இலங்கை தமிழர்களுக்கு இந்தியா உதவி!
இலங்கையில் சிங்கள ராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடை பெறும் போரில் அப்பாவி தமிழர்கள் பலர் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டு வருகின்ற சூழலில் இலங்கை அதிபர் ராஜபட்சய இந்தியாவிற்கு வருவதை தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் வன்மையாக கண்டித்துள்ளன.

குறிப்பாக ம.தி.மு.க, பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தை போன்ற கட்சிகள் இலங்கை அதிபரின் இந்திய வருகைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

முன்னதாக இலங்கை அதிபர் ராஜபட்சய வின் இந்திய வருகையை கண்டித்து சென்னையில் உள்ள அந்நாட்டு துணைத் தூதரகம் முன்பு ம.தி.மு.க தலைவர் வைகோ ஆர்ப்பாட்டம் ஒன்றை கடந்த 18ம் தேதி (நவம்பர்) நடத்தினார். மத்திய, மாநில ஆட்சியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி இலங்கை அதிபர் இந்தியா வருவதைக் கண்டித்து தமிழகத்தில் பந்த் நடத்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு யோசனை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோவுக்கு தமிழக அரசு அனுமதி தர மறுத்ததற்கு ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் முதல்வர் கருணாநிதி இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு யாழ்பாண தமிழர்களுக்கு இந்திய அரசு உதவ வேண்டும் என்று கடிதம் எழுதினார்.

இதனைத் தொடர்ந்து இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், மனிதாபிமான அடிப்படையில் 5,200 டன் அரிசி, 1,500 டன் சர்க்கரை மற்றும் 300 டன் பால் பவுடர் ஆகியவற்றை அனுப்பி வைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். மேலும் மக்கள் மீதான தாக்குதலை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இது தொடர்பாக இலங்கை அதிபரின் இந்திய வருகையின் போது வலியுறுத்தப்படும் என்று பிரதமர் கூறினார்.

மத்திய அரசின் இந்த முடிவை தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் வரவேற்றன. ஆனால் இலங்கை அரசு மூலமாக, இத்தகைய உதவிகள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களைச் சென்ற டையும் என்பது கேள்விகுறியதாகும் என்றும், எனவே மனிதாபிமான அடிப்படையில் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா அனுப்பும் உணவு பொருள்களை செஞ்சிலுவை சங்கம் மூலம் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க பொதுசெயலரும் எதிர்கட்சி தலைவருமான ஜெயலலிதா, மதிமுக பொதுச்செயலர் வைகோ, நெடுமாறன், திருமாவளவன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் புலிகள் ஆதிக்கம் மிக்க பகுதிகளில் இலங்கை விமானப்படை விமானங்கள் குண்டு வீசி தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத் தக்கது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com