கராஜ் சேல்
மணக்க மணக்க இரண்டு காபிக் கோப்பைகளுடன் தோழி கல்பனா என்னருகில் வந்து அமர்ந்தாள்.

அவள் காபியில் 'சீனி சரியா இருக்கா? சூடு போதுமா?' என்றாள்.

'எல்லாம் சரியாயிருக்கு. நாலு வாரமா வீக் எண்ட் நாட்களில் எங்க போனே? ஃபோன்ல கூடப் பிடிக்க முடியலை!' என்றேன்.

'இங்க வா' என்று கார் நிறுத்துமிடத்துக்கு அழைத்துப் போனாள். அங்கிருந்த அலமாரி ஒன்றைத் திறந்து காட்டினாள்.

அதில் நிறையச் சாமான்கள். எல்லா வற்றிலுமே விலைச் சீட்டு இருந்தது. அப்படி நான்கு அலமாரிகளில் இருந்தது.

'இதெல்லாம் என்ன? என்ன செய்ய போகிறாய்? நீதான் சாமான்களே வாங்கமாட்டாய். எப்படி இவ்வளவு வாங்கியிருக்கிறாய்?' என்றேன்.

'எப்போதும் போல இந்த வருடமும் என் தம்பி குழந்தைகள் வரப் போகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு வருடமும் இங்கே பக்கத்து வீடுகளில் நடக்கும் கராஜ் சேலைப் பார்த்து நம் வீட்டிலும் வைக்கணும் என்பார்கள். நானும் சரி, சரி என்பேன். ஆனால் வைப்பதில்லை. இந்த வருடம் அங்கிருந்து போன்லேயே சொல்லிவிட்டார்கள். கட்டாயம் கராஜ் சேல் வைக்கணும் என்று. போன நாலு வாரமாக சனி, ஞாயிறுகளில் அலைந்து திரிந்து கராஜ் சேலுக்கான பொருட்கள் வாங்கி வந்துவிட்டேன். விலை அதிலேயே எழுதியிருக்கறதால் விலை எழுத வேண்டிய வேலையும் எனக்கு மிச்சம். குழந்தைகளுக்கும் வாரக் கடைசியில நன்கு நேரம் போகும். போன் பண்ணு கிறேன். நீயும் உன் ஃப்ரண்ட்ஸ் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோரையும் கூட்டிக் கொண்டு வந்து, பிடிக்கிறதோ இல்லை யோ, பொருட்களை வாங்கி என்னைக் காப்பாற்று' என்று கல்பனா வேண்டிக் கொண்டாள்.

'கட்டாயம் வருகிறேன், வீணாகக் கவலைப்படாதே' என்று கூறிய நான் 'நல்ல கராஜ் சேல்!' என்று நினைத்துக் கொண்டேன்.

சரோஜா மனோஹர்

© TamilOnline.com