ஜூன் 2007: வாசகர் கடிதம்
'தென்றல்' மே இதழில் பிரிட்டானியா தகவல் களஞ்சிய வெளியீட்டில் தென்றல் ஆசிரியரின் பங்கும் சாதனையும் குறித்து வெளியிடப்பட்டிருந்த செய்தியைப் பார்த்தேன். பாராட்டுக்கள். சுப்புடு குறித்து கேடிஸ்ரீ அவர்களின் கட்டுரை நன்றாக இருந்தது. சுப்புடு எழுதிப் பிரசுரமான அனைத்து விமர்சனங்களும் தொகுக்கப்பட்டு 'சுப்புடு தர்பார்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. நகைச்சுவை மிக்கதாகவும், இன்னார் இனியார் என்ற பாரபட்சமின்றி பட்டென்று போட்டுத் தேங்காயை உடைப்பது போலவும், தலையில் நறுக்கென்று ஓங்கிக் குட்டுவது போலவும் அவருடைய விமரிசனங்கள் இருக்கும். நான்கு தலைமுறையினரின் கச்சேரிகள் குறித்த இவருடைய விமரிசனங்களை இதில் காணலாம்.

அன்னையர் தினம் கொண்டாடும் மே மாத இதழில் உமையாள் முத்து அவர்களைப் பேட்டி கண்டு வெளியிட்டிருப்பதும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. தமிழ் அல்லாத வேறு துறையைச் சார்ந்தவர்களும் தமிழில் ஆர்வமும் உழைப்பும் திறமையும் தன்னம்பிக்கையும் இருந்தால் பேரும் புகழும் பெறலாம் என்பதற்கு இவர் நல்லதொரு முன்மாதிரி. அவருக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
டாக்டர். அலர்மேலு ரிஷி

*****

'தென்றல்' மே இதழ் பாராட்டுக்கு உரியதாக அமைந்துள்ளது. அதிலும் உமையாள் முத்து, 'பூமாதேவி' சிறந்தவையாகத் தோன்றுகின்றன. 'ஏற்பாடு எல்லாம் முடிந்தது' என்ற தலைப்பில் வெளியான விஷயங்கள் வாழ்க்கையில் நடக்கக் கூடியதாக அமைந்துள்ளன. புராதனக் கோவில்கள் பற்றித் திரும்பவும் எழுத ஆரம்பித்திருப்பதைக் காண மகிழ்ச்சி.

மொத்தத்தில் 'தென்றல்' ஒரு தரமான ஏடாக இந்திய அமெரிக்கர்களுக்குச் சேவை செய்வது ஒரு பெரிய சாதனை.
அட்லாண்டா ராஜன்

*****


நான் தென்றலை மிக ஆர்வத்துடன் வாசிக்கிறேன். நீங்கள் வெளியிடும் தமிழ் எழுத்தாளர்கள், அறிஞர்கள் ஆகியோருடனான நேர்காணல்கள் மிக சுவையாகவும் கருத்துப் பொதிந்தவையாகவும் உள்ளன. சித்ரா வைத்தீஸ்வரனின் மிகத் தேர்ச்சியான அறிவுரைகள் எல்லோருக்கும் வாழ்க்கையில் நல்ல பாடங்களாக அமைகின்றன. இங்குள்ளோரும் வந்திருப்போரும் தென்றலைத் தேடிப் போகிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை.

அமெரிக்கா முழுவதிலும் தென்றல் கிடைக்குமாறு ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்.
ஜோஸப் பென்னெட், மவுன்டன் வியூ, கலி.


*****

'நடக்க இயலாத நிலையிலும்கூட இப்படியெல்லாம் ஒரு மாமனிதரால் சாதிக்க முடியுமா?' என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன். ஆயிக்குடி ராமகிருஷ்ணன் அவர்கள் எங்களைப் போன்ற இளந்தலைமுறையினருக்கு ஒரு கலங்கரை விளக்கம். இந்த நேர்காணலைப் படிக்க நான் பாக்கியம் செய்தவன். அனைத்துப் பாராட்டுக்களும் நன்றியும் தென்றலையே சேரும். சொல்லின் செல்வி உமையாள் முத்து அவர்களின் நேர்காணல் மிக அற்புதமாக இருந்தது.

அன்புள்ள சிநேகிதியே படித்தேன். பத்துப் பதினைந்து வயதைத் தொட்டவுடன் தன் தாயைத் தனக்குப் போட்டியாக, தனது பாய்ஃபிரண்டைப் பங்கு போட்டுக்கொண்டு விடுவாளோ என்ற தகாத எண்ணம் உதிக்கக்கூடிய கலாசாரத்தில் வளர்ந்துவிட்ட அந்தத் தாய்க்கு நம் கலாசாரம் தெரிய வாய்ப்பில்லைதான். தாய்மையின் பாசத்துக்கு நிகராக, இன்னும் ஒரு படி மேலாகவே பாட்டியின் பாசம் இருக்கும். தாயை வெறுத்த வாரிசுகள் தாத்தா பாட்டியிடம் வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எத்தனையோ உண்மைகள் நமக்குத் தெரியும். அந்தப் பிஞ்சுக் குழந்தைகளையும் இந்தக் கலாசாரம் பற்றிக் கொள்ளாமல் நமது உயர்ந்த கலாசாரம், பாசப்பிணைப்பைப் பற்றிக்கொள்ளட்டும். அந்தத் தாய் வருத்தப்படாமல் குறைந்தபட்சம் மகனாவது ஆறுதலாக இருப்பது, சற்று மனதுக்கு இதமாக உள்ளது.
சென்னை-நவின், இர்வைன், கலி.

© TamilOnline.com