கூட்டுப்புழு
கல்யாணி அவள் வீட்டு தோட்டத்தில் உள்ள கூட்டுப்புழுக்களை ரசித்துக் கொண்டு இருந்தாள். அது ஒருநாள் பட்டாம்பூச்சி ஆகிக் கூட்டை விட்டு வெளியே பறந்துவிடும்.

கணவன் ராமநாதனும், மாமியார் அகிலாண்டமும் சாப்பிட்டபின் இவள் சாப்பிட வேண்டும். அதற்கு முன் கல்யாணிக்குப் பசிக்குமோ பசிக்காதோ அது யாருக்கும் தெரியாது.

கலைவாணியே உருவெடுத்தது போன்ற உருவம்தான் கல்யாணி. பாட ஆரம்பித்தால் கலைவாணியே வந்து ரசிக்கக்கூடிய குரல். ஆனால் அந்த வீட்டில் அவள் பாட்டை ரசிக்கும் ஞானம் யாருக்கும் கிடையாது. பி.ஏ. படித்திருப்பதால் இரண்டு மகன்களுக்கும் படிப்பும், நல்ல விஷயங்களையும் போதிப்பதில் வல்லவள். கைவேலைகளில் அவளுக்கு நிகர் அவளே.

அகிலாண்டம் பெயருக்கு ஏற்றப்படி அகிலத்தை ஆளக்கூடிய திறமை மிக்கவள். ஆனால் ஆள முடிந்ததோ மருமகள் கல்யாணி ஒருத்தியையே. கல்யாணி தனக்கும் தன் மகனுக்கும் வேண்டியவைகளை கவனிப்பதற்காக வீட்டிற்குள் வந்தவள் என்பது அகிலாண்டத்தின் நினைப்பு. தனக்கு ஒரே மகன் ராமநாதன் என்பதனாலோ என்னவோ அவன் அன்பு தன்னிடம் கொஞ்சமும் குறையக்கூடாது என்பதில் மிகவும் குறியானவள். அதனால் அவர் செய்யும் பல தவறுகளையும் நியாயப்படுத்துவாள்.

ராமநாதன் அரசு அலுவலகம் ஒன்றில் வேநலை பார்ப்பவர். மேல் பதவிக்கு போக வேண்டும் அல்லது இதைவிட உயர்ந்த வேலை தேட வேண்டும் போன்ற எண்ணம் அவருக்குத் துளியும் கிடையாது. தினம் வேலைக்குப் போவது, உடன் வேலை பார்க்கும் பெண்களிடம் அசடு வழிவது, மாலை வீடு திரும்புது--இவைதான் அவருடைய தினசரி வழக்கம். ராமநாதனைப் பொறுத்தவரையில் தன் தாயை கவனித்துக் கொண்டு வயிற்றுப் பசி, உடல் பசி இரண்டையும் தீர்ப்பவள் மனைவி. அவளுக்கென்று சுயமான எண்ணங்கள் எதுவும் இருக்கக்கூடாது. அவள் தன்னைவிட சாமர்த்தியசாலி, புத்திசாலி என்று அவர் மனம் எண்ணிக்கூடப் பார்த்ததில்லை.

கணவன், மாமியாரின் பேச்சினால் கல்யாணி எந்தவித விருப்பு வெறுப்புக்கும் இடம் இல்லாமல், மனதை கல்லாக்கிக் கொண்டு இருந்தாள். அவள் மனதுக்கு அவ்வப்போது இதம் அளிப்பவள் பக்கத்து வீட்டு ரத்னாதான். பெயரும் ரத்னம், குணமும் ரத்னம். அந்த வீட்டில் கல்யாணியின் நிலைமையை நன்றாகப் புரிந்துக் கொண்டவள். இந்த நிலை மாற வேண்டுமானால் கல்யாணி வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதை அடிக்கடி வலியுறுத்தி வந்தாள் ரத்னா. இன்றும் அவள் கல்யாணியை தேடி வந்திருப்பது ஒரு வேலை வாய்ப்பு வந்திருப்பதைத் தெரிவிப்பதற்குதான்.

