முன்னாள் தொலைக்காட்சி இயக்குநர் ஏ. நடராசன்
அகில இந்திய வானொலியிலும், தொலைக்காட்சியிலும் உயர்பதவிகளை வகித்தவர் ஏ. நடராசன். சிறந்த கலாரசிகர். நாதஸ்வர மாமேதை நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்களின் மாப்பிள்ளை. நல்ல எழுத்தாளர். சிறுகதைகள், நாவல்கள் எழுதியவர். ஓய்வுபெற்ற பின்பும் தமிழகத்தின் கலை இலக்கியச் செயல்பாடுகளோடு தன்னைப் பிணைத்துக் கொண்டவர்.

அவருடன் ஓர் சந்திப்பு...

கே: இளைஞர்களின் இலட்சியக் கனவு அரசாங்கப் பணிதான். அரசாங்கப் பணி கிடைத்தும் அதை உதறிவிட்டு வானொலி நிலையத்துக்குள் நீங்கள் நுழையக் காரணம் என்ன?

ப: என்னுள் தகித்துக் கொண்டிருந்த படைப்பார்வம். கல்லூரிப் படிப்பை 1959-ல் முடித்தேன். 1960-ல் தலைமைச் செயலகத்தில் அரசுப் பணி கிடைத்தது. சேர்ந்தேன். கூடவே வானொலிக்கும் விண்ணப்பித்திருந்தேன். என்னுள் இருந்த கலை, இலக்கிய ஆர்வத்துக்கு வடிகால் ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தேன். வானொலியில் பணி கிடைத்தது. அரசு வேலையை ராஜினாமா செய்தேன்.

கே: பல்வேறு வானொலி நிலையங்களில் பணியாற்றியிருக்கிறீர்கள். வானொலி நிலையங்களின் வளர்ச்சிக்கு நீங்கள் ஆற்றிய பணிகள் பற்றி...

ப: நான் பணியாற்றிய வானொலி நிலையங்களுன் வளர்ச்சிக்கு என்னுடைய பங்களிப்பு என்ன என்பதை நானே சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. அது காலம் சொல்ல வேண்டிய ஒன்று அல்லது புள்ளி விவரங்கள் புரிய வைக்க வேண்டிய ஒன்று.

வானொலி தொலைக்காட்சி அல்லது வேறு எந்த ஊடகமாக இருந்தாலும் அது ஒரு கூட்டு முயற்சி. அரசு இலாகாக்களில் விதிமுறைகள், மரபுகள் போட்டு வைத்துள்ள வட்டத்துக் குள்ளேதான் சுற்றி வர வேண்டும். என் அனுபவத்தில் அந்த வட்டமே சற்றுப் பெரிய வட்டம்தான் என்பதை நான் உணர்ந்தேன். அதிலும் வானொலியில் சுதந்திரம் அதிகம். ஒரு கலைஞருக்கு ஒப்பந்தம் அனுப்பி அவர் அதை ஏற்று அதைக் கையெழுத்திட்டுத் திருப்பி அனுப்பி, பின்னர் ஒலிப்பதிவு நாளன்று வந்து தன் பணியைச் செய்துவிட்டுத் திரும்பும்போது ட்யூட்டி ரூமில் செக் ரெடியாக இருக்கும். அதை வாங்கிக் கொண்டு அவர் போய்விடலாம்.

நான் இயங்கிய விதம் சற்று வேறானது. உதாரணமாக நா. பார்த்தசாரதி ஓர் ஒலிப்பதிவுக்கு வருகிறார் என்றால் வாயிலில் நின்று வரவேற்பேன். விருந்தினர் அறையில் அமர வைத்து அவரது படைப்புகள் பற்றி விவாதிப்பேன். ஒலிப்பதிவு அறைக்கு அழைத்துச் செல்வேன். பதிவு முடிந்ததும் அவருக்குக் காசோலை பெற்றுத் தந்து வழியனுப்பி வைப்பேன். இப்படிச் செய்தாக வேண்டும் என்று எந்த அரசு விதியும் வற்புறுத்தவில்லை. நான் செய்தேன். விளைவு, எனக்கு நட்புக் கிடைத்தது. இதை நான் ஓர் உதாரணத்துக்காக மட்டுமே சொன்னேன்.

கே: திருச்சி வானொலி நிலையத்தில் நீங்கள் பணியாற்றியபோது தயாரித்த 'சிறுவர் கண்ட சிவனடியார்' நிகழ்ச்சிக்கு தமிழகத்தின் பல ஊர்களில் பாராட்டு விழா நடைபெற்றதாகச் சொல்வார்கள். ஒரு வானொலி நிகழ்ச்சி இந்த அளவுக்கு மக்களைச் சென்றடைந்து, வெற்றி பெற்றது எப்படி?

ப: என் நினைவை விட்டு நீங்காத அனுபவங்களில் அதுவும் ஒன்று. நான் 1963-70 காலகட்டத்தில் திருச்சி வானொலி நிலையத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றினேன். எம்.எஸ். கோபால் அவர்கள் நிலைய இயக்குனர். நிகழ்ச்சி களைப் புதுமையாக வடிவமைத்து அவரிடம் சொன்னால் அதற்கு உடனே ஒப்புதல் கிடைப்பது நிச்சயம். இளைஞர்களை ஊக்குவிப்பார்.

