காலமகள் பெற்றெடுத்த கவிமகன் கவியரசர் கண்ணதாசன் ஒரு மாபெரும் சகாப்தம்
இந்த நூற்றாண்டு கண்ட தமிழ்க்கவிஞர்களில் தலைசிறந்த கவிஞர்கள் மூவர்...

மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், கவியரசர் கண்ணதாசன்!

இந்தப் புகழ்வரிசையில் மூன்றாவதாகத் தோன்றிய கண்ணதாசன் இன்றளவும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் நிலைத்த புகழுடன் விளங்கிக் கொண்டிருக்கிறார். முன்னவர்கள் இருவரும் தங்களது கவிதைகள் மூலமாகப் படித்தவர்களிடமும் அறிஞர்களிடமும் சென்று சேர்ந்தார்கள். ஆனால் கவியரசர் கண்ணதாசனோ படிக்காத பாமரர்களிடமும் சென்று சேர்ந்தார்.

பொதுவாக திரைப்படப் பாடல்கள் காலத்தால் வென்று நிலைத்து நிற்கக் கூடிய சக்தி உள்ளவை அல்ல. புதிய பாடல்கள் பிறக்கப் பிறக்கப் பழைய பாடல்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மறக்கப்படும். ஆனால் கவியரசரின் பாடல்கள் இன்றளவும் நிலைத்து நிற்பதற்குக் காரணம் என்ன? அனுபவமும், கவிநயமும் தான்! தான் வாழ்க்கையில் அனுபவித்து உணர்ந்த சம்பவங்களை, காதல், எமாற்றத்தை, வேதனையை, சோதனயை, பக்தியை அப்படியே பாட்டாக வடித்தார். அது அவரது வாழ்க்கை மட்டுமல்ல. ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையாகவும் இருந்ததால் தமிழ் மக்களின் மனதில் சட்டென்று பதிந்து விட்டது. காதலையும், தத்துவத்தையும் கண்ணதாசன் போல் சொல்ல அவரே மீண்டும் பிறந்து வந்தால் தான் உண்டு.

தனது மொழி ஆளுமையினாலும், கற்பனை நயத்தாலும், கருத்துச் செழுமையாலும், எளிய நடையினாலும் தனது இசை பாடல்களை காலத்தால் அழியாத காவியங்களாக்கிவிட்டார். கவியரசர் மறையவில்லை. அவரது படைப்புகளுக்குள் நிரந்தரமாகிவிட்டார் அவருடைய வரிகளிலேயே அவரைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் நான் நிரந்தரமானவன் அழிவதில்லை! - எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!

சிறுகூடற்பட்டியில் 24 ஜூன் 1927 ஆம் வருடம் பிறந்த முத்தயா அமெரிக்காவில் சிகாகோ மருத்துவமனயில் 17 அக்டோ பர் 1981ஆம் வருடம் தனது 54 ஆவது வயதில் காலமானார். கவியரசரின் 80ஆவது வருடத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு விழா எடுக்க விழைந்தோம். டல்லாஸ் நகரத்தில் உள்ள அவரது ரசிகர்கள் பலரும் இணைந்து கண்ணதாசன் கலைமன்றம் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளோம். தமிழ்நாடு அறக் கட்டளையின் ஆதரவோடு கண்ணதாசன் விழா ஜனவரி 06, 2007 அன்று டல்லாஸ் நகரத்தில் நடைபெறும். இவ்விழாவிற்கு இந்தியாவிலும், அமெரிக்காவிலும், உள்ள பல கலைஞர் களையும், பேச்சாளர்களையும் வரவழைத்து பல தரமான கலை நிகழ்ச்சிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும் அமெரிக்காவில் தமிழ் உணர்வையும், ஆர்வத்தையும் வளர்க்கும் வகையில் பெரியவர்களுக்கும், சிறுவர், சிறுமியருக்கும் கவிதைப் போட்டியும், சிறுகதைப் போட்டியும் நடத்த எற்பாடு செய்துள்ளோம். அமெரிக்க வாழ் தமிழர்கள் இப்போட்டியில் ஆவலுடன் பங்கேற்பார்கள் என எதிர் பார்க்கின்றோம்.

அமெரிக்காவில் கவியரசருக்கு விழா எடுப்பது இதுவே முதல் முறை. எங்களின் இந்த முயற்சிக்கு தமிழ்ச் சமூகம் பேராதரவு அளிக்கும் என்று நம்புகிறோம். மேலும் விவரங்களுக்கு www.kannadasanvizhausa.com என்ற வலைத் தளத்தை அணுகவும்.

கீதா அருணாச்சலம்

© TamilOnline.com