இசைமாமேதை, கலைமாமணி எல். வைத்யநாதன் (65) மே 19, 2007 அன்று மாரடைப்பால் சென்னையில் காலமானார்.
1942ஆம் ஆண்டில், யாழ்ப்பாணத்தில், பழம்பெரும் இசைக்குடும்பத்தைச் சேர்ந்த சீதாலக்ஷ்மி-லக்ஷ்மிநாராயணா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த எல்.வைத்யநாதனின் ஆரம்ப காலம் இலங்கையிலேயே கழிந்தது. தந்தையிடமிருந்து இசை நுணுக்கங்களை திறம்படக் கற்றுத் தேர்ந்த எல்.வி, பின் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்தார். பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஜி.கே. வெங்கடேஷுடன் இணைந்து பணியாற்றிய எல். வைத்யநாதன், பின் தனியாகப் பல திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.
அவருடைய முதல் படம் 'வாழ்த்துக்கள்' என்ற போதும், அவரது தனித்த இசையில் வெளிவந்த 'ஏழாவது மனிதன்' தான் அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அந்தப் படத்தில் மகாகவி பாரதியின் பாடல்களுக்கு வித்தியாசமாக இசை அமைத்திருந்தார். பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 150 படங்களுக்கும் மேல் இசை அமைத்தார். அவற்றில் கமல்ஹாசனின் பேசாப் படமான 'பேசும்படம்' குறிப்பிடத் தகுந்தது. இசையை ஒரு பின்னணிக் கதாபாத்திரமாகவே அதில் வைத்யநாதன் உலவ விட்டிருந்தார். சிவகுமார் நடித்த 'மறுபக்கம்', பாலுமகேந்திராவின் 'சந்தியாராகம்' போன்ற படங்களின் இசையும் குறிப்பிடத் தகுந்தவை. திரைப்படங்களுக்கு மட்டுமல்லாது ஆர்.கே. நாராயணனின் 'மால்குடி டேஸ்' உட்பட்ட தொலைக்காட்சித் தொடர்களுக்கும் இசை அமைத்துள்ளார் எல். வைத்யநாதன்.
தமிழக அரசின் 'கலைமாமணி', கர்நாடக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது போன்றவை அவர் பெற்ற விருதுகளுள் குறிப்பிடத் தகுந்தவை. அவருடைய சகோதரர்களான 'வயலின் மேதை' எல். சுப்ரமண்யமும், 'இசை மேதை' எல். சங்கரும் அகில உலகப் புகழ் பெற்றவர்கள். மேற்கத்திய இசையிலும் அளவற்ற ஆர்வமும் ஞானமும் கொண்டிருந்த எல்.வி., பல இசைக் கோவைகளை ஆல்பங்களாகத் தொகுத்து வெளியிட்டார். அவற்றுள் முத்துசாமி தீக்ஷிதரின் பாடல்களை அடிப்படையாகக் கொண்ட 'பஞ்சபூதங்கள்' புகழ் பெற்றதாகும்.
எல். வைத்யநாதன், ஹார்மோனியம், கீ-போர்டு என்று இசைக் கருவிகளை உபயோகிக்காமல், மனத்திலேயே மெட்டுப் போட்டு, தனித்தனியே ஒவ்வொன்றையும் மனத்துள்ளே இசைத்துப் பார்த்து அதனை ஒலிக்கோவையாக்கும் அளவுக்குத் திறமை படைத்தவர். இசை மாமேதை எல். வைத்யநாதனின் மறைவு, இசைத் துறைக்கு ஒரு முக்கியமான இழப்புத் தான்.
அரவிந்த் சுவாமிநாதன் |