2004ம் ஆண்டு, இசையார்வமுள்ள குழந்தைகளுக்கு ஊக்கம் தர வேண்டும் என்னும் ஆவலில் சிகாகோ தியாகராஜ உற்சவத்தைத் துவங்கினோம். அது இன்று தொடர்ந்து, மேலும் மெருகு பெற்றுத் தழைக்கிறது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறோம். இதில் விசேஷம் என்ன வென்றால், நடுவரையே வைத்து மறுநாள் அல்லது அதே நாள் கச்சேரிக்கு ஏற்பாடு செய்கிறோம். இதனால் பலருக்கு பெரிய வித்வான்களின் இசைத் திறமையையும் உணர வாய்ப்பு ஏற்படுகிறது.
போட்டியின் ஆரம்ப காலங்களில், எந்தப் பாடல்கள், கிருதிகள் ஏற்றது, எத்தனை நேரம் பாட அனுமதிக்க வேண்டும், இசைப் போட்டி யைச் செவ்வனே நடத்தும் வழிமுறைகள் என்ன என்ற பல கேள்விகள் எழுந்தன. குழந்தைகள் பலவிதம். பாலபாடம் அளவே கற்ற குழந்தைகள் பலருண்டு. சில குழந்தைகள் இந்தியாவிலேயே தங்கி ஓரிரு வருஷம் நல்ல வித்வான்களிடம் பயின்று வந்துள்ளனர். சிலர் சிகாகோவில் உள்ள இசையாசிரியர்களிடம் பயின்றவர்கள். எல்லோரையும் ஊக்குவிக்கும் விதமாக, இசைத் தேர்ச்சியைப் பிரதான குறிக்கோளாகக் கொண்டோம். மேலும், யாருடைய பாடல்கள், கிருதிகள், எந்த மொழிக் க்ருதி என்ற ஆய்வையெல்லாம் விடுத்துத் தியாகராஜ கிருதிகளை அடிப்படையாகக் கொண்டு போட்டி நடத்துவது என்று முடிவெடுத்தோம். ஏனென்றால், தியாகராஜ க்ருதியைக் கற்றவர்கள் பலர் உள்ளனர். உள்ளூர் இசையாசிரியர்களும் இதில் சிறந்த தேர்ச்சி பெற்றிருப்பர்.
தனிப் பாடலா, பக்கவாத்தியத்துடனா போன்ற சர்ச்சைகளைத் தவிர்த்து, வெறும் கிருதியோடு மட்டும் பாடுவது, அல்லது வாத்தியமானால் வாத்தியத்தில் (வேணு, வீணை, வயலின், கிதார், சாக்ஸ்போன், கீபோர்டு) இசைப்பது என்று முடிவெடுத்தோம்.
நடுவரைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனம் செலுத்தினோம். சிறந்த வித்வானாக இருக்க வேண்டும். பொறுமையுடனும், பொறுப்புடனும் குழந்தைகளின் பாடல்களைப் பரிசீலனை செய்து பகுதியாகப் பிரித்து மதிப்பெண் தர வேண்டும். உதாரணமாக, சுருதி சுத்தம், ராக சுத்தம், லய, கிருதி உச்சரிப்பு, காலப்ராமயணம் என எத்தனையோ பிரிவுகள். இவற்றை யெல்லாம் 1-10 என்ற அளவில் மதிப்பிட்டு மொத்த மதிப்பெண் தரவேண்டும்.
முதல் வருடம் சங்கீதவித்வான் (ஹைதராபாத் சகோதரர்கள்) சேஷாச்சார் தலைமையேற்று, வெற்றி பெற்றவர்களைத் தேர்வு செய்தார். வாய்ப்பாட்டு, மிருதங்க வாசிப்பு போன்றவற்றில் 30 பேரைத் தேர்ந்தெடுத்தார். தேர்ந்தெடுக்கப் பட்ட 30 பேரையும் நேர் இசைப் போட்டிக்கு (Live competition) அழைத்தோம். கலைமாமணி திரு. சேஷகோபாலன் அவர்களின் சீடரான திரு. மதுரை சுந்தர் அவர்கள் நடுவராக வருகை தந்து குழந்தைகளை ஊக்குவித்தார்.
போன வருடம் நடைபெற்ற (2005) இசைப் போட்டிக்குத் திரு. டி.என். பாலா, திரு. மதுரை சுந்தர் என இரு நடுவர் குழு அமைந்தது. பல குழந்தைகள் டெட்ராய்ட், மில்வாக்கி, இண்டியானா போன்ற மாநிலங்களிலிருந்து வந்து பங்கேற்றனர்.
இங்கு வென்ற குழந்தைகள் அதன்பின் க்ளீவ் லேண்ட் ஆராதனை, டெட்ராய்ட் ஆராதனை போன்ற போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றனர். மிகுந்த இசையார்வம் உள்ள ஒரு சிறுவன் கலிஃபோர்னியாவிலிருந்து வந்து ஸுரபந்துவராளி ராக ஆலாபனை செய்து யாவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினான். பால் மணம் மாறாப் பச்சிளம் குழந்தைகள் தேனினும் இனிய குரலில் பாடுவதைக் கேட்கும்போது ஏற்படும் இன்பம் எழுத்தில் வடிக்க முடியாது.
மீனாட்சி கணேசன் அறக்கட்டளை குழந்தை களுக்கு முதல் பரிசு $250, இரண்டாம் பரிசு $100 என்று பணமும், மதிப்பீடுகளும் கொடுத்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினர்.
சென்ற வருடங்கள் போலவே இந்த வருடமும் பங்கேற்றவர்கள் ஏராளம்.
இந்த வருடத்திய முக்கிய நடுவர் திருமதி சுதா ரகுநாதன். மற்ற நடுவர்கள், திரு. பாலக்காடு ராம்பிரசாத் (வாய்ப்பாட்டு), திரு. ராகவேந்திர ராவ் (வயலின்), திரு. ஸ்கந்த சுப்ரமணியம் (மிருதங்கம்), திரு. ராமன் (மோர்சிங்) என்று நான்கு நடுவர் குழு அமைந்தது.
குழந்தைகள் சுதா ரகுநாதனிடம் பரிசு பெற்றபோது அவர்களும், அவர்கள் பெற்றோர்களும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர். இது பற்றிய விவரங்களை எங்கள் tyagaraja-chicago.org எனும் இணையத்தில் காணலாம்.
பங்கேற்ற குடும்பத்தினருக்கும், மாணவர் களுக்கும் மதிய அறுசுவையுண்டி வழங்கப் பட்டது. தரும சிந்தனையும் இசையார்வமும் கொண்ட பலர் இப்போட்டியையும், தியாகராஜ உற்சவத்தையும் மேலும் சிறக்க முன் வந்த வண்ணம் இருக்கின்றனர். இசைப்போட்டிக்கு முன்பதிவு கட்டணம் கிடையாது. குழந்தைகளின் ஆர்வத்திற்கு வேண்டிய உதவிகளைச் செய்து, செலவை ஏற்றுக் கொண்டு சிறந்த சேவை செய்கிறது, மீனாட்சி கணேசன் நிறுவனம்.
பேராசிரியர் T.E. ராகவன் |