கல்யாணி உனக்கு ஒரு அருமையான நேரம் வந்திருக்கிறது என்றாள் ரத்னா. 'என்ன?' என்றாள் கல்யாணி. 'தனக்கும் ஒரு அருமையான நேரமா!' என்று கேட்பது போல் இருந்தது அந்த 'என்ன'.

'நான் வேலை செய்யும் பள்ளியில் டீச்சர் வேலைக்கு தேர்வு நடத்தப் போகிறார்கள். நான் உன் பெயரையும் உன் திறமைகளைப் பற்றியும் தலைமையாசிரியரிடம் சொல்லி இருக்கிறேன். உனக்கு வேலைநிச்சயம். பாட்டு, கைவேலை தவிர ஏதாவது ஒரு பாடமும் நீ குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க முடியும். மூவாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளம் கொடுப்பார்கள். அது உனக்கு மிகவும் உதவியாக இருக்கும். உன் மூத்த பிள்ளை ஒன்பதாம் வகுப்பு வந்துவிட்டான். அவனை மேல்படிப்புக்குச் சேர்க்கும் போது நிறையப் பணம் தேவையாக இருக்கும் என்பது உனக்கும் தெரியும். இரண்டு நாளில் தேர்வு நடக்கப் போகிறது. நீ எப்படியாவது வேலைக்குக் கிளம்ப முயற்சி செய். அந்தப் பணம் உன் குடும்பத்துக்கு உதவும். வெளியுலக வாழ்க்கை உன் மனதுக்கு ஆறுதலைத் தரும். துணிந்து கிளம்பு. நான் வரேன்' என்று படபடவென் பொறிந்துவிட்டு ரத்னா போய்விட்டாள்.

கல்லான கல்யாணியின் மனமும் யோசிக்க ஆரம்பித்தது. இன்று எப்படியும் கணவனிடம் பேசி முடிவு எடுக்க வேண்டும் என்று தீர்மானித்தாள். இரவு சாப்பாடு முடிந்ததும் கணவனிடம் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தாள்.

'வரவர மாதச் செலவுகள் கூடிக்கொண்டே போகிறது...'

'ம்ம். கூடிக்கொண்டுதான் போகிறது. என்ன செய்வது?' ராமநாதன் பதில் கூறினான்.

இதுதான் சமயம் என்று எண்ணிய கல்யாணி, 'நான் வேலைக்குப் போகலாம்னு நினைக்கிறேன்...' என்று வேகமாக சொன்னாள்.

'உனக்கு வேலை கொடுக்க யார் காத்திருக்காங்க...!' கல்யாணியை மட்டம் தட்டிவிட்டால் தான் மிகவும் புத்திசாலி ஆகிவிடுவதாக ராமநாதனின் நினைப்பு.

'ரத்னா வேலை செய்யும் பள்ளிக்கூடத்தில் டீச்சர் வேலைக்கு ஆள் எடுக்கிறாங்களாம். நாளைக்கு அதற்கான தேர்வாம். முதலில் மூவாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளமாம். நானும் போகலாம்னு நினைக்கிறேன்' என்று சொன்னபடியே கல்யாணி கணவனின் முகத்தை உற்று நோக்கினாள்.

ராமநாதனின் வக்கிர புத்தி உடனே பேசியது. 'ம்ம்... நீ போனதும் வேலையைத் தூக்கிக் கொடுத்துவிடப் போகிறார்களாக்கும். சரி போய் வா. பார்க்கலாம்' என்றான்.

கணவன் 'போய் வா' என்று சொன்னதிலேயே கல்யாணிக்கு வேலை கிடைத்த மாதிரி சந்தோஷம். ஆனால் ராமநாதனுக்கோ மனதில் பல யோசனைகள்.

