உங்கள் இளமையில் இருதயத்தைத் தொட்டு அசைத்து விட்டுச் சென்றிருக்கிறாள். அவள் யார்?'' என்றாள்.

திடுக்கிட்டுப் போனேன். என்னை எந்த மாதிரி அதிர்ச்சியும் இதுவரை அசைத்ததில்லை. இந்தப் பதினாறு வயசுப் பாவை, அறுபது வயது அநுபவசாலிபோல் என்னையே ஆராயப் புகுந்த சாமர்த்தியத்தை மெச்சவேண்டும். அத்தகைய புத்திசாலிக்கு என் சிரம் தானாகவே வணங்கியது.

த. நா. குமாரஸ்வாமி

© TamilOnline.com