சோ. தர்மன்
நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை வேட்கை தமிழின் உயிர்ப்புச் சரடாகவே மாறிவருகிறது. சமூக நடைமுறையில் கிராமத்து மக்களின் வாழ்வியல் கோலங்கள் அந்த மக்களது மொழியில் பதிவாகிறது. இந்தப் பின்புலத்தில் எண்பதுகளில் கிராமத்து நிகழ்வுகளை விவரணத் தொகுப்பிலிருந்து மீறி வாசகர்களில் வாசிப்புத் தளத்தில் புதுக்கோலம் பூண்டு வரும் எழுத்தாளர் பரம்பரை வெளிப்பட்டது.

இந்த மரபில் வருபவர்தான் எழுத்தாளர் சோ. தர்மன். இவர் கரிசல் மக்களைக் காட்டும் துணிவும் நேர்மையும் மிக்க பரம்பரையின் ஒரு குறியீடாகவே உள்ளார். தமிழில் கரிசல் இலக்கியம் என்று தனியே வகைப்படுத்திச் சிந்திக்கும் போக்கு இயல்பாக உருவானது. கிராமியச் சூழலோடு உருப்பெற்ற கதைகளின் பிறப்பு வேகம் அதிகமானது. இங்கு படைப்பாளிக்கு உரிய நுண்ணுணர்வு பகைப்புலத்தில் சோ. தர்மன் தனக்கான வெளியைக் கண்டடைகின்றார்.

சிறுகதை, நாவல் என புனைகதை மரபில் சோ. தர்மனின் படைப்பாளுமை பன்முகப்பாங்குடன் வெளிப்பட்டது. கதை சொல்லலில் பாசாங்கற்ற நேரடி வாழ்வியல் கூறுகளின் பின்னலாக அந்த மனிதர்களுக்கே உரிய அழகியல், அரசியல் வினைப்பாடுகளாகவும் பதிவாகின்றன. புதிய வாழ்வியல் மதிப்பீடுகளுக்கான கலாசார உணர்திறன் ஆழமாகவே சோ. தர்மனின் படைப்புலகில் மையம் கொள்கின்றது. சிறுகதை எழுத்துக்களில் வெளிப்பட்ட அனுபவம் நாவல் முயற்சிகளில் முதிர்ச்சியாகவே நகர்கிறது.

'தன்னைப் பாதிப்பவைகள், பாதித்தவைகளை சோ. தர்மன் படைப்பாக்குகிறார். கிராமிய வட்டாரங்களைப் பாதிக்கிற உக்கிரமான அல்லது அக்கிரமமான விசயங்கள் - அவைகளில் புதிய புள்ளிகளை, முனைகளை அவர் தேர்வு செய்கிறார். சுற்றுச்சூழல் பாதிப்பு, அதனால் நேரும் நாசக்கேடுகள், சாதி வெறி அதனால் உண்டாகும் கொலை வெறிக் காரியங்கள், தீப்பெட்டிக் கம்பெனிகள், அந்தக் கந்தகக் கிடக்கில் காயும் உயிர்கள்.

அவரைப் பாதிப்பவை அநேகமாக இவையும் இவை சார்ந்தவையும்; கூடுதலாக, குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை. கோவில்பட்டி வட்டாரத்தில் கங்கும் புகையுமாக இந்த வாழ்க்கைதான் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த பூமியை இவை தான் வாட்டுகின்றன. தன் பூமியை வாட்டி வறுத்து எடுப்பவை எவையோ, அவைதாம் அவரையும் எழுதுமாறு அலைக்கழிக்கின்றன' என்பார் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம். இந்த மதிப்பீடு தர்மனின் படைப்புவெளி சார்ந்து வருபவை. இட்டுக் கட்டப்பட்டவை அல்ல குறிப்பாக மனித உறவுகளின் நெருக்கடி நிலை பற்றிய சுயவிசாரணையில் ஈடுபடும் ஒருவருக்கு ஏற்படக்கூடிய அகமன உளைச்சல்கள் சமூகப் பிரச்னைகளின் ஊடாட்டமாகவும் வெளிப்படும். இதைத்தான் சோ. தர்மனின் படைப்புலகு நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகை. ஆனால் கதைக்களம், பாத்திரங்கள், கதையாடல் கதைக்கு கதை புதுமைக் கோலம். இவரது மொழி தமிழுக்கு வளம் சேர்ப்பது. கிராமத்து மக்களின் உயிர்ப்பை எவ்வளவு எழுதினாலும் தகும். நாட்டுப்புறம் இன்னமும் அதற்கேயுரித்தான தமிழ்-தமிழரது வாழ்வியல் சார்ந்த கலசார பன்மைத்துவத்தின் உயிர்ப்பாகவே உள்ளது. அதனது சொல்வளம் வாய்மொழி மரபிலிருந்து எழுத்து மரபுக்கு புதிய அழகியல் பரிமாணமாகவும் அரசியலாகவும் நீட்சி பெறுகிறது. சமூக அக்கறை கொண்ட படைப்பாளியின் உள்மனது இயங்கும் வேட்கை கொள்ளும் மனிதாயப்பாடுகளின் எழுத்துகளாகவே கோவைப்படுகின்றன.

சோ. தர்மன் அடையாளம் காட்டும் மனிதர்கள், வாழ்வியல் மதிப்பீடுகள் புனைகதை மரபில் புதிய செல்நெறிகளாகவே பரிணமிக்கின்றன.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com