கல்யாணிக்கு வேலை கிடைத்துவிடுமோ? கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைவிட மேலே உயர்ந்து விடுவாளோ? பிறகு தன்னை மதிக்க மாட்டாளோ? வேலைக்குப் போனாலும் அவளை எப்படியெல்லாம் அடக்கி வைக்க வேண்டும். இப்படி பலப்பல எண்ணங்கள் தோன்றினாலும் பண வரவு செலவுகளை சமாளிக்க செளகரியமாக இருக்கும் என்ற நினைப்பு மேலோங்கி நின்றது.

மறுநாள் காலை கல்யாணி அவசர அவசரமாக வேலைகள் முடித்து விட்டு தேர்வுக்கு கிளம்பி போய்விட்டாள்.

அகிலாண்டம் பிள்ளைக்கு சாப்பாடு பரிமாறிக்கொண்டே மருமகள் வேலைக்குப் போவதை தடுக்கப் பல பிரயத்தனங்கள் செய்து பார்த்தாள். ஆனால் ராமநாதனோ வேலை கிடைத்தால் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு அலுவலகம் போய்விட்டான்.

2 மணி நேரம் கழித்து வேலை கிடைத்த சந்தோஷத்தோடு கல்யாணி வீடு திரும்பினாள்.

அகிலாண்டம் அவளிடம் எதுவும் பேசாமல் மூஞ்சியை 'உம்' என்று வைத்துக்கொண்டிருந்தார். கல்யாணிக்கு இது ஒன்றும் புதிதல்ல என்பதால் தன்னுடைய வேலகளைச் செய்துகொண்டு இருந்தாள்.

மறுநாள் விடியற் காலையிலேயே கல்யாணி எழுந்துவிட்டாள். சமையல் தவிர மற்ற வேலைகளையும் முடித்துவிட்டு மகன்கள், கணவருக்கு வேண்டிய மதிய உணவையும் டப்பாக்களில் போட்டு வைத்துவிட்டுக் கிளம்பத் தயராகிக் கொண்டு இருந்தாள்.

அகிலாண்டத்துக்கு அபரிமிதமான கோபம். தனக்கு எடுபிடி வேலைகள் செய்ய மருமகள் வீட்டில் இருக்க மாட்டாள் என்பது ஒரு பக்கம். தான் கூறிய எதையுமே தட்டாத மகன் தன்னை மீறி மனைவிக்குச் சாதகமாக செயல்படுகிறான். இனி மருமகள் தனக்கு அடங்கமாட்டாள் என்னும் ஆத்திரத்தோடு குளிக்கச் சென்றாள்.

'டமார்' என்ற சத்தத்தோடு 'ராமநாதா..!' என்ற அலறலும் கேட்டது.

எல்லோரும் குளியல் அறைக்கு ஓடினார்கள். அகிலாண்டம் வழக்கி விழுந்து எழுந்திருக்க முடியாமல் கத்திக் கொண்டு இருந்தாள். வழக்கம்போல் பல பரிசோதனைகளுக்குப் பிறகு, தொடை எலும்பு முறிந்துவிட்டது தெரிந்தது. எழுந்து நடக்க ஏழு, எட்டு மாதம் ஆகலாம். அதுவரை படுக்கையில் வைத்துதான் எல்லாம் என்று டாக்டர் சொல்லிவிட்டார். கால் உடைந்தாலும் கல்யாணி வேலைக்குப் போவதை தடுத்துவிட்ட சந்தோஷம் அகிலாண்டத்துக்கு.

கல்யாணி தோட்டத்தில் சென்று பார்த்தாள்.

கூட்டை உடைத்துக் கொண்டு பட்டாம்பூச்சிகள் பறந்துவிட்டன. ஆனால் கல்யாணி கூட்டுப்புழுவாகவே வாழ்வதைத்தான் ஆண்டவனே விரும்புகிறார் போலும்...

உஷா

© TamilOnline.com