ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்
நம்மில் பலருக்கு ஏற்படும் இந்த வகை ஆர்த்ரைடிஸ் எல்லா வித மூட்டுகளையும் தாக்க வல்லது. குறிப்பாக முட்டி, இடுப்பு, தோள் மற்றும் கை விரல் முட்டிகளைத் தாக்க வல்லது. தொடர்ந்து செய்யும் வேலைகளால் ஏற்படும் தேய்மானம் மூட்டுகளின் வலிமையைக் குறைப்பதால் இந்த வகை ஆர்த்ரைடிஸ் ஏற்படுகிறது. ஆகையால், வயது அதிகமாக ஆக, இந்த நோய் நம்மைத் தாக்கும் சாத்தியம் அதிகம். ஒரு சிலருக்குக் குளிர் காலங்களில் இந்த ஆர்த்ரைடிஸ் அதிகமாகலாம். இந்த வகை மூட்டு வலிக்கு Tylenol மற்றும் Motrin போன்ற மருந்துகள் நல்ல வலி நிவாரணம் தரக்கூடியன. வலி நிவாரண மருந்துகளுடன், தொடர்ந்து செய்யும் உடற் பயிற்சி மூலம் (Physical therapy) இந்த மூட்டு வலிக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க இயலும். 'என்னால் முடியவில்லை' என்ற அலுப்பும் சோர்வும் இதை அதிகமாக்கிவிடும். தொடர்ந்து செய்யும் பயிற்சியே மூட்டுகளுக்கு வலிமை தரும்.
இந்த ஆர்த்ரைடிஸ் முற்றிய நிலையில், மூட்டுகளில் ஸ்டீராய்டுகளை ஊசி மூலம் செலுத்துவதுண்டு. இந்தச் சிகிச்சையை முதன்மை மருத்துவரோ அல்லது மூட்டு நிபுணரோ அளிக்க முடியும். அப்படிச் செலுத்தும் ஊசி மருந்து மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு நிவாரணம் தரும். அதையும் மீறி நோய் முற்றினால், மூட்டு மாற்று (Joint replacement) அறுவை சிகிச்சை அளிக்கப்பட வேண்டி வரலாம். இதை orthopedicians செய்வர். இந்த அறுவை சிகிச்சை அவசியம் என்று மருத்துவர் சொன்னால், அதை ஒத்திப் போடாமல், உடனே செய்வது நல்லது. ஒருவரின் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிற நோய்கள் அதிகமாவதற்குள் இந்த அறுவை சிகிச்சையைச் செய்வது நல்லது. இதற்கு முன், முதன்மை மருத்துவரை ஆலோசித்து, pre operative clearance என்ற முறையில் பல பரிசோதனைகள் தேவைப்படலாம். அறுவை சிகிச்சைக்குப் பின்னரும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மிக அவசியம். இதை செய்யத் தவறினால், அறுவை சிகிச்சை செய்ததே வீணாகிவிடும் போகும் அபாயம் உள்ளது.
இந்த வகை ஆர்த்தரைடிஸ் நோய் வரமால் காப்பதும் நம் கையில் உள்ளது. செய்யும் வேளைகளை, மூட்டுக்கு பாதிப்பு அதிகம் ஏற்படாமல் செய்ய முயல வேண்டும். உதாரணத்திற்கு, குனிந்து செய்ய்யும் வேலைகளை உட்கார்ந்து செய்ய வேண்டும். ஒரே மாதிரியாக அதிக நேரம் அமர்ந்திருக்காமல் அடிக்கடி நம் இருப்பை மாற்றிக் கொள்ள வேண்டும். உடல் பருமனை குறைக்க வேண்டும். கூடுமானவரை நடக்க வேண்டும். வேகமாக நடக்க முடியாது போனாலும், ஒரே சீரான வேகத்தில் நடக்க வேண்டும். இப்படி செய்யும் தினப்படி பயிற்சிகளின் மூலம் மூட்டுகளை கவனமாக பார்த்துக் கொள்ள முடியும். இதையும் மீறி இந்த ஆர்த்ரைடிஸ் தாக்கினால், மருத்துவரின் ஆலோசனைப்படி Physical therapy செய்வதன் மூலம் நோய் முற்றாமல் தவிர்க்க முடியும். வலி நிவாரண மருந்துகளை விடவும், உடற் பயிற்சியே இந்த நோய் முற்றுவதை தவிர்க்க வல்லது.
