தொடரும் முல்லைபெரியாறு சர்ச்சை!
கடந்த 16ம் தேதி (நவம்பர்) தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பெரியாறு அணையை பார்வையிட சென்றார். அணையை பார்வையிடச் சென்ற அமைச்சருக்கு எதிராக கேரள மாநிலத்தின் குமுளி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சந்திரன் தலைமையில் திரண்டிருந்த கேரள மக்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இச்செயலுக்கு தமிழக அரசு சிறு கண்டனம் கூட தெரிவிக்காததற்கு எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பெரியாறு அணை பிரச்சனையில் நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்துவதுதான் சரியான தீர்வு என்றும் கூறியுள்ளார். கேரள மக்களின் செயலுக்கு ம.தி.முக. பொதுச்செயலர் வைகோ வன்மையாக கண்டித்தது மட்டுமல்லாமல் இந்தியாவின் ஒருமைப்பாட்டை காக்க, கேரள அரசின் போக்கை மத்திய அரசு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத் துக்கு உள்ள உரிமையை விட்டுத் தரக்கூடாது என்றும் கூறினார்.

இப்பிரச்சினைத் தொடர்பாக தில்லியில் தமிழக மற்றும் கேரள அமைச்சர்கள் மத்திய அரசு முன்னிலையில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

ஆளும் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி பெரியாறு அணை தொடர்பாக கேரள எல்லையில் அமைந்துள்ள கூடலூரில் போராட்டம் ஒன்றை நடத்தியது. இப்போராட்டத்தில் அக்கட்சி நிறுவனரும், தலைவருமான டாக்டர் இராமதாஸ் மற்றும் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட இராமதாஸ், ஓபெரியாறு அணை பிரச்சினை தீரும் வரை எங்கள் போராட்டம் தொடரும்' என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அணையை பார்வையிட வந்த கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் மத்திய அமைச்சரவை முன்னிலையில் நடைபெறவிருக்கும் பேச்சுவார்தையில் சுமுகத் தீர்வு ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.அப்போது அவர் பத்திரிகையாளர்களிடையே பேசுகையில், முல்லைப் பெரியாறு அணை மூலம் மின்சார உற்பத்தியை அதிகரித்து பணம் சம்பாதிக்கவே தமிழக அரசு முயற்சி செய்கிறது..'' என்று தமிழக அரசை குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. கேரள முதல்வரின் இக்குற்றச்சாட்டை தமிழக மீன்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி வன்மையாக மறுத்தார்.

அணைப்பகுதியில் பெய்யும் தொடர் மழையின் காரணமாக முல்லைபெரியாறு அணையிலிருந்து வெளியேறி வீணாகும் நீரைத் தேக்கி 142 அடிவரை நீர்மட்டத்தை உயர்த்த உடனடியாக நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க பொதுச்செயலரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜெயலலிதா வலியுறுத்தி யுள்ளது மட்டுமல்லாமல் தற்போதுள்ள தி.மு.க தலைமையிலான கூட்டணி அரசு கேரளத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கு நோகாத வகையில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி பிரச்சினையை நீர்த்துப் போக செய்துள்ளது என்று காட்டமாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில் தமிழக முதல்வர் கருணாநிதி, பெரியாறு அணையை கேரள கடற்படை குழு சோதனையிடுவது குறித்து பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அவசர கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அக் கடிதத்தில் பெரியார் அணையை கடற் படையினர் பார்வையிடுவது போன்ற சட்டவிரோத நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் இச்செயல் கேரள அரசின் அத்துமீறல் செயல் எனவும், முல்லைப்பெரியாறு தமிழகத்திற்கு சொந்தமானது அதை தமிழகம் நன்றாக பராமரித்து வருகிறது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு கேரள அரசு தலைவணங்க மறுப்பதும், அதனை தட்டிக்கேட்க வேண்டிய நிலையில் இருக்கும் மத்திய அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பதும் மத்திய - மாநில அரசுகளுக்கிடையிலான - இந்திய கூட்டாட்சி தத்துவத்தை நீர்த்துப் போக செய்வதற்கே வழிவகைச் செய்கிறது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com