ஏப்ரல் 15, 2007 அன்று அட்லாண்டா தமிழ்சங்கம் (GATS) புத்தாண்டுச் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. மெடோ க்ரீக் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி புத்தாண்டில் 'வெற்றிக் கொடி கட்ட' அனைவரையும் வாழ்த்தும் வகையில் அமைந்திருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. கவிதை, நகைச்சுவை, இலக்கியக் குறிப்புகள் என்று பல்சுவையுடன் செல்வி ஐஸ்வர்யா இதனைத் தூய தமிழில் தொகுத்து வழங்கினார். மூன்று சிறார்கள் நாட்டுப்புறப்பாடல் இசைத்தனர். தமிழ்க் கவிதைகள் பலவற்றைக் கூறினர். தொடர்ந்து, குட்டி பாரதிகள் மேடையெங்கும் 'இனி ஒரு விதி செய்வோம்' என்று பறைசாற்றினார். மடிசார்ப் புடவைகளில் பட்டு மாமிகளும், பஞ்சகச்சத்தில் கிட்டு மாமாக்களும் கலவைப் பாடல்களுக்கு அமர்க்களமாக ஆடினர். அலபாமாவிலிருந்து வந்த நண்பர் கிருஷ்ணகுமார் வழங்கிய நவரச மிமிக்ரி அனைவரையும் சிரிப்புக் கடலில் ஆழ்த்தியது. அடுத்து வந்த பாரதியார் பாடல்கள் அருமையான இசைவிருந்து.
புத்தாண்டு நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தது 'வள்ளி திருமணம்' நாட்டிய நாடகம். இந்தப் புராணக் கதையைச் சிறப்பாகச் சித்தரித்தனர். அருமையான ஒப்பனை, அரங்க அமைப்பு ஆகியவை அனைவரையும் மகிழ்வித்தது. சங்கீத ஸ்வரங்கள் நிகழ்ச்சியின் நடனம் தொடர்ந்தது. 'சாமி' படத்தின் பாடலுக்கு தத்ரூபமாக நடனம் அமைத்து, பார்வையாளர்களையும் ஆட வைத்தனர் நம்ம ஊரு 'ஆருச்சாமிகள்'.
இன்றைய தலைமுறையினரின் மாறுபட்ட சிந்தனைகளையும் அளவில்லாத் திறமையையும் 'பாஞ்சாலி சபதம்' நாடகம் வெளிப்படுத்தியது. கிருஷ்ண லீலா மற்றும் சரஸ்வதி ஸ்துதி பரதநாட்டிய நடனங்கள் மிக அருமையாக அமைந்திருந்தன. தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. |