முதுகு வலி
மேற்கூறிய osteo arthritis முதுகையும் தாக்க வல்லது. எப்போதும் நிமிர்ந்து நிற்பதும் அமர்வதும் முதுகைப் பாதுகாக்க உதவும். முதுகுத் தண்டு பாதிக்காமல் இருக்க சில உடற்பயிற்சிகளும் சரியான இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வகை தவிர்ப்பு முறைகளையும் மீறி முதுகு வலி ஏற்பட்டால், முடிந்த வரை நடமாடுவதே நல்லது. உடலுக்கு நலம் ஏற்படுவதாக எண்ணி, சோர்ந்து படுப்பது, மூட்டுக்களை இறுக்கமாக்கிவிடும். அதிக நேரம் வாகனத்தில் பயணிப்பவர்கள் முதுகுத் தண்டு பாதிக்கப்படாமல் இருக்க பட்டை (soft collar) அணியலாம். Spondylolysis என்று சொல்லப்படும் தேய்மானம் இந்த வகையைச் சார்ந்தது. இதற்கும் தொடர்ந்து செய்யும் உடற்பயிற்சியும், சரியான உடல் வைப்புமுறையும் வலி நிவாரண மருந்துகளை விட உயர்ந்தது.
ஆஸ்டியோபோரோஸிஸ்
வயதாக ஆக எலும்புகளைத் தாக்கும் இந்த நோய் குறிப்பாக மாதவிடாய் நின்ற மகளிரைத் தாக்கும். எலும்பு முறிவு ஏற்படுவதற்கு இந்த நோய் முக்கியக் காரணமாக உள்ளது. இந்த நோயைத் தவிர்க்க வைடமின் D மற்றும் கால்சியம் உதவுகிறது. அதையும் மீறி நோய் ஏற்பட்டால் அதற்கு Fossamax போன்ற மருந்துகள் உதவுகின்றன. இந்த வகை நோய் வராமல் இருக்கவும் தொடர்ந்து செய்யும் உடற்பயிற்சி உதவுகிறது.
ரூமடாயிடு ஆர்த்ரைடிஸ்
மூட்டு வலி வந்தாலே அது ரூமடாயிடு ஆர்த்ரைடிஸ் என்று எண்ணி பயப்படுவோர்கள் உண்டு. எல்லா மூட்டு வலியும் ரூமடாயிடு அல்ல. ஆனால் ஒரு சிலருக்கு ஏற்படும் ஆர்த்தரைடிஸ் ரூமடாயிடாக இருக்கலாம். பெரிய மூட்டுகளாகிய முட்டி, தோள், சிறிய மூட்டுகளாகிய கை விரல் மூட்டு போன்றவை ரூமாடாயிடு வியாதியில் தாக்கப்படலாம். காலையில் எழுந்தவுடன், ஒரு மணி நேரம் வரை இந்த மூட்டுகள் இறுகி காணப்படும். நேரம் ஆக ஆக, இறுக்கம் தளர்ந்து, வலி குறையலாம். வேலை செய்யச் செய்ய, இறுக்கமும், வலியும் குறையும். மேலும், எக்ஸ் கதிர் படம் மூலம் மூட்டுகள் தேய்மானத்தை அறியலாம். இந்த வகை மூட்டு வலி நாள் ஆகஆக வலி அதிகமாகும் சாத்தியம் உள்ளது. முதலில் Motrin, Advil போன்ற மருந்துகள் இந்த வலிக்கு நிவாரணம் செய்யும். போகப் போக இந்த மருந்துகள் வேலை செய்யாத அளவுக்கு வலி அதிகமாகும். தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு மேல் வலியும் இறுக்கமும் இருக்குமேயானால், இந்த வகை மூட்டு வலி ரூமடாயிடு வலியாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. குடும்பத்தில் இந்த வகை மூட்டு வலி ஒருவருக்கு இருக்குமேயானால், மற்றவர்களுக்கும் ஏற்படவும் சாத்தியக்கூறுகள் உள்ளன.
நோயைக் கண்டுபிடிக்கும் முறைகள்:
1. மேற்கூறியபடி தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு வலியும் இறுக்கமும் ஏற்படுதல் 2. எக்ஸ் கதிர் படத்தில் தேய்மானம் தென்படுதல் 3. இரத்தப் பரிசோதனையில் ரூமடாயிடு காரணியின் அளவு அதிகமாக இருத்தல் 4. தோலில் சில கட்டிகள் ஏற்படுதல். (rheumatoid nodules)
இது போன்ற அறிகுறிகளை வைத்து மருத்துவர்கள் இந்த நோயைக் கண்டுபிடிப்பர். இதற்கு பல புதிய மருந்துகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. மூட்டு வலி நிபுணராகிய 'Rhuematologist' மூலம் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் சிகிச்சை மூலம், இந்த நோய் மூட்டுகளில் நிரந்தர பாதிப்பு ஏற்படுத்துவதை தவிர்க்க முடியும்.
ஆகவே உங்களின் மூட்டுகளையும், எலும்புகளையும் காப்பதற்கு மருந்துகள் வேண்டாம். மருத்துவர் வேண்டாம். அறுவை சிகிச்சை வேண்டாம். உடற்பயிற்சி ஒன்றே போதும். வருமுன் காப்போம். வந்த பின்னும் காப்போம். மேலும் விவரங்களுக்கு www.apta.org என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
மரு. வரலட்சுமி நிரஞ்சன் |