அப்போது என். ராகவன் என்று நிலைய எழுத்தாளர் ஒருவர் இருந்தார். அருமையான கவிஞர், சிறந்த அனுபவசாலி, துறைவன் அவர்களுக்கு நெருங்கிய நண்பர். அவர் 63 நாயன்மார்கள் பற்றி வாரம் ஒரு நாயனார் என்று குழந்தைகளுக்கு ஏற்றவாறு இசை நாடகம் ஒன்றை எழுதித்தர நான் அதைத் தயாரித்தேன். 'சிறுவர் கண்ட சிவனடியார்' என்ற தலைப்பில் ஒவ்வோர் அடியார் பற்றியும் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் முன்னுரையுடன் அந்த இசை நாடகம் ஒலிபரப்பானது. நிகழ்ச்சி பெரும் வர வேற்பைப் பெற்றது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் இயங்கி வந்த ஆன்மிக, கலாசார அமைப்புகள் நிலைய இயக்குனரை யும், வாரியார் சுவாமிகளையும் ஊர்வலமாக அழைத்துச் சென்று பாராட்டுவிழா நடத்திய அளவுக்கு வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சியாக அமைந்தது. தயாரிப்பாளர் என்ற முறையில் எனக்களித்த மகிழ்ச்சியை அளவிட முடியாது.

கே: நீங்கள் வானொலியில் துறைவன், சுகி சுப்பிரமணியம், மீ.ப. சோமு போன்ற ஜாம்பாவான்களுக்கு மத்தியில் பணி யாற்றிய அனுபவத்தைப் பற்றி...

ப: 1963-ல் நான் திருச்சி வானொலி நிலையத்தில் பணிக்குச் சேர்ந்தேன். அப்போது துறைவன் அவர்கள் நாடகம்/சித்திரம் ஆகிய நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர். சீனப்போர் பற்றி ஒரு சித்திரம் எழுதித் தருமாறு சொன்னார். அன்று இரவு நான் அதை எழுதி மறுநாள் கொண்டு போய்க் காட்டினேன். படித்துப் பார்த்ததும் அவர் கேட்ட கேள்வி 'எதைப் பார்த்து எழுதினே?' என்பதுதான். 'நான்தான் சார் எழுதினேன்' என்றேன். 'அப்படியா?' என்றவர், வேறொரு தலைப்பு தந்து 'இங்கேயே எழுதிக்காட்டு' என்றார். செய்தேன். 'நல்லாதான் எழுதறே' என்று பாராட்டினார். வானொலியைப் பெறுத்தவரை அவர்தான் என் குரு. தன் கவிதைத் தொகுதியில் முன்னுரையில் அவர் எனக்கும் நன்றி தெரிவித்திருப்பது அவரது பெருந்தன்மைக்கு எடுத்துக் காட்டு.

சுகி சுப்பிரமணியம் அவர்களுடன் பணி புரிந்தது பயனுள்ள அனுபவம். கண்டிப் பானவர், நேரம் தவறாதவர். வாழ்க்கை நெறிகள் பலவற்றை நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

மீ.ப. சோமு இசை, ஆன்மீகம் பற்றிய விஷயங்களில் ஓர் அத்தாரிட்டி என்றே சொல்லாம். தென்கிழக்கு ஆசிய நேயர் களுக்கான சிறப்பு ஒலிபரப்புக்கு நான் பொறுப்பாளராக இருந்த போது மீ.ப. சோமு தினமும் சில நிமிடங்கள் அந்தச் சிறப்பு ஒலிபரப்பில் உரையாற்றினார். மைக்கை எப்படி இயல்பாகவும், திறமையாகவும் கையாள்வது என்ற பாடத்தை அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

கே: எழுத்துலகில் உங்கள் பங்களிப்பு என்ன?

ப: நானூறு சிறுகதைகள், இருபது நாவல்கள். 'சொன்னது நீதானா?', 'பெண் என்னும் புதிர்' என்ற நாவல்கள் தமிழக அரசின் பரிசையும், 'கல்யாண வசந்தம்' என்ற நாவல் ஜி.வி., வி.ஜி.பி. நிறுவனங்களின் பரிசையும் பெற்றன. என் எழுத்துக்களைப் படித்துவிட்டு பலர் நேரிலும், கடிதம், தொலைபேசி மூலமாகவும் இன்றும் பாராட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது. 'இரயில் சினேகம்' என்ற என்னுடைய கதையை இராணி மேரி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்.ஏ. படிக்கும் மாணவி ஒருவர் தனது எம்ஃபில் பட்ட ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்.

கே: திருக்குறள் மேல் உங்களுக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்படக் காரணம்?

ப: பள்ளிப் பருவத்திலேயே குறள் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அப்போதெல்லாம் 'நீதி போதனை' வகுப்பு என்று ஒன்று உண்டு. அதில் திருக்குறளுக்கு முக்கியத்துவம் தந்தார்கள். நானும் என் நண்பனும் சைக்கிளில் பள்ளிக்கூடத்துக்குப் போகும் போது என் நண்பன் மனப்பாடமாகத் திருக்குறள்களைச் சொல்வான். வீடு திரும்பும்போது நான் சொல்வேன். எனக்குக் கிட்டத்தட்ட 800 குறட்பாக்கள் மனப்பாடம். திருக்குறள் முனுசாமியார் அவர்களோடு ஏற்பட்ட நட்பு என் ஈடுபாட்டை அதிக மாக்கியது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com