கழகங்களே காரணம்
நான் தி.மு.க.வை மட்டும் விமர்சிக்கவில்லை. அ.தி.மு.கவையும் சேர்த்துதான் விமர்சிக்கிறேன். இரண்டு கழகங்களுமே நதிநீர் பிரச்னைகளில் கோட்டை விட்டிருக்கின்றன. கர்நாடகா அரசு தன் மாநிலத்தில் காவிரியின் குறுக்கே இதுவரை 88 அணைகளைக் கட்டியிருக்கிறது. அவை நிரம்பி மிச்சமிருக்கும் தண்ணீர்தான் நமக்கும் கிடைக்கும். சொல்லப் போனால், அவர்களின் அணைகளைப் பாதுகாக்க தமிழகத்தை ஒரு வடிகாலாகத் தான் கர்நாடகா பாவித்து வருகிறது. இந்த நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டதற்கு, இரண்டு கழகங்களும்தான் காரணம்.

டாக்டர் ராமதாஸ், பா.ம.க. நிறுவனர்.

*****


நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். அண்டை மாநிலங்களோடு ஏற்படும் பிரச்னைகளைப் பேச்சுவார்த்தை மூலமும், சட்டரீதியாகவும் தான் தீர்த்துக் கொள்ள முடியுமே தவிர, சிலர் சொல்வது போல அரசு இன்னொரு மாநிலத்தின் மீது படையெடுப்பு நடத்த முடியாது.

துரைமுருகன், தமிழக அமைச்சர்.

*****


சமூகத்தில் நடக்கிற எல்லா தவறுகளுக்கும் மக்களோட முட்டாள்தனம் தான் மூலகாரணம். அறியாமை மனித இனத்தின் அழகு. முட்டாள்தனம் அசிங்கம்.

நடிகர் பிரகாஷ்ராஜ்

*****


1508ஆம் ஆண்டில், கிருஷ்ண தேவராயர், தனது சாம்ராஜ்யம் எங்கிருந்து எதுவரை இருந்தது என்பதை ' பேலூரில் இருந்து ராமர் பாலம் வரையிலும்' என்று கல்வெட்டாக நிறுவி இருக்கிறார். எனவே, ராமர் பாலம் கற்பனை அல்ல. ஹாமில்டன் என்ற பிரிட்டிஷ்காரர் ஒரு பயண நூலை எழுதி இருக்கிறார். 1744-ல் இலங்கை, ஜாவா, இந்தோனேஷியா பற்றி எழுதும் போது இலங்கைக்கு, தான் பாலத்தில் நடந்து சென்றதாக எழுதி இருக்கிறார். 1903-ல் மெட்ராஸ் பிரஸிடென்ஸி அட்மினிஸ்ட்டிவ் ரிப்போர்ட் மூன்று தொகுப்புகள் கொண்ட தகவல் திரட்டு, மெக்லின் என்பவரால் எழுதப்பட்டு இருக்கிறது. இதில் ஆடம் பாலத்தைப் பற்றி விளக்கும் போது, 'இது ராமர்பாலம் என்று அழைக்கப்படுகிறது' என்று குறிப்பிட்டிருக்கிறார். 1840 வரை இந்தப் பாலம் இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் பயணப் பாலமாக இருந்தது. அதன் பிறகு வந்த புயலால் இந்த பாலத்தில் நடந்து செல்வது நின்று விட்டது என பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது பிரிட்டிஷ் அரசு ஆவணம்.

டாக்டர் கல்யாணராமன், நதிநீர் ஆராய்ச்சியாளர்

*****


சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான புராணக் கதைகளுக்கு நான் பதில் கூறத் தேவையில்லை. அவ்வாறு பதிலுக்கு பதில் கூறிக் கொண்டிருந்தால் நான் அமைச்சர் வேலையை ஒழுங்காகப் பார்க்க முடியாது.

டி.ஆர். பாலு, மத்திய அமைச்சர்

கேடிஸ்ரீ, அரவிந்த்

© TamilOnline.com