நகுலன்
படைப்பாளி இறக்கும் வரை இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் மக்கள் மனதில் இருக்க முடியும்' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்த நகுலன் (டி.கே. துரைசாமி) மே 17, 2007 அன்று திருவனந்தபுரத்தில் காலமானார். அவருக்கு வயது எண்பத்து நான்கு.

1922-ல் கும்பகோணத்தில் பிறந்த நகுலன் தனது பதினைந்தாவது வயதில் தனது தந்தை ஊரான திருவனந்தபுரத்துக்குப் புலம் பெயர்ந்தார். இறுதிவரை அங்கேயே அவர் வசித்து வந்தார். மார் இவாலஸ் கல்லூரியில் ஆங்கிலப் பேராசியராகப் பணி புரிந்து வந்த நகுலன், திருமணமே செய்து கொள்ளவில்லை. தமிழ்மீது கொண்ட அளவற்ற பற்றால் கவிதை, கதைகள் புனைய ஆரம்பித்த நகுலனின் வீச்சு இயல்பானது. அதே சமயம் பரந்துபட்ட அதிர்வையும் அவரது படைப்புகள் தோற்றுவித்தது. குறிப்பாக நனவோடை முறையில் புனையப்பட்ட அவரது எழுத்துக்கள் சற்று மாறுபட்ட வரையறையைக் கொண்டவையாகத் தான் இருந்தது.

க.நா.சு., சி.சு. செல்லப்பா போன்ற இலக்கிய ஜாம்பவான்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் நகுலன். அவரது எழுத்துக்களை 'எழுத்து' பத்திரிகையில் வெளியிட்டு, நகுலனுக்கு ஒரு தனித்த அடையாளத்தை ஏற்படுத்தித் தந்தவர் சி.சு. செல்லப்பா. க.நா.சு.வும் நகுலனின் எழுத்துக்களை ஆதரித்து வெளியிட்டிருக்கிறார். நகுலனின் படைப்புகளில் 'நினைவுப் பாதை', 'நவீனன் டைரி', 'நிழல்கள்', 'நாய்கள்', 'வாக்குமூலம்' போன்றவை குறிப்பிடத் தகுந்தவை.

நகுலனின் 'கோட் ஸ்டாண்ட் கவிதைகள்' தொகுப்பு, தமிழ்க் கவிதையுலகின் குறிப்பிடத்தக்க கவிதைகளுள் ஒன்று. 'சுருதி' உட்படப் பல்வேறு கவிதைகளை அவர் படைத்துள்ளார். அவரது 'எழுத்து' கவிதைகள், 'இரு நீண்ட கவிதைகள்' போன்றவை மனித மனத்தின் குழப்பம், ஏக்கம், இருண்மை என்பனவற்றைப் பாடுபொருளாகக் கொண்டவையாகும். ஆங்கிலத்திலும் ஐந்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ள நகுலன், மகாகவி பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. நகுலனின் படைப்புக்களில் முக்கியமானது 'குருக்ஷேத்திரம்' என்னும் தொகுப்பு நூல். அது தமிழில் ஒரு முன்மாதிரி முயற்சி என்று பாராட்டுகிறார் அசோகமித்திரன்.

கனடாவின் மிக உயரிய விருதான 'விளக்கு விருது' நகுலனுக்குக் கிடைத்தது. கேரள அரசின் 'ஆசான் விருது' (1981) அவருக்கு வழங்கப்பட்டது. நகுலனின் சகோதரி 'திரிசடை'யும் ஒரு கவிஞர்தாம். நகுலன் சில ஆண்டுகளாகவே மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

'நான் இறந்த பிறகு எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த வேண்டாம். ஏனென்றால், என்னால் வரமுடியாது' என்று நண்பர்களிடம் சொல்வாராம் நகுலன். அவருடைய கவிதைகள் வருமே!

அரவிந்த் சுவாமிநாதன்

© TamilOnline.com